Election bannerElection banner
Published:Updated:

`ஷேர்டு டெல்யூஷனாக இருக்கலாம்!' - மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் பெற்றோர் குறித்து மருத்துவர்

நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள்
நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள்

கல்வி போதிக்கும் பேராசிரியர்களே இப்படி மூடநம்பிக்கையின் பிடியில் கட்டுண்டு கிடப்பது பற்றியும் இதுபோன்ற மூடநம்பிக்கை சார்ந்த கொடூர சம்பவங்கள் குறித்தும் மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம்.

நம் மக்கள், மாறுதலில் அறிவு செலுத்த முற்பட்டாலும் சமுதாயப் பழக்க வழக்கங்கள் எனப்படுபவையால் முட்டுக்கட்டை போன்று இடையூறுகள் விளைவிக்கப்படுகின்றன. நாம் அறிவை, உணர்ச்சியை, ஊக்கத்தை இழந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு, மிரட்டப்பட்டு, அடக்கப்பட்டு வந்திருக்கிறோம்
பெரியார்

இந்த வார்த்தைகளை உண்மையாக்கியிருக்கிறது அண்மையில் நிகழ்ந்த சம்பவம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இரண்டு மகள்களை பேராசிரியர்களான பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வரும் புருஷோத்தம் நாயுடு, அப்பகுதியிலுள்ள மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி வருகிறார். அவரின் மனைவி பத்மஜா தனியார் கல்வி நிறுவனத்தின் பேராசிரியை. புருஷோத்தமன் நாயுடு, பத்மஜா தம்பதி கடந்த சில மாதங்களாக வீட்டில் அற்புதங்கள், அதிசயங்கள் நடக்கும் செல்வம் பெருகும் என்று கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.

crime scene
crime scene

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டில் பெற்றோர் நீண்டநேரமாக பூஜைகள் நடத்தியுள்ளனர். அப்போது 27 மற்றும் 22 வயதான தங்கள் இரு மகள்களையும் ஆடைகளின்றி பூஜையில் அமர வைத்து, `நம் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை நீங்கள் செய்தாக வேண்டும்’ எனக் கட்டாயப்படுத்தி கண்களை மூடி வேண்டிக் கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இரு மகள்களும் கண்களை மூடிய நிலையில் இருந்தபோது, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தப்படும் தம்புள்ஸ், ஈட்டி போன்ற ஆயுதங்களை வைத்து இரண்டு மகள்களையும் பெற்றோரே துடிக்கத் துடிக்க கொன்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரிடம், `சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களின் 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். இருவரும் மீண்டும் உயிரோடு வந்துவிடுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவீன யுகத்திலும் ஒரு விஷயத்தை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ, பலன் தரும் என்றோ நம்பப்படும் மூட நம்பிக்கைகள் இதுபோன்ற கொடூர சம்பவங்களாகவும் அரங்கேறி வருகின்றன.

கல்வி போதிக்கும் பேராசிரியர்களே இப்படி மூடநம்பிக்கையின் பிடியில் கட்டுண்டு கிடப்பது பற்றியும் இதுபோன்ற மூடநம்பிக்கை சார்ந்த கொடூர சம்பவங்கள் குறித்தும் மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம்.

``ஓர் எண்ணம் அல்லது கருத்தில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லை என்றாலும்கூட அதை சிலர் முழுமையாக நம்புவார்கள். அந்த எண்ணம் ஆழ் மனதில் இறுகிவிடும். புரிய வைத்தாலும் புரிந்துகொள்ள மறுப்பார்கள். அதீத நம்பிக்கை வைத்திருப்பார்கள். அந்த இறுகிய எண்ணத்தை டெல்யூஷன் (delusion) அதாவது மாயை அல்லது மாயத்தோற்றம் என்பார்கள். உதாரணமாக, எனக்கும் இன்னொருவருக்கும் ஏதோ தகராறு என்று வைத்துக்கொள்வோம். அவர் வேறு யாரையாவது பார்த்துச் சிரித்தாலும், முறைத்தாலும்கூட என்னைப் பார்த்துதான் சிரிக்கிறார், முறைக்கிறார் என்று தோன்றும். இந்த எண்ணத்தை மாற்ற முடியாது.

Murder
Murder

சிலர் தனக்குள் விசேஷ சக்தி இருக்கிறது என்று சொல்வார்கள். இரண்டு பேர் அதை ஏற்றுக்கொள்வார்கள். உடனே தான்தான் கடவுள் என்பார்கள். சிலர் காதலி, மனைவி மீது சந்தேகப்படுவார்கள் அந்தச் சந்தேகம் இறுகிப்போய், அந்தக் குற்றத்தை நிரூபிப்பதற்கான காரணங்களைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள். இவை அனைத்துமே டெல்யூஷன்தான். இதுவும் ஒரே நேரத்தில் டெல்யூஷன் குடும்பத்தில் இருவருக்கு வரலாம். அதை `Shared Delusion' என்று சொல்வோம். கணவன், மனைவிக்குள்ளோ அல்லது குழந்தைகள், பெற்றோருக்கோ நெருக்கமாக இருக்கும் உறவு முறைகளுக்கு இடையேவோ ஏற்படும். இதுபோன்ற இறுகிய எண்ணம் உள்ளவர்கள் இயல்பாகக்கூட இருப்பார்கள்.

மதனப்பள்ளி சம்பவத்தில் அந்தப் பெற்றோருக்கு இதே பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவத்தில் பெற்றோர் படித்தவர்களாக இருப்பதுதான் ஆச்சர்யம். அவர்களுக்கு மனநலம் பாதித்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களைப் பரிசோதிப்பது அவசியம். அவர்கள் மனதில் நரபலி கொடுப்பதற்கான அடிப்படை எண்ணத்தை உருவாக்கியதில் யாரோ ஒருவர் காரணமாக இருப்பார். தங்கம் கிடைக்கும், வைரம் கிடைக்கும், ஏழு ஜென்மம், மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்பதையெல்லாம் சொல்லி, மந்திரவாதி என்ற பெயரில் சிலர் தவறாக வழி நடத்தி இருக்கலாம். அல்லது இறுகிப்போன எண்ணத்தில் கொலை செய்திருக்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டு செய்யும் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன.

Brain
Brain
Photo by Alina Grubnyak on Unsplash

எல்லோருக்கும் சில நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால், அதீத நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும். அந்த நம்பிக்கை இன்னும் அதீதமாகும்போது மனநல பாதிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் கண்ணை விற்று, சித்திரம் வாங்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயலின் விளைவு தெரிந்திருக்கும்போது, அந்த விளைவு குற்றமாக இருக்கும்போது தண்டிக்கப்பட வேண்டும். எந்த நம்பிக்கையும் அதீதமாகப் போகாத வரை நன்மைதான். அனைத்து விஷயங்களையும் விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு