Published:Updated:

`கொரோனா வைரஸ் சாதாரண தொற்றல்ல ட்ரம்ப்...' - அமெரிக்காவை அன்றே எச்சரித்த மருத்துவர்கள்!

`இப்போதாவது கேளுங்கள் நண்பர்களே...' - கொரோனாவுக்கு இத்தாலியிலிருந்து எழும் அபாயக்குரல்! இனியாவது விழிப்போமா நாம்?

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை எட்டிவிட்டது. மூன்று மாத இடைவெளியில், 118 நாடுகளில், 4,700-க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சீனா தவிர்த்து பிற நாடுகளில் 13 மடங்கு வேகமாகப் பரவியுள்ளது என, மார்ச் 12-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வேதனைப்பட்டுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநரும் மருத்துவருமான டெட்ராஸ். கோவிட் - 19 கொரோனா வைரஸை, `உலகளாவிய பெருந்தொற்று' என அறிவித்தவர் இவர்.

கொரோனா
கொரோனா

தனது அந்த அறிவிப்பு குறித்துப் பேசும்போது டெட்ராஸ் குறிப்பிட்ட முக்கியமான விஷயம், ``கோவிட் - 19 நோயை, `உலகளாவிய பெருந்தொற்று' எனச் சொன்னவுடன், மக்கள் பலரும் அச்சப்படுவதைக் காணமுடிகிறது. இது பயத்தை அதிகரிக்கச் சொல்லப்பட்ட அறிவிப்பல்ல. அலட்சியத்தைத் தவிர்ப்பதற்காகவே இதை நாங்கள் சொன்னோம். மருத்துவ வரலாற்றிலேயே, கட்டுப்படுத்திவிடக்கூடிய ஒரு பெருந்தொற்றாக இருப்பது, இந்த கோவிட் - 19 தான். ஆகவே பயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, நோயைத் தடுக்கத் தேவையான விஷயங்களை உலக மக்கள் அனைவரும் மேற்கொள்ளுங்கள்" என்றார்.`

கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus

118 நாடுகளைப் பாதித்துவிட்ட பிறகும்கூட, கொரோனாவை பல நாடுகள் அலட்சியத்துடனேயே அணுகுகின்றன. பல நாடுகளிலும், கொரோனாவின் தீவிரம் அதிகரித்த பிறகே, உச்சக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என வேதனை தெரிவித்திருந்தார் டெட்ராஸ். இந்த நிலை நீடிக்கும்பட்சத்தில், அந்தந்த நாடுகள் கூடிய விரைவில் மிகமோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தார் அவர்.

கொரோனா
கொரோனா

இதற்கான சான்றாக இருக்கும் முக்கியமான சில நாடுகள், அந்த நாடுகள் செய்யத்தவறிய விஷயங்கள், அதனால் அவர்கள் எதிர்கொண்ட பின்விளைவுகள் ஆகியவற்றின் ஒரு சிறு தொகுப்பு இங்கே!

சீனாவுக்கு அடுத்தபடியாக, முழுமையாக முடக்கப்பட்ட நாடாக தற்போது மாறியுள்ளது இத்தாலி. அங்கு நோயாளிகள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகும் சூழலில், இத்தாலியிலிருக்கும் பியான்கா என்ற பெண், சில தினங்களுக்கு முன் `நோய் பரவத் தொடங்கிய நேரத்தில் இத்தாலி மக்கள் செய்த தவறு' என ஒரு ட்வீட் செய்திருந்தார். வட இத்தாலியைக் குறிப்பிட்டுக் கூறியிருந்த பியான்கா, தனது ட்வீட்டில் குறிப்பிட்ட விஷயம் இதுதான் - ``இங்கிருக்கும் எல்லோரும் இதைச் சாதாரண ஃப்ளூ என்று சொன்னார்கள். ஆனால், இப்போதோ எங்கள் நாட்டின் ஒட்டுமொத்த தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தும் குளறுபடியாகிக் கிடக்கின்றன. தன் வீட்டிலுள்ள தாத்தாவும் பாட்டியும், அம்மாவும் அப்பாவும் இறப்பதைக்கூட, இயல்பான ஒரு விஷயமாகக் கடந்து சொல்லும் மனநிலையில்தான் இங்கிருப்பவர்கள் அனைவரும் தெருக்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர்."

``தயவுசெய்து இப்போதாவது கேளுங்கள் நண்பர்களே.... கொரோனா சாதாரண ஃப்ளூ தொற்றல்ல! Coronavirus is Not Flu"

பியான்காவின் கருத்து, மருத்துவ ரீதியாகச் சரியாக இல்லாவிட்டாலும், கொரோனாவின் தாக்கத்தால் உச்சத்திலிருக்கும் ஒரு நாட்டிலிருந்து எழுந்த இந்தக் குரல், உலக மக்களால் நிராகரிக்கப்படக் கூடாத ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவில், தற்போதைக்கு 1100-க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பீஜிங்கைச் சேர்ந்த இதயநோய் நிபுணரொருவர் அவர்கள் ஊரின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, ``சீன அரசுமேகூட, பாதிப்பு ஏற்படத் தொடங்கிய முதல் சில நாள்களுக்கு முறையாகச் செயல்படவில்லை. அதன் விளைவுகளையே பின்வந்த நாள்களில் அவர்கள் சந்தித்தனர். இப்போது, அமெரிக்கா போன்றதொரு வல்லரசு நாடும், அதே அலட்சியத்தையே கொரோனா வைரஸ் விஷயத்தில் காட்டுகிறது. சொல்லப்போனால், சீனா அளவுக்குக்கூட இவர்கள் நேர்த்தியாகப் பிரச்னையைக் கையாளாமல் இருக்கின்றனர்" எனக்கூறி இருந்தார்.

கொரோனா
கொரோனா

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணமே முடங்கிப் போயிருக்கும் சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், `ஒவ்வொரு வருடமும் சாதாரண ஃப்ளூவுக்கு 70,000 பேர்வரை அமெரிக்காவில் மரணம் அடைகின்றனர். அப்போதெல்லாம் எந்த விஷயமும் இங்கு நின்று போகவில்லை. இப்போது இந்தக் கொரோனாவுக்கு இப்போது வரை 22 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒப்புமை, அடிப்படையிலேயே தவறான விஷயம் என்பதால், இதை அமெரிக்க அரசின் அலட்சியமென்றே கருதுகின்றனர் மருத்துவர்கள். ட்ரம்ப் இதைச் சொல்லும்போது, 546 என்றிருந்த அமெரிக்க நோயாளிகளின் எண்ணிக்கை, அடுத்த ஐந்து நாள்களில் 1,100 கடந்துவிட்டதென்பது இங்கே கவனிக்கத்தக்க விஷயம்.

அன்று ட்வீட் செய்த அதே ட்ரம்ப், இப்போது கொரோனாவை சர்வதேச மருத்துவ நிலையென அறிவுறுத்திவிட்டார்.

அமெரிக்க மருத்துவர் ஃபௌசி என்பவர் கூறுகையில், சீசனல் ஃப்ளூவைவிடவும் கொரோனா வைரஸ் பத்து மடங்கு அதிக ஆபத்தானது எனக் குறிப்பிட்டிருப்பது ட்ரம்புக்குத் தெரியவர வேண்டும் என்பதே நமது இப்போதைய எதிர்பார்ப்பு!

கொரோனா: பேண்டெமிக், எபிடெமிக், எண்டெமிக், அவுட்பிரேக்... வித்தியாசங்களும், விளக்கங்களும்!
#CoronaStudy

மார்ச் 13 மாலையில் எங்களுக்குக் கிடைத்த ஆங்கில இணையமொன்றின் தகவலின்படி, ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப் உட்பட அமெரிக்காவின் முன்னணி அரசியல் தலைவர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த அதிகாரி செல்லும்போதே அவருக்கு பாதிப்பு முதல் நிலையில் இருந்திருக்குமாயின், அங்கிருந்தவர்களில் யாருக்கேனும் இப்போது கொரோனாவுக்கான சாத்தியங்கள் அதிகமாயிருக்கும். [குறிப்பு : இது, வெள்ளை மாளிகையைச் சேர்ந்த சில மருத்துவர்களின் கருத்து]. இனியாவது கொரோனாவை சீரியஸாக அமெரிக்க அரசு கையாள வேண்டும் என்பதே மக்களின் இப்போதைய கோரிக்கையாக இருக்கின்றது.

கொரோனா
கொரோனா
உலக சுகாதார நிறுவனம்
பயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, நோயைத் தடுக்கத் தேவையான விஷயங்களை உலக மக்கள் அனைவரும் மேற்கொள்ளுங்கள்

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, சீனாவுக்கு அடுத்து 80 சதவிகித பாதிப்பு ஏற்பட்ட நாடுகளாக இத்தாலியும், தென் கொரியா மற்றும் இரான் ஆகியவையும் உள்ளன. கடந்த சில நாள்களாக, ஜெர்மனும் மோசமான சூழலையே எதிர்கொண்டிருக்கிறது குறிப்பிடப்பட வேண்டியது. இவற்றில் தென் கொரியா இப்போதுவரை போதுமான அளவு மருத்துவமனை வசதிகளற்ற நாடாகவே இருக்கிறது. 8,000 த்துக்கும் அதிக நோயாளிகளைக் கொண்ட தென் கொரியாவில் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருப்பது, வைரஸ் பரவுவதற்கான வழியை அமைத்துக் கொடுக்கிறதென்றே சொல்லவேண்டியுள்ளது.

மேலும், இப்போதும்கூட முறையான தனிமைப்படுத்துதல் இன்றியே இருக்கிறது அந்த நாடு. அடுத்தபடியாக இரானைப் பொறுத்தவரையில், இறப்பு எண்ணிக்கை அங்கு 400-ஐக் கடந்துவிட்டது. நோயாளிகளின் எண்ணிக்கையோ 6,500-ஐக் கடந்து ஏறிக்கொண்டே இருக்கிறது.

கொரோனா
கொரோனா

இரானிலும், மருத்துவமனைகளுக்கான பற்றாக்குறை நிலவுவது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க,

ஜெர்மனின் 70 சதவிகித மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படக்கூடுமெனக் கணித்துள்ளார் அந்த நாட்டின் அமைச்சர் ஏஞ்செலா மார்க்கெல்!

இந்த எண்ணிக்கையானது, 5.8 கோடி மக்களைக் குறிப்பிடும் எண்ணிக்கை என்பதால், இதைவிடத் தீவிரமாக கொரோனா வைரஸின் பரவுதலை யாராலும் கூறிவிடமுடியாது.

இந்தியாவில் இப்போது நிலவரப்படி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, 82. இறப்பு 2.

இப்போதே இந்தியர்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே, மேற்குறிப்பிட்ட நாடுகள் எட்டிய மோசமான நிலையை நம்மால் தவிர்க்க முடியும்.
விழிப்போமா?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு