Published:Updated:

ஷேவ் செய்யா முகம், திடீர் அழுகை... தற்கொலை அறிகுறி! அலர்ட் #SuicidePreventionDay

கிராபியென் ப்ளாக்
ஜெனி ஃப்ரீடா
பெ.மதலை ஆரோன்
எம்.மகேஷ்
கு.மோகனலட்சுமி

சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், ஆண்கள், பெண்கள் என யாருக்கு வேண்டுமானாலும் மனஅழுத்தம் வரலாம். மனஅழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள் யாரிடமும் தன் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளாததால், தற்கொலை எண்ணத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள்.

Suicide
Suicide ( pixabay )

`ஒரு வார்த்தை வெல்லும்... ஒரு வார்த்தை கொல்லும்’ என்றொரு புகழ்பெற்ற பழமொழி ஒன்று உண்டு. பல நேரங்களில் இனிமையான வார்த்தைகள் எந்தவொரு பிரச்னையையும் எதிர்கொண்டு வெல்லத் துணைபுரியும். அதேபோல கடும் சொற்கள் ஒருவரைத் தற்கொலையை நோக்கிக்கூடத் தள்ளிவிடும் ஆற்றல் பெற்றவை என்பதுதான் அதன் பொருள். வார்த்தை மட்டுமல்ல ஒருவரைத் தற்கொலை முடிவை நோக்கி நகர்த்த பல்வேறு காரணங்கள் உள்ளன. ‘மனஅழுத்தம் மனச்சோர்வு, தேவையற்ற குழப்பம், பயம், சமூகத்தில் பிரச்னைகளைக் கண்டு பயப்படுவது போன்றவை ஒருவரைத் தற்கொலை எண்ணத்தை நோக்கி நகர வைக்கிறது’ என்கின்றனர் மருத்துவர்கள்.

World suicide prevention day
World suicide prevention day
pixabay

தற்கொலை எண்ணத்துடன் உள்ளவர்களைத் தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி `உலக தற்கொலை தடுப்பு தினம்’அனுசரிக்கப்படுகிறது. உலகச் சுகாதார நிறுவனமும் சர்வதேச தற்கொலைத் தடுப்புச் சங்கமும் இணைந்து தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்தாக்கத்தை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. 2019-ம் ஆண்டு `எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். தற்கொலையைத் தடுப்போம்’ என்பது கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மனஅழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள் யாரிடமும் தன் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளாததால், தற்கொலை எண்ணத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள்.
மனநல மருத்துவர் எம்.ஆனந்த் பிரதாப்
தற்கொலைகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மனஅழுத்தம் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் அவை அனைத்தும் இணைகின்றன. 'மனஅழுத்தம்தான் தற்கொலை எண்ணத்தின் ஆரம்ப அறிகுறியா? தற்கொலை எண்ணம் உடையோரை அடையாளம் காண்பது எப்படி?' என்று மனநல மருத்துவர் எம்.ஆனந்த் பிரதாப்பிடம் கேட்டோம்.
மனநல மருத்துவர் எம்.ஆனந்த் பிரதாப்
மனநல மருத்துவர் எம்.ஆனந்த் பிரதாப்

“ஒருவர் தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியமான காரணம் மனஅழுத்தம்தான். இது யாருக்கு, எப்படி வரும் என்று சொல்ல முடியாது. தொழில்ரீதியாகவும், சந்தர்ப்ப சூழல்களினாலும், மரபணு காரணங்களாலும் மனஅழுத்தம் ஏற்படலாம். மனஅழுத்தத்தில் உள்ளவர்கள் சோர்ந்துபோய் காணப்படுவார்கள். தொலைக்காட்சியில் அவர்களுக்குப் பிடித்த நகைச்சுவைக் காட்சி ஓடினாலும் வீட்டுக்கு நண்பர்கள் வந்தாலும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பார்கள்.

கண்ணைப் பார்த்து பேசாமல் தரையைப் பார்த்துக்கொண்டோ வேறு எங்காவது வெறித்துப் பார்த்துக்கொண்டோ பேசுவார்கள். கிரேக்க எழுத்தான 'ஒமேகா' போல அவர்களது உடலமைப்பு வளைந்த நிலையில் தளர்வாகக் காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஒருவர் மனஅழுத்தத்தில் சிக்கியிருக்கிறார் என்று உணர வேண்டும்.

Suicide
Suicide
pixabay

சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், ஆண்கள், பெண்கள் என யாருக்கு வேண்டுமானாலும் மனஅழுத்தம் வரலாம். மனஅழுத்தத்தில் சிக்கியிருப்பவர்கள் யாரிடமும் தன் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளாததால், தற்கொலை எண்ணத்தை நோக்கித் தள்ளப்படுவார்கள். தனிமையில் இருக்கும்போது அந்த எண்ணம் இன்னும் வலுவாகும்.

பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக இல்லையென்றாலோ நண்பர்களைக் காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலோ தாழ்வு மனப்பான்மை ஏற்படும். அது விரக்தியாக மாறி தற்கொலை எண்ணத்தை நோக்கித் தள்ளும்.

ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டிருந்தால், அவர் தொடர் மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்
மனநல மருத்துவர் எம். ஆனந்த் பிரதாப்
`ஒரு வருடத்துக்கு 8 லட்சம் பேர்;  ஆண்களே அதிகம்!'-தற்கொலை அறிக்கையை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்

குடும்பத்தில் தாய், தந்தை, தாத்தா யாரோ ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார். மரபுரீதியாக அந்த எண்ணங்கள் அடுத்த தலைமுறைக்கும் செல்லலாம். அப்படியானவர்கள் சின்ன பிரச்னையைக்கூடத் தாங்க முடியாதவர்களாக இருப்பார்கள் என்பதால், தற்கொலை எண்ணம் தலைதூக்கும். முதியோர்களை அவர்கள் பெற்ற குழந்தைகள் தவிக்கவிடுவதாலும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களினாலும் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.

அடையாளம் காண்பது எப்படி?

தற்கொலை எண்ணங்களில் இருப்பவரை அடையாளம் காண்பது எளிது. அவர்கள் தங்கள் பேச்சின் இடையே தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துவார்கள். சிலர் வழக்கமான சுறுசுறுப்பில்லாமல் மந்தநிலையில் காணப்படுவார்கள். வேலைக்குச் செல்வோராக இருந்தால் அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள். அதுமட்டுமன்றி முகச்சவரம் செய்யாமல், எதையோ பறிகொடுத்தவர்போல வீட்டில் தனிமையை நாடுபவர்களாக இருப்பார்கள். திடீர் திடீரென அழுவார்கள். இரவில் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை மனநல சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்” என்றவரிடம்,

`தற்கொலைக்கு முயன்று காப்பாற்றிய பின் மீண்டும் அவர் அந்த முடிவை எடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?’ எனக் கேட்டோம்.

“தற்கொலைக்கு முயன்றவரைக் காப்பாற்றிய பின், மனநல மருத்துவரின் உதவியை நாடி சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், தொடர்ச்சியாகச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அப்படித் தொடர் சிகிச்சையை மேற்கொள்ளாதபோது தற்கொலை எண்ணம் மீண்டும் தலைதூக்கவே செய்யும். அவர்களுக்கு மனச்சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எனவே ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டிருந்தால், அவர் தொடர் மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Suicide
Suicide
pixabay

தற்கொலை எண்ணம் தோன்றும்போது சம்பந்தப்பட்டவர் தன் பிரச்னைகளை உறவினர்களிடத்திலோ நண்பர்களிடத்திலோ தெரிவிக்கலாம். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். சில பிரச்னைகள் சரியாகச் சிறிது காலம் தேவைப்படும் என்பதை உணர்வதும் முக்கியம். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை நோக்கி முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். அது நடக்காதபோதோ விரக்தி ஏற்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுவார்கள். இதைத் தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை வைத்துக்கொள்ளலாம். ஒரு துறை இல்லாவிட்டால் இன்னொரு துறையில் ஜொலிக்க முடியும்.

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தனிமையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்டவர் வெளியில் செல்வதாக இருந்தால் தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது. உறவினரோ, நண்பரோ உடன் செல்வது அவசியம். அதேபோல தலைவலி, காய்ச்சல், வலி நிவாரணி மாத்திரைகளைத் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் மொத்தமாக விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம் என்பதால் வீட்டில் இருக்கும் மாத்திரைகளை எங்காவது மறைத்து வைக்க வேண்டும்.

Suicide Info
Suicide Info

குற்ற உணர்ச்சி, தன்மான உணர்ச்சியில் இருப்பவர்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் தன்னம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். அவர்களின் குற்றத்தைச் சுட்டிக்காட்டி மனம் நோகச் செய்யாமல், அனுசரணையாக இருக்க வேண்டும். தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட எல்லா வகையான சிகிச்சை முறைகளும் உள்ளன. அவற்றை முழுமையாக, நீண்ட நாள்களுக்கு எடுத்துக்கொள்ளும்போது அந்த எண்ணம் முற்றிலுமாக தவிர்க்கப்படும்” என்கிறார் ஆனந்த் பிரதாப்.

தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிக அளவில் இளைஞர்களாகவே இருக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமாரிடம் கேட்டோம்.

"தற்கொலை எண்ணத்துடன் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களிடம் இருந்துதான் அதிக அளவில் அழைப்புகள் வருகின்றன. குடும்பத்தில் பிரச்னை, உறவுச் சிக்கல்கள், நண்பர்களுடன் மனக்கசப்பு என்பது போன்ற பிரச்னைகளுக்கு ஆளானவர்கள்தான் அதிகம் அழைக்கின்றனர். சமூக வலைதளங்கள், ஸ்மார்ட்போன் எனத் தகவல் தொடர்புக்குப் பல்வேறு வசதிகள் இருந்தாலும் பெரும்பாலானோர் தனிமையைத்தான் உணருகிறார்கள். ஒருவருடன் ஒருவர் மெய்நிகர் உலகத்தில்தான் தொடர்பில் இருக்கிறார்களே தவிர, நிஜத்தில் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவோ தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவோ செய்வதில்லை. மனிதர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கோ தொடர்பில் இருப்பதற்கோ விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர்.

சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்
சிநேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார்

சமூக வலைதளங்களில் தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிருவோர், சந்தோஷமாகப் பயணம் சென்றுவந்தது, ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்ட புகைப்படம் போன்றவற்றைத்தான் பகிருவார்கள். மனஅழுத்தத்தில் இருக்கும் ஒருவர் இதைப் போன்ற விஷயங்களைப் பார்க்கும்போது, இந்த உலகத்தில் தான் மட்டும்தான் பிரச்னைகளில் உழன்றுகொண்டிருக்கிறோம்.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்து மேலும் வருந்துகிறார்கள். தோல்விகளை எதிர்கொள்ளும் பக்குவமும் இளைஞர்களிடம் தற்போது குறைந்து வருகிறது. இதனால் சிறு தோல்வி ஏற்பட்டால்கூட உடைந்துபோய் தற்கொலை முடிவுக்குச் சென்றுவிடுகின்றனர்.

Suicide
Suicide
pixabay

ஒரு நாளைக்கு சுமார் 60 பேர் தற்கொலை எண்ணத்துடன் எங்கள் மையத்தை அழைக்கின்றனர். அழைக்கும் நபரின் பிரச்னைக்கேற்ப, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வல்லுநர்களின் உதவியுடன் ஆலோசனை அளிக்கப்படுகிறது. அதன் மூலம் பெரும்பாலானவர்கள் தற்கொலை எண்ணங்களைக் கைவிட்டுவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர்" என்றார்.