Published:Updated:

`விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல; இதுவே காரணம்!' - அரசின் இறுதி ஆய்வறிக்கை

தடுப்பூசிக்குப் பிறகான பாதக நிகழ்வுகளை ஆராயும் தேசிய குழுவில் (AEFI) இடம்பெற்றிருந்த மருத்துவ நிபுணர்கள் விவேக் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தபோது பெறப்பட்ட அறிக்கைகளையும் ஆய்வுசெய்து இறுதி முடிவைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

கோவிட்-19 தடுப்பூசியால்தான் நடிகர் விவேக் உயிரிழந்தாரா என்ற சந்தேகத்துக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மாரடைப்பின் காரணமாக, தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் நடிகர் விவேக். அவருடைய உயிரிழப்பு தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காரணம், அவர் உயிரிழப்பதற்கு இரண்டு நாள்கள் முன்பு (ஏப்ரல் 15) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Vaccine
Vaccine
AP Illustration/Peter Hamlin
நடிகர் விவேக் திடீர் மரணம்... தடுப்பூசி சர்ச்சை... உண்மைக் காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

தடுப்பூசி செலுத்தியதும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ``அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தவும் செய்தார்.

இந்நிலையில் ஏப்ரல் 17-ம் தேதி அதிகாலை 4.35 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விவேக் உயிரிழப்பு குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரும், தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனும் அன்றைய தினமே விளக்கமளித்தனர். இருந்தாலும் விவேக் தடுப்பூசியினால்தான் இறந்தார் என்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது. பலர் இந்தக் காரணத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்வதையும் தவிர்த்தனர்.

இந்நிலையில் விவேக் மரணம் தொடர்பான அறிக்கை ஒன்றை தடுப்பூசிக்குப் பிறகான பாதக நிகழ்வுகளை ஆராயும் தேசிய குழு (AEFI) வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் தடுப்பூசி பிரிவின் ஓர் அங்கமாகச் செயல்படும் இந்தக் குழு, விவேக்கின் மரணத்துக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை; இது தற்செயல் நிகழ்வு என்று தெரிவித்துள்ளது.

விவேக்
விவேக்

மேலும் அந்த அறிக்கையில், `59 வயதான விவேக்குக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது. அடைப்பின் காரணமாக இதயத்தால் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போவதால் ஷாக் (Cardiogenic shock) ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அசாதாரண இதயத் துடிப்பும் காணப்பட்டது. இந்தக் காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அவருடைய மரணம் `C' பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, தற்செயல் நிகழ்வு அல்லது ஏற்கெனவே வேறு ஏதாவது உடல்நலக் காரணங்கள் அல்லது வேறு ஏதாவது விஷயங்களுக்கு வெளிப்பட்டதால் ஏற்பட்ட விளைவு (conditions caused by exposure to something) ஏற்பட்டிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விவேக் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய எக்மோ, ஈசிஜி ரிப்போர்ட் உள்ளிட்ட மருத்துவ அறிக்கைகள் மத்திய மற்றும் மாநில AEFI குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆதாரங்களை ஆய்வுசெய்த பின்னர் இரு குழுக்களும் ஒரே முடிவுக்கு வந்துள்ளன.

Corona Vaccine - Representational Image
Corona Vaccine - Representational Image
``கொரோனா பாசிட்டிவ்; இனியும் தடுப்பூசி போடமாட்டேன்!" - அடம்பிடிக்கும் பாலிவுட் நடிகை

தேசிய அளவிலான குழுவில் இதயம், நரம்பியல், நுரையீரல் மருத்துவம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த மருத்துவ நிபுணர்களும் இந்த ஆய்வில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவ நிபுணர்கள் விவேக் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தபோது பெறப்பட்ட அறிக்கைகளையும் ஆய்வுசெய்து இறுதி முடிவைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு விவேக்கின் இறப்பு, தடுப்பூசியால் நிகழ்ந்தது அல்ல... அது தற்செயல் நிகழ்வு என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு