Election bannerElection banner
Published:Updated:

கர்ப்ப காலத்தில் அனுஷ்கா ஷர்மா செய்த சிரசாசனம் சரியா... மருத்துவம் சொல்வது என்ன?

Virat Kohli and Anushka sharma
Virat Kohli and Anushka sharma ( Photo: anushkasharma / Instagram )

கருவுற்ற காலத்தில் இதுபோன்ற ஆசனங்களைச் செய்யலாமா?

தாய்மையடைந்திருக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மேடிட்ட வயிறோடு தலைகீழாக நின்றபடி சிரசாசனம் செய்வது போன்ற புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படம் சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது என்றும், யோகா நிபுணரின் முறையான வழிகாட்டுதல்களின்படி இந்தப் பயிற்சியை தான் மேற்கொண்டதாகவும் அதில் அனுஷ்கா குறிப்பிட்டிருந்தார். யோகா தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான அங்கம் என்றும், பல வருடங்களாகத்தான் சிரசாசனம் செய்து வருவதாகவும் அதில் அனுஷ்கா சொல்லியிருக்கிறார்.

Virat Kohli and Anushka sharma
Virat Kohli and Anushka sharma
Photo: anushkasharma / Instagram

அனுஷ்காவின் இந்தப் புகைப்படம் மக்களின் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. `தாய்மையடைந்திருக்கும் நேரத்தில் இதுபோன்ற பயிற்சி தேவையா?' என்று ஒரு சாராரும், `இப்போதும்கூட அனுஷ்கா ஃபிட்னெஸ்ஸில் எவ்வளவு அக்கறை காட்டுகிறார்' என்று மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருவுற்ற காலத்தில் இதுபோன்ற ஆசனங்களைச் செய்யலாமா?

யோகா இயற்கை மருத்துவர் தீபாவிடம் பேசினோம்.

``கர்ப்பகாலத்தில் யோகப்பயிற்சிகள் செய்யலாம். கர்ப்பகாலத்தின் மூன்று ட்ரைமெஸ்டர்களிலுமே யோகாவைத் தொடரலாம். ஆனால், முறையான வழிகாட்டுதலின்படி அவற்றைச் செய்ய வேண்டும். அனுஷ்காவைப் பொறுத்தவரையில் முறையான வழிகாட்டுதலின்படி சிரசாசனத்தைச் செய்ததாகக் கூறியிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட ஆசனத்தை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதே என் கருத்து.

இயற்கை மருத்துவர் தீபா
இயற்கை மருத்துவர் தீபா

ஒரு செலிப்ரிட்டி இதுபோலச் செய்யும்போது அதைப் பார்க்கும் மக்களில் பலருக்கு, `கர்ப்பகாலத்தில்கூட இதுபோன்ற ஆசனங்களைச் செய்யலாம் போலிருக்கிறது' என்கிற எண்ணம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பொதுவாக கர்ப்பிணிகள் எல்லோரது உடலின் தன்மையும், ஆரோக்கியமும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ற யோகாசனப் பயிற்சிகளை மருத்துவரின் வழிகாட்டுதலின்படி செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக யோகாவில் எத்தனையோ ஆசனங்கள் இருக்க, சிரசாசனம்தான் செய்ய வேண்டும் என்று எந்தவொரு அவசியமும் கிடையாது. சிசேரியன் இல்லாமல் நார்மல் டெலிவரி மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் எத்தனையோ சிறப்பான யோகப்பயிற்சிகள் இருக்கின்றன. எனவே, கருவுற்ற பெண்கள் அவர்களது மூன்று ட்ரைமெஸ்டர்களிலும் குறிப்பிட்ட சில யோகப் பயிற்சிகளை தாராளமாகச் செய்யலாம். ஆனால், சிரசாசனம் போன்ற ஆசனங்களைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

அனுஷ்காவைப் பொறுத்தவரையில் அவர் மெலிந்த உடல்வாகு கொண்டவர். நீண்டகாலமாக யோகா செய்து வருபவர். குறிப்பாக அவர் சிரசாசனத்தைத் தொடர்ந்து செய்துவருவதாகவும் கூறியிருக்கிறார். அதனால் இது அவருக்கு இயல்பான ஒன்றாக இருப்பதால் அவர் இதைச் செய்திருக்கிறார். ஆனால், அனுஷ்காவை ஒரு முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு கருவுற்ற பெண்கள் இதைச் செய்ய முயலக்கூடாது.

Pregnancy
Pregnancy
Pixabay

நம்முடைய உடலின் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவுமே எந்தவோர் ஆசனத்தையும் நாம் செய்கிறோம். ஆனால், கர்ப்பகாலத்தில் சிரசாசனம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. சிரசாசனத்தில் தலைகீழாக நிற்கும்போது, தொப்புள்கொடியில் அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தைக்குக் கொஞ்சநேரம் ரத்த ஓட்டம் நின்றுபோவதற்கான வாய்ப்புகள்கூட உண்டாகலாம். இவைதவிர Abdomen Pressure எனப்படும் வயிற்றின் அழுத்தம் அதிகமாவதற்கான வாய்ப்புகளும் உண்டு. தலைகீழாக நின்றுவிட்டு பழைய நிலைக்குச் சட்டென்று திரும்பும்போது சிலருக்கு மயக்கம்கூட வரலாம். அதுமட்டுமல்லாமல் வேறு சில உடல் பிரச்னைகள் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் இதுபோன்ற ஆசனங்களைச் செய்வது பெரும் ஆபத்தைக் கொடுத்துவிடும். தாய்மையைக் கொண்டாட வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கவனமுடனும் பாதுகாப்புடனும் இருப்பதும் அவசியம்.

யோகாவும் தாய்மைப் பேறும்

கருவுற்ற பிறகு செய்யக்கூடிய யோகப் பயிற்சிகளைப் போலவே கருவுறுதலுக்கு முன்பாக கருப்பையை வலுப்படுத்த உதவும் யோகப் பயிற்சிகளும் இருக்கின்றன. கருவுற்ற நாள் முதல் பிரசவம் ஆவதற்கு முன்புவரை என்னென்ன யோகப்பயிற்சிகளை செய்யலாம், மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம், என்ன மாதிரியான தியானப் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்பதற்கு முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அதனால் எதையுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக் கூடாது.

Pregnancy
Pregnancy

கர்ப்பகாலத்தில் சில பெண்கள் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து தாங்களாகவே வீட்டில் யோகப் பயிற்சிகளை செய்வதுண்டு. ஆனால், இப்படி ஒருபோதும் செய்யக் கூடாது. இந்தியா முழுக்கவே BNYS, அதாவது The Bachelor of Naturopathy and Yogic Sciences படித்த எங்களைப் போன்ற யோகா இயற்கை மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் ஒரு யோகா இயற்கை மருத்துவர் இருக்கிறார். அதேபோல மெட்டர்னிட்டி வார்டு உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் யோகா இயற்கை மருத்துவர் இருக்கிறார். அவர்களை அணுகி அவர்களது வழிகாட்டுதலின்படி யோகப்பயிற்சிகளை மேற்கொள்வது பாதுகாப்பானது.

கர்ப்பிணிப் பெண்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு பிரச்னை, ரத்த சோகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் யோகா இயற்கை மருத்துவர்கள் அவர்களது உடல்நிலையின் தன்மைக்கேற்ற ஆசனங்களை சொல்லித் தருவதோடு மட்டுமல்லாமல் தங்களது மேற்பார்வையின்கீழ் கர்ப்பிணிப் பெண்களை யோகப்பயிற்சிகள் மேற்கொள்ள வைப்பார்கள்.

Yoga
Yoga
Vikatan

யோகா இயற்கை மருத்துவர்கள் யோகப் பயிற்சிகளை ஒரு சிகிச்சை முறையாகக் கொடுப்பார்கள். இதை நாங்கள் Therapeutic yoga என்று அழைப்போம். உதாரணத்துக்கு கருவுற்ற ஒரு பெண்ணுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அவரது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், அவரது மன அழுத்தத்தைப் போக்கவும் அதே நேரத்தில் நார்மல் டெலிவரி நடப்பதற்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

மொத்தத்தில், கருவுற்ற காலத்தில் பெண்கள் தாராளமாக யோகா, உடற்பயிற்சிகள் செய்யலாம். ஆனால், அதற்கு மருத்துவர் / நிபுணர் ஆலோசனையும், அவசியமென்றால் கண்காணிப்பும் தேவை'' என்கிறார் யோகா இயற்கை மருத்துவர் தீபா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு