Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்: மீண்டும் மிரட்டும் டெங்கு! செய்யவேண்டியதென்ன?

டெங்கு

அறிகுறிகளில் ஆரம்பித்து ஆபத்துவரை கொரோனாவும் டெங்குவும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஒரே வேறுபாடு... கொரோனாவை போல டெங்கு, மனிதரிடமிருந்து மனிதருக்குத் தொற்றுவதில்லை.

வாசகர்களுக்கு வணக்கம்: மீண்டும் மிரட்டும் டெங்கு! செய்யவேண்டியதென்ன?

அறிகுறிகளில் ஆரம்பித்து ஆபத்துவரை கொரோனாவும் டெங்குவும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஒரே வேறுபாடு... கொரோனாவை போல டெங்கு, மனிதரிடமிருந்து மனிதருக்குத் தொற்றுவதில்லை.

Published:Updated:
டெங்கு
`தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. அதேசமயம், டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது' என்று ஒரு நல்ல செய்தியையும் ஒரு கெட்ட செய்தியையும் ஒருசேரப் பகிர்ந்திருக்கிறார் தமிழக மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஆம், டெங்கு பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. குறிப்பாக, சென்னையில் இது வேகமெடுத்திருக்கிறது. '100 பேர் காய்ச்சல் என்று வந்து நின்றால், அவர்களில் 30-40 பேருக்கு டெங்கு இருப்பது உறுதியாகிறது' என்கிறார்கள் சென்னை மாநகர மருத்துவர்கள் சிலர். ஆனால், சாதாரண காய்ச்சல் என்றே பலரும் இதைக் கடந்து கொண்டிருக்கிறோம். 'டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொசு ஒழிப்புப் பணிகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்' என்கிறார் அமைச்சர். ஆனால், மக்களிடம் எச்சரிக்கை உணர்வு இருக்கிறதா என்று கேட்டால், அது கேள்வியாகவேதான் இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘ம்... ஒன்றல்ல, இரண்டல்ல. கிட்டத்தட்ட நான்காவது அலை கொரோனாவையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். டெங்குவெல்லாம் ஒரு விஷயமா’ என்பது போலவே இருக்கிறது பெருபாலான மக்களின் மனநிலை. கொரோனாவா, டெங்குவா.... எது ஆபத்தானது என பட்டிமன்றம் நிகழ்த்தும் நேரமல்ல இது. கொரோனா, குரங்கு அம்மை, இப்போது டெங்கு... என தொற்றுநோய்களின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது மனித சமூகம். தொற்றுகளிலிருந்து விலகி, ஆரோக்கியமாக வாழ்வது மட்டுமே அடுத்த சந்ததியினருக்கு நாம் காட்டப்போகிற பாதையாக இருக்கவேண்டும்.

அறிகுறிகளில் ஆரம்பித்து ஆபத்துவரை கொரோனாவும் டெங்குவும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. ஒரே வேறுபாடு... கொரோனாவை போல டெங்கு, மனிதரிடமிருந்து மனிதருக்குத் தொற்றுவதில்லை. ஏடிஸ் ஏஜிப்டி (Aedes Aegypti) எனும் கொசுக்கள்தான் டெங்குவை பரப்புபவை.

டெங்கு டெஸ்ட்  ( மாதிரி படம்)
டெங்கு டெஸ்ட் ( மாதிரி படம்)

டெங்கு பாதிப்பைப் பொறுத்தவரை 96 சதவிகிதம் தொற்று ஏற்பட்டு, தானாகவே குணமாகக்கூடியது. பாதிப்பு உறுதியான நிலையில் காய்ச்சல், உடல்வலி, உடல் முழுவதும் அரிப்பு, மூட்டுகளில் வலி, தீவிரமான நிலையில் தலைவலி போன்றவை அறிகுறிகளாக இருக்கும். டெங்குவை குணப்படுத்துவதற்கென்று பிரத்யேக சிகிச்சைகள் ஏதும் கிடையாது. டெங்குவைப் பொருத்தவரை அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சையே. சிலருக்கு ஆக்டிவ் பேஸ் (active phase) எனப்படும் நிலை சரியானதும் பிரச்னைகள் ஆரம்பிக்கும். டெங்கு உறுதியாகி ஒரு வாரம் கழித்துகூட பிரச்னைகள் வரலாம். இவர்களுக்குத்தான் பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டணுக்கள் குறைய ஆரம்பிக்கும்.

சராசரியாக ஒரு நபருக்கு ஒன்றரை லட்சம் எண்ணிக்கையில் தட்டணுக்கள் இருக்கவேண்டும். டெங்கு பாதிப்பில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரம்வரைகூட இறங்கி, பிறகு தானாகவே சரியாகிவிடும். அரிதாகச் சிலருக்கு அப்படி ஆகாமல், எந்தக் காயமும் இல்லாமல் ரத்தக்கசிவு இருக்கும். வாயிலிருந்தோ, சிறுநீர் மற்றும் மலத்திலோ ரத்தக்கசிவு இருக்கலாம். டெங்கு பாதிப்பு மிகவும் தீவிரமடையும் நிலையில்தான் இப்படி நடக்கும். இன்னும் சிலருக்கு சருமத்தில் புள்ளிகள் போல வரலாம். சிலருக்கு மூளைக்காய்ச்சல்கூட வரலாம்.

நிலவேம்பு
நிலவேம்பு

கொரோனாவுக்கு கபசுரக் குடிநீர் மாதிரி, டெங்குவுக்கு நிலவேம்புக் குடிநீர் என்பது மக்கள் மனங்களில் பதிந்திருக்கிறது. உண்மையில் நிலவேம்புக் குடிநீரோ, பப்பாளி இலைச்சாறோ டெங்கு வராமல் தடுக்கும் கவசங்கள் அல்ல. நோய் எதிர்ப்பாற்றலையும் தட்டணுக்களையும் அதிகரிப்பதற்காக மட்டுமே உதவுபவை.

இரண்டு நாள்களுக்கு மேலும் காய்ச்சல் தொடரும்பட்சத்தில், முதலில் அது கொரோனாவா என்பதை டெஸ்ட்டின் மூலம் உறுதிசெய்ய வேண்டும். கொரோனா நெகட்டிவ் என்கிற பட்சத்தில், டெங்கு உறுதியானால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிக கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

டெங்குவை பரப்பும் கொசுக்கள், பகலில்தான் கடிக்கும். இவற்றை 'பகல்நேரக் கொசுக்கள்' என்றே சொல்லலாம். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்கள், இந்தக் கொசுக்களுக்கு ஹனிமூன் ஸ்பாட். குறிப்பாக, நல்ல தண்ணீரில்தான் இவை வளரும். டெங்கு வைரஸில் மொத்தம் 4 திரிபுகள் உள்ளன. ஒருமுறை ஒருவருக்கு ஒரு திரிபால் பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் அதே திரிபால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், மற்ற மூன்று திரிபுகளும் அதே நபரைத் தாக்கலாம்.

டெங்கு, கொரோனா இரண்டுமே ஆபத்தானவைதான். என்றாலும், ஒரு வகையில் கொரோனா கொஞ்சம் பெட்டர். ஆம், அதற்காவது தடுப்பூசி வந்துவிட்டது. டெங்கு தடுப்பூசி, இப்போதுதான் அமெரிக்காவில் 9 முதல் 16 வயதினருக்குப் போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், அங்கீகரிக்கப்படவில்லை.

மாதிரி படம்
மாதிரி படம்

கொரோனாவோ... வேறெதுவுமோ... எந்த வகையான தொற்றுக்குள்ளானவர்களும் உடனடியாக இன்னொரு தொற்றுக்கு உள்ளாகும் நிலையில்தான் இருப்பார்கள். காரணம், அவர்களது உடலில் குறைந்துபோன நோய் எதிர்ப்பாற்றல் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வைரஸ்களுடன் வாழப் பழக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்... ஆனால், பாதுகாப்புடனும் வாழவேண்டும் என்பதுதான் இதிலிருக்கும் சவால். ஆரோக்கியமாக வாழப் பழகிக்கொண்டாலே போதும், இதைவிட இன்னும் மிரட்டலான சவால்களையும் எளிதாகக் கடந்துவிட முடியும்.

வீட்டை மட்டுமல்ல, தெருவையும், ஊரையும்... ஒட்டுமொத்த நாட்டையுமே ஆரோக்கியமாகப் பராமரிக்க உறுதியேற்போம்!