Published:Updated:

எய்ட்ஸ் சிகிச்சையின் எதிர்காலம் என்ன? நோயை முற்றிலும் விரட்டுவது சாத்தியமா? விளக்கும் மருத்துவர்!

World AIDS Day ( Pixabay )

உலகத்திலிருந்து 1980-ம் வருடம் பெரியம்மை விரட்டியடிக்கப்பட்டது. கடந்த 2014-ம் வருடத்திலிருந்து இந்தியா போலியோஇல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நோய்களை முற்றிலுமாக குணமாக்க முடிந்த நமக்கு ஏன் எய்ட்ஸ்-ஐ முற்றிலுமாக குணப்படுத்துவது இன்னும் சாத்தியமாகவில்லை?

எய்ட்ஸ் சிகிச்சையின் எதிர்காலம் என்ன? நோயை முற்றிலும் விரட்டுவது சாத்தியமா? விளக்கும் மருத்துவர்!

உலகத்திலிருந்து 1980-ம் வருடம் பெரியம்மை விரட்டியடிக்கப்பட்டது. கடந்த 2014-ம் வருடத்திலிருந்து இந்தியா போலியோஇல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நோய்களை முற்றிலுமாக குணமாக்க முடிந்த நமக்கு ஏன் எய்ட்ஸ்-ஐ முற்றிலுமாக குணப்படுத்துவது இன்னும் சாத்தியமாகவில்லை?

Published:Updated:
World AIDS Day ( Pixabay )

இன்று டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ் என்பது 1990-களில் எத்தனை கொடூரமான நோயாகப் பார்க்கப்பட்டது என்பதை நான் கூறித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. 1986-ம் வருடம் இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளியை, சென்னையில் கண்டறிந்து கூறியது தமிழகத்தைச் சேர்ந்த நுண்ணியிரியல் துறை மருத்துவ மாணவியான டாக்டர் நிர்மலா மற்றும் அவரின் துறைப்பேராசிரியை டாக்டர் சுனிதா சாலமன் ஆகிய இருவருமே. ஆக, இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத்தில்தான் முதன்முதலில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகாரபூர்வமாகக் கண்டறியப்பட்டனர்.

எய்ட்ஸ்
எய்ட்ஸ்
Pixabay

``எய்ட்ஸ் நோயைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். எய்ட்ஸ் (AIDS) என்பது Acquired Immuno Deficiency Syndrome என்பதன் சுருக்கம். அதாவது நம் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைத் தாக்கி அதை ஆட்டம் காண வைத்து நம் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குள் ஊடுருவி அதைச் செயலிழக்கச் செய்யும் நோய் என்பது இதன் பொருள். இந்த நோயை உருவாக்குவது ஒரு வைரஸ்.

மனிதர்களைத் தாக்கி அவர்களின் எதிர்ப்பு சக்தி மண்டலத்தைக் காலி செய்வதால் இதை Human Immunodeficiency Virus என்று அழைக்கிறோம். சுருக்கமாக HIV. இந்த ஹெச்.ஐ.வி முதலில் குரங்குகளிடம் காணப்பட்டதாகவும் அங்கிருந்த Simian Immune Deficiency virus கொஞ்சம் மாற்றங்களைத் தன்னகத்தே செய்துகொண்டு குரங்குகளையொத்த ஜீன் அமைப்புகொண்ட மனிதர்களிடம் வந்தது என்ற கருத்து உண்டு.

HIV
HIV
Pixabay

எப்படி இன்ஃபுளுயென்ஸா எனும் ஃபுளூ காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மனிதனுக்கும் பறவைகளுக்கும் பன்றிகளுக்கும் மாறி மாறிச் சென்று தாக்குகிறதோ அது போலத்தான் இந்த வைரஸும் குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு மாறி வந்திருக்கலாம். உலகின் முதல் எய்ட்ஸ் நோயாளி ஆப்ரிக்க கண்டத்தின் தற்போதைய காங்கோ நாடு இருக்கும் பகுதியில் 1959-ம் ஆண்டு கண்டறியப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை மனித சமுதாயம் எய்ட்ஸ் நோயுடனும் அதை உருவாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸ் உடனும் அவற்றுக்கு எதிரான போரைத் தொடங்கியது.

எய்ட்ஸ் எப்படிப் பரவுகிறது?

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் ஆரோக்கியமானவருக்குப் பரவலாம். பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளை/ ரேசர்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பரவுகிறது. கடந்த வாரம் கூட பாகிஸ்தானில் ஒரு போலி மருத்துவர் ஒரே ஊசியை வைத்து பல பேருக்கு ஊசி போட்டு ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் வர வைத்த செய்தி வந்தது. ரத்த நாளங்கள் மூலம் போதை மருந்துகளை ஏற்றிக்கொள்ளும் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களிடமும் இது அதிகம் காணப்படுகிறது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரிடமிருந்து ஆரோக்கியமானவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டால் அவருக்கும் பரவும். எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து அவர்கள் பெறப்போகும் குழந்தைகளுக்குப் பரவும். இதை Vertical Transmission என்கிறோம்.

Infection
Infection
Pixabay

எய்ட்ஸ் நோயை ஏன் இன்னும் ஒழிக்க முடியவில்லை?

பெரியம்மை (Small Pox), போலியோ (Poliomyelitis) போன்ற பல கொடிய நோய்களை உருவாக்கியதும் வைரஸ்கள்தான். உலகத்திலிருந்து 1980-ம் வருடம் பெரியம்மை விரட்டியடிக்கப்பட்டது. கடந்த 2014-ம் வருடத்திலிருந்து இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நோய்களை முற்றிலுமாக குணமாக்க முடிந்த நமக்கு ஏன் எய்ட்ஸை முற்றிலுமாக குணப்படுத்துவது இன்னும் சாத்தியமாகவில்லை? ஹெச்.ஐ.வி வைரஸின் உருவம் மற்றும் செயல்படும் விதம்தான் நமக்கு எய்ட்ஸில் பூரண குணத்தை எட்டவிடாமல் செய்யும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஹெச்.ஐ.வி வைரஸ் நமது உடலுக்குள் நுழைவதை நகருக்குள் தீவிரவாதிகள் நுழைவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தத் தீவிரவாதிகள் நேராகச் சென்று நகரத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் செயல்படும் தலைமையிடத்தை முற்றுகையிட்டு அந்தக் காவலர்களையும் தீவிரவாதிகளாக மாற்ற முற்பட்டால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அதுதான் நமது உடலிலும் நடக்கிறது.

இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் செலவினத்தை இந்திய அரசும் மாநில அரசுகளும் ஏற்கின்றன. எனவே, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று அந்தரங்கம் மற்றும் தனிமை பாதிக்கப்படாத வகையில் ART துறையில் பதிவுசெய்து பிரதி மாதம் மாத்திரைகள் வாங்கி உண்ண முடியும்.
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

ஹெச்.ஐ.வி எனும் தீவிரவாதிகள் உடலுக்குள் நுழைந்ததும் நேராகச் சென்று தாக்குவது நமது உடலின் பாதுகாப்பு மையமாக இருக்கும் எதிர்ப்பு சக்தியையும் அதன் வீரர்களான செல்களையும்தான். அந்த செல்களுக்குள் இருக்கும் மரபணுவான நல்ல நோயற்ற டி.என்.ஏவை வைரஸுக்கான டி.என்.ஏவாக (pro viral DNA) மாற்றி விடுகிறது. இதை நோக்குவர்மம் செய்து பார்ப்பவர்களையெல்லாம்தான் நினைப்பதைச் செய்ய வைப்பானே `ஏழாம் அறிவு' படத்தின் வில்லன்... அதுபோல கற்பனை செய்ய முடியும். இப்படிப் பார்க்கும் நமது நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் அனைத்தையும் தாக்கி அவற்றை வைரஸ் தாக்கிய செல்களாக மாற்றி விடுகின்றன. அந்த வைரஸ் தாக்கிய செல்கள் பல்கிப்பெருகும்போது அவற்றின் மூலம் வரும் அத்தனை செல்களிலும் வைரஸ் டிஎன்ஏ இருக்கும். இப்போது நமது சூழ்நிலைக்கு வருவோம்.

Blood Types
Blood Types

காவலர் தலைமையிடம் இப்போது தீவிரவாதிகளிடம் இருக்கிறது. காவலர்களே அங்கு பிணையில் இருக்கும்போது நாம் யாரை அங்கு போருக்கு அழைக்க முடியும்? எனவே வைரஸ்களைக் கொல்லும் மருந்துகளான Antiviral drugs எனும் ராணுவ வீரர்களை அழைக்கலாம் என்றால் நாம் அழிக்க நினைக்கும் தீவிரவாதிகள் இப்போது காவலர் உடையில் இருக்கிறார்கள். நாம் காக்க வேண்டும் என்று நினைக்கிற காவலர்கள் தீவிரவாதிகளின் உடையில் இருக்கிறார்கள். ராணுவ வீரர்களைச் சுட்டால் சாகப்போவது நம் காவலாளிகள்தான் என்ற நிலையில் எய்ட்ஸுக்கான சிகிச்சை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது எனினும் ஆகப்பெரும் எதிரிக்கும் `வீக் பாயின்ட்டு'கள் இருக்கும்தானே. அதுபோல நம்மைத் தாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸுக்கும் பல `வீக் பாய்ன்ட்டு'கள் உண்டு. அவற்றை இனம்கண்டு அடிக்குமாறு மருந்துகளை உருவாக்கி வெற்றி கண்டது மருத்துவ அறிவியலின் வளர்ச்சி. அத்தகைய ஸ்பெஷல் ஹெச்.ஐ.வி வைரஸ் கொல்லி மருந்துகளுக்குப் பெயர் Anti Retro Viral Drugs சுருக்கமாக ARV மருந்து என்று அழைக்கப்படும். இந்தச் சிகிச்சை முறைக்குப் பெயர் "ART" anti retro viral therapy.

AIDS Infographics
AIDS Infographics

இந்தச் சிகிச்சை முறையில் உள்ள சாதக... பாதகங்கள் என்னென்ன?

சாதகங்கள் எய்ட்ஸ் நோயென்றாலே அடுத்த சில மாதங்களில், ஆண்டுகளில் கொடூரமான மரணம் இருக்கிறது என்று மக்கள் மனதில் இருந்த அச்சத்தை இந்த மருந்துகள் போக்கின. 1990களில் ART ஆரம்பித்த பலரும் இன்றுவரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருவது இந்த மருந்துகளின் மகத்துவத்துக்குச் சான்று. ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தை வெகுவாகக் குறைப்பதில் இது முக்கியப் பங்காற்றுகிறது. கர்ப்பிணியிடமிருந்து அவள் பெறப்போகும் குழந்தைக்குப் பரவாமல் முடிந்தவரை காக்கிறது. எய்ட்ஸ் முற்றுவதால் ஏற்படும் பல்வேறு நோய்களிடமிருந்து காக்கிறது. மொத்தத்தில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் அன்றாட வாழ்க்கையின் தரத்தை (Quality of Life) வெகுவாக மேம்படுத்த உதவுகிறது. அவர்களையும் மற்ற சராசரி மனிதர்கள் வாழும் நார்மல் வாழ்க்கை வாழ வழிவகை செய்கிறது. இந்த மருந்துகளின் செயல்திறனால் எய்ட்ஸ் என்றாலே கொடூரமான உயிர்க்கொல்லி நோய் என்று பயந்த நிலையில் இருந்து எய்ட்ஸ் வந்தாலும் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என்ற எண்ணத்தை மேலோங்க வைத்திருக்கிறது.

சரி.. இந்த மருந்துகளின் குறைகள் யாவை?

எய்ட்ஸ் நோயும்... ஆணுறை விழிப்புணர்வும்! -  #WorldAidsDay
எய்ட்ஸ் நோயும்... ஆணுறை விழிப்புணர்வும்! - #WorldAidsDay

இந்த மருந்துகளை தினசரி தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் எடுத்துவர வேண்டும். ஒரு நாள் கூட மாத்திரைகளை விடக் கூடாது. மேலும், ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு வைரஸ் கொல்லி மாத்திரைகளை உண்ண வேண்டும். இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து எடுப்பதால் அந்த மாத்திரைகள் தரும் பக்கவிளைவுகளினால் பாதிப்பு ஏற்படும். அதற்கும் மருத்துவம் செய்ய வேண்டும். பக்கவிளைவுக்கு பயந்து மாத்திரைகளை நிறுத்தினால் எய்ட்ஸ் கிருமிகள் அதிகமாகிவிடும்.

எனவே, மருந்துகளின் அளவைக் குறைத்தோ அல்லது வேறு மாத்திரைக்கு மாறியோ சிகிச்சையைத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இந்த வைரஸ் கொல்லி மாத்திரைகளுக்கு வைரஸ்களிடம் எதிர்ப்புத் திறன் (Resistance) வளர்ந்துகொண்டே இருக்கும். இதைச் சமாளிக்கப் புதிதாக மாத்திரைகளை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் செலவினத்தை இந்திய அரசும் மாநில அரசுகளும் ஏற்கின்றன. எனவே, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று அந்தரங்கம் மற்றும் தனிமை பாதிக்கப்படாத வகையில் ART துறையில் பதிவுசெய்து பிரதி மாதம் மாத்திரைகள் வாங்கி உண்ண முடியும். அங்கு அவர்களுக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

எய்ட்ஸ் மருந்துகள்
எய்ட்ஸ் மருந்துகள்

சரி.. ஹெச்.ஐ.வி கிருமிக்கும் எய்ட்ஸுக்கும் எதிரான போரில் நமது எதிர்காலம் என்ன?

எய்ட்ஸ் கிருமியை முற்றிலும் ஒழித்து அந்த நோயிலிருந்து முற்றிலும் விடுதலை தரும் மருந்தை நோக்கி நம் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. தினமும் மாத்திரை போடும் நிலையில் இருந்து மாதம் இரண்டு முறை அல்லது மாதம் ஒருமுறை மட்டும் ஊசி போட்டுக்கொண்டால் போதும் என்ற அளவில் மருந்துகள் வரும் 2020-ம் ஆண்டு முதல் வர இருக்கின்றன. வைரஸ் கிருமியின் வெளிப்புற கவசமான Capsid எனும் அரணைத் தகர்க்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் ஆராய்ச்சியில் இருக்கின்றன. இவை அனைத்தும் முறையான ஆய்வுகளுக்குப்பின் சந்தைக்கு வரும். அப்போது நம்மால் நமது எதிரியான எய்ட்ஸை முன்னெப்போதும் இல்லாத அளவு தூரத்தில் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

ஆனால் எப்போதும் "PREVENTION IS BETTER THAN CURE"

அதற்கான சில வழிமுறைகள் இதோ:

1. பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்ப்போம்.

2. ஒருவனுக்கு ஒருத்தி. ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டை மதிப்போம்.

3. போலி மருத்துவர்களிடம் ஊசி போட்டுக் கொள்வது/ பாதுகாப்பற்ற ஊசி மூலம் பச்சை குத்திக்கொள்வது / ரேசர்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்ப்போம்.

4. சவரம் செய்யும் கடைகளில் முறையாக பிளேடுகளை மாற்றுகிறார்களா என்பதை பரிசோதிப்போம்

5. ரத்தம் ஏற்றப்படும் முன் அதில் ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, சி கிருமிகள் தொற்று இருக்கின்றனவா என்பதை சோதனை செய்வோம். மிகத் தேவையான மருத்துவக் காரணங்களுக்கன்றி ரத்தம் ஏற்றுதலைத் தவிர்ப்போம்.

வந்தபின் வருந்துவதைவிட வருமுன் காப்பதே நலம்

6. மருத்துவப் பணியிடங்களில் வேலை செய்பவர்கள் கட்டாயம் சுய பாதுகாப்பு (UNIVERSAL SAFETY PRECAUTIONS) நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

7. கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டால் அவருக்கு மருந்து ஆரம்பித்து பிறந்த குழந்தைக்கும் கிருமிக்கொல்லி மருந்து கொடுத்து குழந்தைக்கு நோய் பரவுவதைத் தடுக்க இயலும்.

8. ஆணுறை உபயோகம் மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வை விலைமாதர்களிடமும் இளைஞர்கள் இளைஞிகளிடமும் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.