Published:Updated:

`அருவம்’ ஹீரோயினின் `அனோஸ்மியா’ பிரச்னை... எதையுமே நுகரமுடியாத நோய்க்கு மருத்துவத் தீர்வுகள்!

மல்லிகை, பிரியாணி, சாக்கடை, கேஸ் லீக்கேஜ்... உங்கள் நுகர்வுத்திறன் குறைந்துவருகிறதா... 'அனோஸ்மியா' அலர்ட்!

`வாசனை இல்லா வாழ்க்கை எப்படி இருக்கும்?' என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? காலை பரபரப்பில் அடுப்பில் கரிந்து கொண்டிருக்கும் தோசையோ, தெருவோரங்களில் மணத்துக்கொண்டிருக்கும் ரோஜா மாலையோ... எதையுமே நீங்கள் நுகர முடியாது. இப்படியெல்லாம் ஒரு பிரச்னை இருக்குமா என்றால், ஆம்... இருக்கிறது. அதுதான் `அனோஸ்மியா(Anosmia)'.

`அருவம்’ கேத்ரின் தெரசா
`அருவம்’ கேத்ரின் தெரசா

சமீபத்தில் வெளியான 'அருவம்' திரைப்படத்தில், நாயகி கேத்ரின் தெரசாவுக்கு இந்தப் பிரச்னை இருப்பதாக சித்திரிக்கப்பட்டிருக்கும். படத்தின் ஒரு காட்சியில், "நீங்களெல்லாம் சாப்பாடு நல்லா இருக்கா இல்லையான்னு முகர்ந்துபார்த்து கண்டுபிடிப்பீங்க. நான் அப்படி இல்ல. சாப்பிட்டுப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்குவேன்" என்பார் நாயகி. மண்வாசனை முதல் தாய்ப்பால் வாசனை வரை, மல்லிகை முதல் சாக்கடை வரை எதையுமே நுகர முடியாத நிலைதான், அனோஸ்மியா.

அனோஸ்மியா குறித்து காது, மூக்கு, தொண்டை நிபுணர் வேலுமணியிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார் அவர்.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் வேலுமணி
காது, மூக்கு, தொண்டை நிபுணர் வேலுமணி

அனோஸ்மியா என்பது என்ன?

மூக்கின் மேல்பகுதியான 'ஆல்ஃபேக்டரி செல்ஸ் (Olfactory cells)' என்ற நரம்புப் பகுதியில், வாசனையை மூளைக்குக் கொண்டு சேர்க்கும் நரம்புகள் இருக்கும். இந்தப் பகுதியில் பாதிப்பு ஏதேனும் இருந்தால், நுகர்வுத்திறன் முறையாக மூளைக்குச் செல்லாது. அதாவது, வாசனைத்திறன் குறைந்துவிடும். அதுதான் அனோஸ்மியா பிரச்னை. அனோஸ்மியா இருப்பவர்களுக்கு வாசனைத்திறன் முற்றிலுமாக இருக்காது என்று சொல்லிவிட முடியாது. பிரச்னையின் தீவிரம், அடிப்படைக் காரணங்களைப் பொறுத்து பாதிப்பு ஏற்படும். அந்த வகையில், ஓரளவு மட்டுமே வாசனைத்திறன் உள்ளவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எதனால் ஏற்படுகிறது அனோஸ்மியா?

* விபத்தின்போது மூக்கு மற்றும் அதன் நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவு

* சைனஸ் போன்ற நோய் பாதிப்பின் பக்கவிளைவு

* அலர்ஜி காரணமாக நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவது

* மூக்கின் உட்பகுதியில், கட்டிகள் அல்லது அதீத திசு வளர்ச்சி இருப்பது

* ஆன்டிபயாட்டிக்ஸ், மன அழுத்தம் போக்கும் ஆன்டி டிப்ரஸன்ஸ் போன்ற மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்வது

Smelling Sense
Smelling Sense

* மருந்து, மாத்திரைகள் சார்ந்த ஒவ்வாமை ஏற்படுவது

* பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும் இடங்களில் அன்றாடம் அதீத நேரம் செலவிடுவதால் ஏற்படும் நரம்பு பாதிப்புகள்

* வயது முதிர்வு

*புகைப்பழக்கம்

* மூக்கின் எலும்புகளில் பிறவிக்குறைபாடு இருப்பது

தீர்வு என்ன?

Steroids
Steroids

பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். அந்த தீவிரத்தன்மை என்பது, காரணத்தைப் பொறுத்து அமையும். உதாரணமாக, பிறவிக்குறைபாடு எனும்போது சரிசெய்வது கடினம். மற்ற காரணிகளைக் குணப்படுத்துவது சாத்தியம். ஆல்ஃபேக்டரி திசுக்கள் எதனால் பாதிக்கப்பட்டதோ அதற்கான சிகிச்சையை முன்னெடுத்தால், சங்கிலித் தொடர் பலனாக அனோஸ்மியா பிரச்னை சரியாகிவிடும்.

பிறவிக்குறைபாட்டை சரிசெய்வது ஏன் கடினம்?

பிறவிக்குறைபாடு என்றால் மூளையிலுள்ள ஹெர்னியேஷன் என்ற பகுதி பாதிக்கப்பட்டிருக்கும். மேலும், வாசனை நரம்புகள் உருவாகாமலேயே இருக்கும். அப்பகுதியில் எலும்பு சார்ந்த பிரச்னைகளும் இருக்கும். மூளைக்கு வாசனை சக்தியைக் கொண்டுசெல்லும் பாதையிலுள்ள, இயற்கை அமைப்பு சார்ந்த பிரச்னைகளை சிகிச்சைமூலம் சரிசெய்வது சாத்தியமில்லை.

அனோஸ்மியா
அனோஸ்மியா

எப்படிக் கண்டறிவது? சிகிச்சை என்ன?

நுகர்வுத் திறன் குறைவதை, சுயமாக உணர்வது மட்டுமே பிரச்னையைக் கண்டறிவதற்கான ஒரே வழி. நுகர்ந்துபார்க்கும் திறன் குறையும்போது, உணவைக்கூட சாப்பிட்டுப் பார்த்தால்தான், அது சாப்பிட உகந்ததா என்பதை அறிய முடியும். நுகர்வுத்திறனுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் பணியில் இருப்பவர்களால் மட்டுமே மிக எளிதில் அனோஸ்மியா பாதிப்பிருப்பதை உணரமுடியும். இது கவனிக்கப்படாமல் இருக்கும்போது, அதன் தீவிரம் அதிகரிக்கலாம்.

சில நேரங்களில், வேறு ஏதேனும் உடல் உபாதைக்கும் இது அறிகுறியாக இருக்கலாம்.

அனோஸ்மியாவை கண்டுகொள்ளாமல் இருக்கும்போது, பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கும் என்பதோடு, சில பர்சனல் பிரச்னைகளும் ஏற்படத்தொடங்கும். உதாரணத்துக்கு துர்நாற்றங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, வீடுகளில் கேஸ் லீக்கானால் அதை உணராதிருப்பது, அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழல்களில்கூட அதை தெரிந்துகொள்ளாமல் இருக்கும் நிலை என, இவையெல்லாம் ஏற்படலாம்.

`இந்தப் பிரச்னை இருப்பவருக்கு இந்தப் பாதிப்பு வரலாம்' என அனோஸ்மியாவில் வகைப்படுத்த முடியாது என்பதால், அனைவருமே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நுகர்வுத் திறன் குறைவதை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

நுகர்வுத் திறன் குறைவதை, சுயமாக உணர்வது மட்டுமே அனோஸ்மியைக் கண்டறிவதற்கான ஒரே வழி.
டாக்டர் வேலுமணி
``ஒரு லட்ச ரூபாய் இருந்தா என் பொண்ணுக்கு காது கேட்டிரும்!'' - உருகும் தஞ்சாவூர் செந்தமிழ்செல்வி

எண்டோஸ்கோபி, சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் நோய் உறுதிசெய்யப்படும். நரம்பு மண்டலத்தைச் சரிசெய்யும் விதமாக ஸ்டீராய்ட்ஸ் மற்றும் மாத்திரைகள் வழங்கப்படும். பிரச்னை மிகத் தீவிரமாக இருப்பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்" என்றார் டாக்டர் வேலுமணி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு