பாலிவுட் நடிகையான யாமி கவுதம் தன்னுடைய சமூக வலைதளங்களில் அண்மையில் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்களில் அவருடைய முகத்தில் மிகவும் சிறிய அளவிலான புடைப்புகள் (Face bumps) இருந்தன. அந்தப் புகைப்படங்களுக்குக் கீழ் அவர் இவ்வாறு பதிவிட்டிருந்தார்

``நான் சமீபத்தில் சில புகைப்படங்கள் எடுத்தேன். வழக்கமாக அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடும் முன் என்னுடைய முகத்தில் `கெரோடொசிஸ் பைலாரிஸ்' (Keratosis Pilaris) என்னும் சருமப் பிரச்னை காரணமாக ஏற்பட்டுள்ள குட்டி குட்டி புடைப்புகளை மறைத்துவிட்டுப் பதிவிடுவேன். ஏன் புகைப்படங்களை அப்படியே பதிவிடக்கூடாது என திடீரென தோன்றியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகெரடோசிஸ் பைலாரிஸ் என்பது ஒருவகையான சருமப் பிரச்னை. சருமத்தில் பொரிப்பொரியாக குட்டி குட்டி புடைப்புகளை உண்டாக்கும். டீன் ஏஜ் முதலே எனக்கு இந்தப் பிரச்னை உள்ளது. இதற்கு சரியான தீர்வு கிடையாது. நான் ஏற்கெனவே பல ஆண்டுகாலம் இந்த சருமத் தோற்றத்தோடு வாழ்ந்துள்ளேன்.
இது குறித்த பயம் அனைத்தையும் போக்கிவிட்டு அப்படியே தைரியத்தோடும் முழுமனதுடனும் என்னுடைய சருமத்தை ஏற்றுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

கெரடோசிஸ் பைலாரிஸ் என்றால் என்ன, இது யாரையெல்லாம் பாதிக்கும் என்று சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரனிடம் கேட்டோம்.
``கெரடோசிஸ் பைலாரிஸ் என்பது ஒருவருக்கு நீண்ட காலம் இருக்கக்கூடிய சருமப் பிரச்னை. இந்தப் பிரச்னை உடையவர்களின் சருமம் சொரசொரப்பாக குட்டி குட்டி புடைப்புகளுடன் காட்சி அளிக்கும். இந்த நிலையை `சிக்கன் ஸ்கின்' என்றும் சொல்வதுண்டு. கன்னம், தொடை, பிட்டம், கைகள் போன்ற பகுதிகளில் இது ஏற்படலாம்.
சருமத்தின் இறந்த செல்கள், சருமத்தின் ரோமக்கால்களை (Hair Follicles) அடைப்பதே இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். பொதுவாக குழந்தைப் பருவம் தொடங்கி பதின்பருவம் வரையில் இந்தப் பிரச்னை ஏற்படும். 30 வயதுக்கு மேல் இதன் தீவிரம் சற்று குறையத் தொடங்கும். கருவுற்றிருக்கும் சமயத்திலும் குளிர்காலத்திலும் இந்தப் பிரச்னை உள்ளவர்களின் சருமத்தில் அதிக பாதிப்பு ஏற்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்தச் சமயத்தில் சருமத்தில் நீர் வறட்சி ஏற்படுவதே காரணம். கெரடோசிஸ் பைலாரிஸ் மரபு வழியில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆஸ்துமா, எக்ஸிமா, ஒவ்வாமை உள்ள நோயாளிகளிடமும் அதிகம் காணப்படுகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஷேவிங், வாக்ஸிங், எபிலேஷன் உள்ளிட்ட முடி நீக்கும் முறையைக் கடைப்பிடிக்கும் போது சருமத்தின் நிலை மோசமாகும்.

இந்தப் பிரச்னையுடையவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. அதிக சூடான நீரில் குளித்தால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும். சருமத்தையும் வறண்டுபோகச் செய்யும். இவர்கள் அதிக நேரம் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். பார் சோப்புகள் சருமத்தை வறட்சி ஆக்கும் தன்மை உடையவை என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம். பார் சோப்புக்கு பதில் சாலிசிலிக் ஆசிட் (Salicylic acid) சேர்க்கப்பட்ட பாடிவாஷ் பயன்படுத்தலாம். சாலிசிலிக் ஆசிட் சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவும்.
ஷேவிங், வாக்ஸிங், எபிலேஷன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். சருமத்தை அதிகமாக ஸ்க்ரப் செய்யக் கூடாது. இந்தப் பிரச்னையுடையவர்கள் குளித்து முடித்து மூன்று நிமிடங்களுக்குள் மாய்ஸ்ச்சரைசர் பூசலாம். லிக்விட் பாரஃபின் (Liquid paraffin), கிளிசரின் (Glycerine), யூரியா (Urea) போன்றவை நிரம்பிய மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தலாம். இவை சருமம் வறட்சி அடையாமல் காக்கும்.

கிளைகாலிக் ஆசிட் (Glycolic acid), ரெட்டினால் (Retinol), சாலிசிலிக் ஆசிட் சேர்ந்துள்ள க்ரீம்களை இரவு நேரத்தில் சருமத்தில் புடைப்புகள் உள்ள இடங்களில் பூசலாம். க்ரீம்களை பூசியதும் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். இவை அனைத்தும் சருமத்தில் இறந்த செல்கள் மயிர்க்கால்களை அடைக்காமல் தடுப்பதோடு சருமத்தில் உள்ள சிறிய புடைப்புகளையும் நீக்க உதவும். லேசர் ஹேர் ரிமூவல் (Laser hair removal) மற்றும் மைல்டு கெமிக்கல் பீல் (Mild chemical peel) சிகிச்சையும் எடுக்கலாம். சருமத்தை வறண்டுபோகவிடாமல் நீர்ச்சத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் செல்வி ராஜேந்திரன்.