Published:Updated:

பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்கிறது ரத்தச்சோகை... தடுப்பது, தவிர்ப்பது எப்படி?

ரத்தச்சோகை

பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்கிறது ரத்தச்சோகை. தடுப்பது, தவிர்ப்பது எப்படி?

பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்கிறது ரத்தச்சோகை... தடுப்பது, தவிர்ப்பது எப்படி?

பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்கிறது ரத்தச்சோகை. தடுப்பது, தவிர்ப்பது எப்படி?

Published:Updated:
ரத்தச்சோகை

சில பெண்களைப் பார்த்தவுடனே தெரியும். முகம், நகம், சருமமெல்லாம் வெளுத்து, பார்க்கவே மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். காரணம் ரத்தச்சோகை. நமது நாட்டில் இரண்டில் ஒரு பெண், அதாவது 50 சதவிகிதத்திற்கும் சற்று மேலான பெண்கள் இந்த இரும்புச்சத்து குறைபாடு என்ற Iron Deficiency Anemia-வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம்.

இரும்புச்சத்து
இரும்புச்சத்து

பெண்களுக்கு அனீமியா என்பது பொதுவான நோய் அறிகுறிதான் என்றாலும், சமீபத்தில் நான்கில் ஓர் ஆணுக்கும், இந்த அனீமியா இருப்பதாக ஓர் ஆய்வு முடிவு வெளிவந்திருப்பதுதான் இப்போது அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாதவிடாய் தொடங்கும் பருவத்திலிருந்து, மெனோபாஸ் காலம் வரை பெண்களுக்கு இந்த பாதிப்புக்கான காரணம் உள்ளது.

ஆண்
ஆண்

ஆனால், ஆண்களுக்கு ஏன் அனீமியா ஏற்படுகிறது? அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதை அறிந்துகொள்ளும் முன், அனீமியா பற்றியும் சிறிது தெரிந்துகொள்வோம்...

நாம் உயிர்ப்புடன் இருக்க ஆக்ஸிஜன் எப்படி முக்கியத் தேவையோ அதேபோல, நம் உடலில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் உயிர்ப்புடன் இருக்கவும் ஆக்ஸிஜன்தான் முக்கிய உயிர்ச்சத்தாக உள்ளது. அந்த ஆக்ஸிஜனை ஒவ்வோர் உடல் உறுப்புக்கும், உடல் உறுப்பின் ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சேர்ப்பது ரத்தத்தின் வேலை என்றாலும், குறிப்பாக அது ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் நிறைந்திருக்கும் ஹீமோகுளோபின் என்ற நிறமியின் பணியாகும்.

ஹீமோகுளோபின்
ஹீமோகுளோபின்

இந்தச் சிவப்பு அணுக்கள் நமது எலும்பு மஜ்ஜையில் உருவாகி, ரத்தத்தில் கலந்து, மூன்று மாதங்கள் இருந்து, பிறகு மண்ணீரலில் கரைந்துவிடும். இதில், சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைந்தாலோ அல்லது அதிலுள்ள ஹீமோகுளோபினின் அளவு அல்லது செயல்திறன் குறைந்தாலோ அல்லது மண்ணீரலில் கலப்பது அதிகரித்தாலோ நமக்கு அனீமியா என்ற ரத்தச்சோகை ஏற்படக்கூடும்.

பெயரிலேயே சோகத்தைக் கொண்டிருக்கும் இந்த ரத்தச்சோகை, ஒரு சாதாரணமான பாதிப்புபோல தோன்றினாலும், சரியான நேரத்தில் கண்டறிந்து அதைச் சரிசெய்யாவிட்டால், சமயத்தில் இது உயிரையும் பறித்துவிடும் என்பதுதான் இதில் கவலைக்குரிய விஷயம்.
மருத்துவர் சசித்ரா தாமோதரன்
ஃபோலிக் மாத்திரைகள்
ஃபோலிக் மாத்திரைகள்

நம் இந்தியப் பெண்களுக்கு, சராசரியாக ஹீமோகுளோபினின் அளவு, 12.1- 15.1 gm/dl என்றும், ஆண்களுக்கு 13.8- 17.2 gm/dl என்றும், குழந்தைகளுக்கு 11-16 gm/dl என்றும் மருத்துவ அமைப்புகள் மற்றும் அரசாங்கம் வரையறுத்துள்ளன. மேலும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கு, பிரசவம் அல்லது கருச்சிதைவின்போது ஏற்படும் ரத்தப்போக்கு, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு எனப் பொதுவாகவே பாதிப்புகள் அதிகம் இருப்பதால், வளரிளம் பெண்களிடையேயும், கர்ப்ப காலத்திலும் குறைந்தது 11gm/dl ஹீமோகுளோபின் அளவு இருப்பது அவசியம் என்பதையும் வலியுறுத்தி, அதற்கான தீர்வாக 'அயர்ன் ஃபோலிக்' மாத்திரைகளையும் இலவசமாக வழங்கி வருகிறது நமது அரசு.

ஆம். அனீமியா ஏற்படுவதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடுதான் அதிமுக்கியக் காரணங்களாக உள்ளன என்றபோதிலும், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12, புரதச்சத்து ஆகியவற்றின் பற்றாக்குறையிலும் இந்த அனீமியா ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் அமிலம்

மேலும், குடலில் புழுக்கள், பைல்ஸ், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்த் தொற்றுகள், தைராய்டுநோய், சர்க்கரைநோய், ஆறாத காயங்கள், புற்றுநோய், வெரிகோஸ் வெய்ன்ஸ், தீக்காயங்கள், சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு, மரபியல் சார்ந்த நோய்கள் ஆகியவற்றில் ஏற்படும் கண்ணுக்குத் தெரியாத ரத்த இழப்பு, அறுவைசிகிச்சை அல்லது விபத்துகளின்போது ஏற்படும் ரத்த இழப்பு போன்றவையும் அனீமியாவை அதிகப்படுத்துபவை.

எந்தக் காரணத்தால் இந்த அனீமியா என்ற ரத்தச்சோகை ஏற்பட்டாலும், இதன் அறிகுறிகள் பெரும்பாலும் பொதுவானவையாகவே உள்ளன. உடலின் தசைகள் மற்றும் திசுக்களுக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் பற்றாக்குறையினால் ஏற்படும் உடல் சோர்வு, மனச்சோர்வு, ஞாபக மறதி, தலைவலி, பசியின்மை, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல், படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம், கைகால்களில் வீக்கம் என அனைத்து உறுப்புகளிலும் தனது நோய் அறிகுறிகளைக் காட்டிவிடுகிறது அனீமியா.

அனீமியா அறிகுறி
அனீமியா அறிகுறி

இவற்றுக்கான பரிசோதனைகளில் முதன்மையானது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரிபார்ப்பது. இது மிகமிக எளிதான பரிசோதனையாகும். மேற்கூறப்பட்ட சராசரி அளவிலிருந்து ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில், அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதன் தீர்வுகளையும் உணவு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளின் பரிந்துரைகளையும் வழங்குகின்றனர் நம் மருத்துவர்கள்.

லான்செட் ஆய்வு
பதினைந்து முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட இந்திய ஆண்களில், நான்கில் ஒருவருக்கு அனீமியா உள்ளது.

இந்த அனீமியா வகைகளில், அயர்ன் மற்றும் ஃபோலிக் பற்றாக்குறையே அதிகமான காரணமாக இருக்கிறது என்பதால், "இரும்பில் முதலீடு செய்யுங்கள்.." (Invest in Iron) என்ற ஸ்த்ரீதான் திட்டம், 'அனீமியா முக்த் பாரத்' (Anaemia Free India) என்ற மத்திய அரசின் திட்டம் மற்றும் 'அவளைச் சிவப்பாக்குங்கள்' (Make her Red) என்ற இந்திய மகப்பேறு மருத்துவச் சங்கத்தின் இரும்புச்சத்து மருந்து திட்டம் எல்லாம் பெண்களைக் குறித்தே இருக்கையில், இந்திய ஆண்களிடையேயும் இந்த அயர்ன் டெஃபிஷியன்ஸி இப்போது அதிகம் காணப்படுகிறது என்ற சமீபத்திய லான்செட் ஆய்வு, நமது கவனத்தை ஈர்க்கிறது.

Anaemia Free India
Anaemia Free India

இந்த ஆய்வின்படி, 15 முதல் 50 வயதிற்குட்பட்ட இந்திய ஆண்களில் நான்கில் ஒருவருக்கு அனீமியா உள்ளது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 24% ஆண்களில் காணப்படும் இந்த ரத்தச்சோகையின் காரணமாக, உடல் சோர்வு, ஞாபகத்திறன் குறைவு, மனச் சோர்வு ஆகிய அனைத்தும் ஒன்று கூடி, தொழிலில் ஈடுபாடு குறைதல், உற்பத்தித் திறன் குறைவு, பணியிடத்தில் மன அழுத்தம் என ஓர் ஆணின் வாழ்க்கைத் தரத்தையும், ஆயுளையும்கூட குறைத்துவிடுவதால், நமது நாட்டின் உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது என்பதுதான் கவலை தரும் விஷயம்.

பெண்களைப் போல, தொடர் ரத்த இழப்பிற்கான காரணங்கள் இல்லை. மற்றும் கழிப்பிடச் சுகாதாரமும் நம்மிடையே பெரிதும் முன்னேறியுள்ள நிலையில்...

ஆண்களுக்கு அனீமியா என்பது ஓர் அலாரம் என்றே பார்க்கப்படுகிறது.
முழு பரிசோதனை
முழு பரிசோதனை

ஆம். ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து அனிமீயாக்களும் பெண்களுக்கு வருவதைப் போல வெறும் அயர்ன் டெஃபிஷியன்ஸியாய் மட்டும் இருக்காது என்பதால், அப்படி அவர்களுக்கு அனீமியா இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு மற்ற காரணங்களுக்கான முழுமையான பரிசோதனைகளையும் கண்டிப்பாக மேற்கொள்ளவேண்டிய தேவையை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

ஏனென்றால், இந்த ரத்தச்சோகைக்கான காரணங்களில் அல்சர், குடல் அழற்சி, மூலநோய், உணவு ஒவ்வாமை, சர்க்கரைநோய், சிறுநீரக நோய்கள், மருந்துகளால் ஏற்படும் ரத்தச்சோகை, மரபியல் சார்ந்த நோய்கள், இவை அனைத்திற்கும் மேலாக எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய் அல்லது புற்றுநோய்க்கான எச்சரிக்கை மணி போன்ற எதுவாகவும் இருக்கலாம் என்பதால் தான், ஆண்களின் அனீமியா இப்போது பயத்துடன் பார்க்கப்படுகிறது.

அனீமியா, ஓர் ஆணின் வாழ்க்கைத் தரத்தையும் ஆயுளையும் கூட குறைத்துவிடும்.
மருத்துவர் சசித்ரா தாமோதரன்

மேலும், தனது அவசர பணிச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, ஆண்கள் சமச்சீர் உணவின் அவசியத்தை மறந்ததாலும், துரித உணவுகள், மேற்கத்திய உணவுகள் ஆகியவற்றை எளிதில் ஏற்றுக்கொண்டதாலும், சமீப காலமாக அதிகரித்துவரும் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற மற்ற காரணங்களாலும் ஹீமோகுளோபின் பற்றாக்குறை தற்சமயம் ஆண்களுக்கிடையே அதிகரித்துவருகிறது என்பதால், ஆண்கள் தங்கள் வாழ்க்கை முறையையும் உற்றுநோக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆக.. பெண்கள் மட்டுமல்ல, முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் ஹீமோகுளோபின் அளவை தகுந்த இடைவெளிகளில் பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம்.
சசித்ரா தாமோதரன்
சசித்ரா தாமோதரன்

நாம் வாழும் பூமி, சமநிலைத் தன்மையுடன் மட்டுமே படைக்கப்பட்டுள்ளது. மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்திட ஹீமோகுளோபின் அளவு மட்டுமல்ல, அவனது உணவும் வாழ்க்கையும்கூட சமச்சீராக இருப்பது மிகவும் அவசியம். இயற்கையின் சமநிலையை எப்போது மனிதன் தனது உணவிலும் வாழ்விலும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறானோ அப்போதுதான், அவனது பிணிகளும் பனி போல அகலும்.