Published:Updated:

உடலில் ஏற்படும் முடக்குகளை தீர்க்கும் அற்புத கீரை; முடக்கறுத்தான்! I மூலிகை ரகசியம் - 11

முடக்கறுத்தான்

முடக்கறுத்தான் ரசமானது, மூட்டுவலியைப் போக்குவதோடு மலக்கட்டையும் நீக்கும். இதன் இலைகளைக் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு லேசான உடல்வலி, சோம்பல் ஏற்படும்போது உபயோகப்படுத்தலாம். இதன் இலைப்பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க, இருமல்கூட விரைவில் நீங்கும்.

உடலில் ஏற்படும் முடக்குகளை தீர்க்கும் அற்புத கீரை; முடக்கறுத்தான்! I மூலிகை ரகசியம் - 11

முடக்கறுத்தான் ரசமானது, மூட்டுவலியைப் போக்குவதோடு மலக்கட்டையும் நீக்கும். இதன் இலைகளைக் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு லேசான உடல்வலி, சோம்பல் ஏற்படும்போது உபயோகப்படுத்தலாம். இதன் இலைப்பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க, இருமல்கூட விரைவில் நீங்கும்.

Published:Updated:
முடக்கறுத்தான்

ஒரு மூலிகையை வைத்து பட்டாசு வெடித்து மாசில்லாத தீபாவளியைக் கொண்டாட முடியுமா..? `என்னது… மூலிகையை வைத்து தீபாவளியா? அதுவும் மூலிகைப் பட்டாசா... என உங்களுக்குள் நீங்கள் பேசிக்கொள்வது கேட்கிறது. முடக்கறுத்தான் எனும் மூலிகையின் காய்களை வைத்து நம்மால் பட்டாசு வெடிக்க முடியும்!

முடக்கறுத்தான்
முடக்கறுத்தான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முடக்கறுத்தான் பட்டாசு

முடக்கறுத்தான் காய்களை கைகளுக்கு இடையில் வைத்து தட்டும்போது, பட்டாசு வெடிப்பதைப்போல `டப்’ என்ற ஒலி உண்டாகும். ஒரு `பிஜிலிவெடி’ வெடிப்பதைப்போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். அக்கால சிறுவர்கள் மத்தியில் `பட்டாசுக்காய்’ என்று முடக்கறுத்தான் காய்க்கு மற்றொரு பெயருண்டு.

உங்களில் யாருக்காவது முடக்கறுத்தான் காய்களை வைத்து பட்டாசு வெடித்த ஞாபகம் இருக்கிறதா? எவ்வித புகையும் இல்லாமல் மாசு ஏற்படுத்தாத சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசு நம்ம முடக்கறுத்தான் பட்டாசு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதியவர்களின் வலி நிவாரணி

உடலில் ஏற்படும் முடக்குகளைத் தீர்க்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் எனும் காரணப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, தனது நலம் கொடுக்கும் மருத்துவக்கூறுகள் மூலம் உடலில் ஏற்படும் முடக்குகளை அறுப்பதால் `முடக்கு அறுத்தான்’ எனப் பெயர்!

கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத்தீர்த்தான், உழிஞை போன்றவை இதன் வேறு பெயர்கள். வாதநோய்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் மூலிகையும்கூட! பிளவுபட்ட இலைகளைக் கொண்டதாய் மெல்லிய தண்டு உடைய கொடி வகையினம் நம் முடக்கறுத்தான்.

வலி நிவாரணி...
வலி நிவாரணி...

`பட்டாசுக்காய்’ என்பதால், முடக்கறுத்தானை ஒலி மட்டுமே எழுப்பும் மூலிகை என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நெடுங்காலமாக வயாதானவர்களுக்கான `வலிநிவாரணி’ மூலிகை இந்த முடக்கறுத்தான்.

வீட்டில் உள்ள முதியவர்கள், `மூட்டுவலி தாங்கமுடியலையே…’ என்று சொல்ல முற்படும் முன்பே, அவர்களின் முகபாவனையில் இருந்து வலியைப் புரிந்துகொண்டு, முடக்கறுத்தான் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். சொல்வதோடு நிற்காமல் தோட்டங்களில் சென்று முடக்கறுத்தான் மூலிகையைப் பறித்து வந்து அவர்களின் முடக்கை அறுத்திடுங்கள்.

கசப்பில் நன்மை

முடக்கறுத்தான் இலைகளை சட்னி, துவையலாகச் செய்து சாப்பிடலாம். கொஞ்சம் கசப்புத்தன்மை இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். முடக்கறுத்தானுக்கு கொஞ்சம் கசப்புத்தன்மை இருப்பது உண்மைதான்.

ஆனால், அந்தக் கசப்பு முழுவதிலும் மருத்துவகுணங்களைத் தேக்கி வைத்திருக்கிறது முடக்கறுத்தான்! வாரம் ஒரு முறையாவது சாப்பிட வேண்டிய ரெசிப்பியாக முடக்கறுத்தான் சட்னி/துவையலை வைத்துக் கொள்ளுங்கள்.

மூலிகை தோசை
மூலிகை தோசை

மூலிகை தோசை

நீங்கள் சாப்பிடும் தோசையை மருத்துவ குணமிக்க தோசையாக மாற்ற ஆசையா! தோசைமாவில் முடக்கறுத்தான் இலைகளை அரைத்துக் கலந்து முடக்கறுத்தான் தோசைகளாகச் சுட்டு மருத்துவ குணமிக்க மூலிகை தோசைகளாகச் சாப்பிடுங்கள்.

`முடக்கறுத்தான் தோசைக்கு முடக்கறுத்தான் சட்னி..!' வாவ்… காம்பினேஷன்...

வலியைக் குறைக்கும் பானம்

தேயிலைத் தூளுக்குப் பதிலாக முடக்கறுத்தான் இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து முடக்கறுத்தான் மூலிகை நீராக மாலை வேளைகளில் பருகலாம்.

வலி தீர வழி
வலி தீர வழி

முடக்கறுத்தான் ரசம்

இதன் இலைகளோடு சீரகம், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து முடக்கறுத்தான் ரசத்தை தயாரிக்கச் சொல்லி வார இறுதி நாள்களில் மூலிகை வாசனையை வீடு முழுக்க மணக்கச் செய்யுங்கள். இந்த முடக்கறுத்தான் ரசமானது, மூட்டுவலியைப் போக்குவதோடு மலக்கட்டையும் நீக்கும்.

இதன் இலைகளைக் காயவைத்து பொடிசெய்து வைத்துக் கொண்டு லேசான உடல் வலி, சோம்பல் ஏற்படும்போது உபயோகப்படுத்தலாம். இதன் இலைப்பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க, இருமல்கூட விரைவில் நீங்கும்.

முடக்கறுத்தான் எண்ணெய்

நல்லெண்ணெயில் இதன் இலைகளைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயை அடிபட்ட இடங்களில் தடவ, வலி நிச்சயம் குறையும். அடிபட்ட வலி மட்டுமன்றி உடலில் தோன்றும் சுளுக்குப் பிடிப்புகளுக்கும் இந்த எண்ணெய் மிகவும் நல்லது.

எப்போதாவது சுளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இந்த எண்ணெயைப் பிரயோகித்துப் பாருங்கள்! சுளுக்கு ஏற்பட்ட தசைப் பகுதியில் மூலிகை எண்ணெயைக் கொண்டு அன்பான உறவுகள் கைப்பட தடவினால் போதும். அடுத்த சில நிமிடங்களில் பாதிக்கப்பட்ட தசை, மகிழ்ச்சியாக உங்களைப் பார்த்து கண் சிமிட்டும்!

மூட்டு வலி
மூட்டு வலி

இதன் இலைச்சாற்றில் சில துளிகளை காதில் விட, காதுக்குள் தோன்றும் நோய்த் தொற்றுகள் குணமாகும். பிரசவித்த (குழந்தை ஈன்ற) பெண்களின் அடிவயிற்றுப் பகுதியில் முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பற்றுப் போட, கருப்பையில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும் என்பது கிராமத்து பிரசவ நுணுக்கம். சரும நோய்களைக் குணமாக்க நைஜீரிய நாட்டு மருத்துவத்தில் முடக்கறுத்தான் இலைகளை வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்துகின்றனராம். நைஜீரியாவுக்கு ஒரு சுற்றுலாவைப் பிளான் பண்ணுங்கப்பா..!

சுரம் அகற்றி செய்கையும் வலிநிவாரணி குணமும் இதற்கு உண்டு. ரத்தத்தில் `யூரிக் அமிலம்’ அதிகரிப்பதால் உண்டாகும் `கவுட்’ நோய்க்கான சிறந்த தீர்வை முடக்கறுத்தான் வழங்கும். எலிகளில் நடைபெற்ற ஆய்வில், இதன் இலைச்சாறு `டெஸ்டோஸ்டீரான்’ அளவுகளை அதிகரிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முடக்கறுத்தான் இலைகள், வாதநாராயணன் இலைகள், நொச்சிவேர், பேய் மிரட்டி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்தரைத்து, நல்லெண்ணெயோடு சேர்த்துக் காய்ச்சி தயாரிக்கப்படும் எண்ணெயை வலி நீக்கும் எண்ணெயாகப் பயன்படுத்தலாம்.

இலக்கியங்களிலும் இதற்கு இடமுண்டு

`உழிஞை’ என்ற பெயரில் முடக்கறுத்தானின் வளரியல்பு பற்றி `நுண்கொடி உழிஞை’ என பதிற்றுப்பத்தும், `நெடுங்கொடி உழிஞை’ என புறநானூறும் விவரிக்கின்றன.

போர்களின்போது, அரணை முற்றுகையிடும் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் ஒருதிணையே (உழிஞைத்திணை) அமைந்திருப்பது முடக்கறுத்தானின் பெருமைக்குச் சான்று.

கழுத்து வலி (Representational Image)
கழுத்து வலி (Representational Image)

தாவரவியல்பெயர்:

Cardiospermum halicacabum

குடும்பம்:

sapindaceae

கண்டறிதல்:

ஏறுகொடி வகையைச் சார்ந்தது. மழைக்காலத்தில் அதிக அளவில் தென்படும். மாற்றடுக்கில் அமைந்த இலைகள். ஒற்றைச் சிற்றிலையாக முடியும். மணம் கொண்ட இலைகள். வெண்மை நிற மலர்கள். ரெசிம் வகை மஞ்சரி. மெல்லிய இறகமைப்புக்குள் விதைகள் காணப்படும். மெல்லிய தண்டுடையது. ஈரப்பசை நிறைந்த மண்ணில் முடக்கறுத்தான் விதைகளை விதைக்க, விரைவாகக் கொடியேறும். இன்றே முயன்று பாருங்கள்.

தாவர வேதிப் பொருள்கள்:

Calycosin, Quercetin, Apigenin. Protocatechuic acid

முடக்கறுத்தான்… வேதனையைக் குறைக்கும் சரவெடி..!

- மரு. வி.விக்ரம்குமார், MD(S)