`காயத்ரி மந்திரம் கொரோனாவை விரட்டுமா?' - இதையும் ஆய்வு செய்யும் எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள்

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதுடன் யோக முத்திரையான பிராணாயாமம் பயில்வதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து விரைவாகக் குணமடையவும் அதன் பாதிப்பின் வீரியத்தை பெருமளவில் குறைக்கவும் முடியுமா என்பதே இந்தச் சோதனையின் நோக்கம்.
ரிஷிகேஷில் அமைந்துள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (AIIMS) நிறுவனம் கொரோனாவை ஒரு புதிய கோணத்தில் அணுக இருக்கிறது. இதற்கான மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சிக்குத் தேவையான நிதி உதவியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அளிக்கப்போகிறது.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதுடன் யோக முத்திரையான பிராணாயாமம் பயில்வதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து விரைவாகக் குணமடையவும் அதன் பாதிப்பின் வீரியத்தைப் பெருமளவில் குறைக்கவும் முடியுமா என்பதே இந்தச் சோதனையின் நோக்கம்.
இதற்கான கிளினிகல் ட்ரையல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) மருத்துவப் பரிசோதனை பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மனிதர்களின் மீது நடத்தப்படவிருக்கும் சோதனைகளுக்கு இந்தப் பிரிவின் ஒப்புதல் அவசியம்.

சோதனை திட்டத்தின் கீழ் கொரோனா பாதிப்படைந்த 20 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த நோய்த் தொற்றின் பாதிப்பு மிதமாக இருக்க வேண்டும். இவர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுவார்கள். ஒரு பிரிவில் உள்ளவர்களுக்கு கொரோனா நோய் சிகிச்சை மட்டுமே அளிக்கப்படும். இன்னொரு பிரிவினருக்குச் சிகிச்சையுடன் காயத்ரி மந்திர உச்சாடனமும் பிராணாயாமமும் 14 நாள்களுக்குத் தொடர்ந்து தீவிர பயிற்சியாக அளிக்கப்படும். இதற்கென சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுநர்கள் அழைக்கப்படுவார்கள்.
சோதனை காலத்துக்குப் பின் இரு பிரிவினர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா பாதிப்பின் விளைவாக நோய்வாய்ப்பட்டவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதை நாம் அறிவோம். இதன் தொடர்ச்சியாகப் பல உறுப்புகளும் திசுக்களும் வீக்கம் கொள்கின்றன. அதனால் இந்தப் பாதிப்புகளே சோதனைக்கு அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இதுவரையில் தொற்றின் பாதிப்பிலிருந்து வேகமாக முன்னேற்றம் கொள்வதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்தச் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தச் சோதனை நோய்த் தொற்று எத்தனை நாள்களில் இல்லாமல் போகிறது மற்றும் ஒரு நோயாளி எத்தனை நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற கோணத்திலும் நடக்கப்போகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் துணைப் பேராசிரியராகவும், நுரையீரல் மருத்துவராகவும் பணியாற்றும் மருத்துவர் ருசி துவா என்பவர் இந்தச் சோதனையின் முடிவை ஆராய்ந்து சொல்ல யோகக் கலை ஆராய்ச்சியாளர் ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். நோய்த் தொற்றின் பாதிப்பை உடலில் உள்ள C - reactive protein அளவைக் கொண்டு கணக்கிடும் முறை இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளார். இந்த ஆராய்ச்சிக்கான உதவித்தொகையாக 3 லட்சம் ரூபாயை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அளித்துள்ளதாகக் கூறுகிறார்.
கொரோனா பாதிப்பால் நம் உடலில் பிராணவாயு குறைபாடு ஏற்படுகிறது. காயத்ரி மந்திரம் உச்சரிப்பதால் சுவாசம் மற்றும் மூச்சு இயக்கம் சீராகும். அதே போல் பிராணாயாம பயிற்சியும் சுவாச இயக்கத்தை மேம்படுத்தும். எனவே, இந்தச் சோதனை நிச்சயம் பலனளிக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள்.
எத்தனையோ பார்த்துட்டோம்... இதைப் பார்க்க மாட்டோமா
- லதா ரகுநாதன்