Election bannerElection banner
Published:Updated:

``அரசியல்வாதிகளை நம்புவோம்; ஆனா, விஞ்ஞானிகளை நம்ப மாட்டோம்ல?'' - தடுப்பூசி குறித்து நடிகை லட்சுமி!

Lakshmi
Lakshmi ( Photo: Vikatan / Balaji. G )

மூத்த குடிமக்களான சில நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிலரிடம் அந்த அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்தவுடன் சிலர் போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பலர் தயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மூத்த குடிமக்களான சில நடிகைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிலரிடம் அந்த அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

``ஏமாத்துற அரசியல்வாதிகளை நம்புவோம்; தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகளை நம்ப மாட்டோம்?''

நடிகை லட்சுமி பேசுகையில், ``இதுக்கு முன்னாடியும் நாம எல்லாரும் டைஃபாய்டு காய்ச்சல் வராம இருக்கிறதுக்கும் அம்மை போடாம இருக்கிறதுக்கும் தடுப்பூசி போட்டுக்கிட்டிருக்கோம்தானே. இப்போ கொரோனா தடுப்பூசிக்கு மட்டும் ஏன் பயப்படணும்? தேவையில்லாத பயத்தை சிலர் கிளப்பி விட்டுக்கிட்டிருக்காங்க, அவ்வளவுதான். சீனியர் சிட்டிசன்களுக்கு தடுப்பூசி போட ஆரம்பிச்சதுமே நானும் என் கணவரும்தான் முதல் ஆளா போய் தடுப்பூசி போட்டுக்கிட்டோம். தடுப்பூசி போட்டு எனக்கு எந்தப் பிரச்னையும் வரலை. உடனே சினிமா இண்டஸ்ட்ரியில இருக்கிற என் நண்பர்கள் எல்லாரையுமே தடுப்பூசி போட்டுக்கச் சொன்னேன். அடுத்தகட்டமா என் வீட்டுல வேலை பார்க்கிறவங்களையும் கூட்டிட்டுப்போய் தடுப்பூசி போடப் போறேன். நமக்காக இல்லைன்னாலும் மத்தவங்களுக்காகத் தடுப்பூசி போட்டுக்கிட்டுத்தான் ஆகணும். ஏன்னா, நாம ஏசிம்டமேட்டிக்கா இருந்தா மத்தவங்களுக்குப் பரப்பி விட்டுடுவோம் இல்லையா'' என்று அக்கறையாகப் பேசியவர், ``அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம் நம்மளை ஏமாத்த வர்ற அரசியல்வாதிகளை நம்புவோம். ஆனா, நமக்காக இரவு பகலா கஷ்டப்பட்டு தடுப்பூசி கண்டுபிடிச்ச விஞ்ஞானிகளை நம்ப மாட்டோம்ல?'' என்றார் சற்று கோபமாக.

``அந்த பயம் வெறும் சைக்காலஜிக்கல் பிரச்னை.''

குட்டி பத்மினி
குட்டி பத்மினி

அடுத்து பேசியவர் குட்டி பத்மினி. ``தடுப்பூசிப் போட்ட அன்னிக்கு ஈவ்னிங் வரைக்கும் நான் நார்மலாதான் இருந்தேன். அதுக்கப்புறம் வாய் உலர்ந்துபோன மாதிரி ஃபீல் பண்ணேன். அதுகூட எல்லாரும் தடுப்பூசி பத்தி நெகட்டிவ்வா பேசறதால வந்த சைக்கலாஜிக்கல் பிரச்னைன்னுதான் நினைக்கிறேன். என் தங்கைக்கு மட்டும் உடம்பு வலி இருந்துச்சு. காய்ச்சலும் இருந்ததா சொன்னாள். இந்த பேண்டெமிக் நேரத்துல உயிரோட இருக்கணும்னா தடுப்பூசி போட்டுதான் ஆகணும்'' என்றார்.

``லட்சுமிதான் தைரியம் கொடுத்தாங்க.''

சச்சு
சச்சு

``நான், வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜஶ்ரீன்னு என்னோட பேட்ச் ஆக்டர்ஸ் எல்லாருமே தடுப்பூசி போட்டுக்கிட்டோம். லட்சுமிதான் எங்க எல்லாருக்கும் முதல்ல தைரியம் கொடுத்தாங்க. தடுப்பூசி போட்ட அன்னிக்கு எனக்கு கொஞ்சம் சோர்வா இருந்துச்சு அவ்வளவுதான். அன்னிக்கு ஒருநாள் எங்கேயும் வெளியே போகாம வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்தேன். இப்போ, எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார் நடிகை சச்சு.

``ஊசி போட்ட மாதிரியே தெரியலை.''

சாரதா
சாரதா
கோவிட்-19: `இதனால்தான் 2-வது டோஸ் தடுப்பூசி மிகவும் முக்கியம்!' - விளக்கும் மருத்துவர்

இவரைத் தொடர்ந்து பேசிய நடிகை சாரதா, ``ஊசி போட்ட மாதிரியே இல்லம்மா. உங்களுக்குத் தடுப்பூசி போட்டேன்னு யாராவது சொன்னாதான் நம்ப முடியும்கிற அளவுக்கு நான் நார்மலா இருக்கேன்'' என்று சிரிக்கிறார்.

``ஊசி போட்டுக்கிறதுதான் பாதுகாப்பு.''

லதா, ஶ்ரீபிரியா
லதா, ஶ்ரீபிரியா
CoWIN-ல் பதிவு செய்யாதவர்களும் தடுப்பூசி பெறுவது எப்படி? - ஒரு வழிகாட்டல்

``நானும் ஶ்ரீபிரியாவும் ஒண்ணா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். எனக்கு லேசா உடம்புவலி மட்டும்தான் இருந்துச்சு. மத்தபடி, எனக்கு எந்த அசெளகர்யமும் ஏற்படலை. எந்தத் தடுப்பூசி போட்டாலும் கொஞ்சம் காய்ச்சலடிக்கும், தூக்கம் வரும். உடம்புல சின்னச் சின்ன ரியாக்‌ஷன் வரத்தான் செய்யும். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடற அன்னிக்கு குழந்தைங்க அழுதுகிட்டு அசெளகர்யமாதானே இருப்பாங்க. அந்த மாதிரிதானே நமக்கும் நடக்கும். இது பேண்டெமிக் நேரங்கிறதால பயத்தைக் கிளப்பி விட்டுட்டாங்க. கொரோனா இரண்டாவது அலை வந்திடுச்சுன்னு சொல்றாங்க. இளைஞர்களுக்கும் கொரோனா பரவ ஆரம்பிச்சிடுச்சு. அதனால, தடுப்பூசி போட்டுக்கிறதுதான் பாதுகாப்பு'' என்கிறார் நடிகை லதா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு