Published:Updated:

கருச்சிதைவு, குறைப்பிரசவம்... காற்று மாசுபாடு நிகழ்த்திக் கொண்டிருக்கும் பயங்கரங்கள்!

காற்று மாசுபாடு பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாலும், முழுமையான தீர்வு என்றைக்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``காற்று மாசுபாடு காரணமாகக் கருச்சிதைவுகள் அதிகரிக்கின்றன'' என்கிற மகப்பேறு மருத்துவர் விஜயா, ``இதுபற்றி ஆய்வுகள் எச்சரித்துக்கொண்டே இருந்தாலும் மக்களிடையே இன்னும் முழுமையான விழிப்புணர்வு வரவில்லை. காற்றில் கலந்திருக்கிற கார்பன் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு போன்றவை கண்ணுக்குத் தெரியாத மாசு என்பதால், கர்ப்பிணியின் சுவாசம் வழியாக உள்ளே போய், ரத்தத்தில் கலந்து, அப்படியே தொப்புள் கொடி வழியாக சிசுவைச் சேதப்படுத்துகிறது. இதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு உறுப்பு குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கலாம். இது கருச்சிதைவைவிட வேதனையான விஷயம்'' என்கிறார் வருத்தமாக.

மகப்பேறு மருத்துவர் விஜயா
மகப்பேறு மருத்துவர் விஜயா

``சில பெண்கள் கருத்தரிப்பார்கள். சிறுநீர்ப் பரிசோதனையில் பாசிட்டிவ் காட்டும். முதல் ஸ்கேனில் கரு தெரியும். ஆனால், அடுத்த ஸ்கேனில் கருவில் இதயத்துடிப்பு இருக்காது. இதயத்துடிப்பு இல்லையென்றால் குழந்தை வளராது. வேறு வழியில்லாமல் கருவை அபார்ஷன் செய்ய வேண்டி வரும். பெண்களின் உடலையும் மனதையும் மிகப்பெரிய சோர்வுக்குள் தள்ளுகிற பிரச்னை இது.

சில பெண்களுக்குக் காற்று மாசுபாடு காரணமாகக் குறைப்பிரசவம் நடக்கும். அல்லது எடை குறைவான குழந்தை பிறக்கும். கணவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், மேலே சொன்ன அத்தனை பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

Pregnant woman
Pregnant woman
photo created by rawpixel.com - www.freepik.com
Vikatan

உலகின் மோசமான காற்று மாசுபாட்டுடன் இருக்கிற 30 நகரங்களில் 20 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. இந்த நகரங்களில் வசிக்கிற பெண்கள் கருத்தரிப்பது கடினம் என்பது ஒருபக்கம், மறுபக்கம் கருவில் இருக்கும்போது காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது'' என்கிறார் மகப்பேறு மருத்துவர் விஜயா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு