Published:Updated:

பெண்களுக்கு `பிளாடர்’ பெரியதா..? `மிக மிக அவசரம்’ சொல்லும் செய்தி உண்மையா?!

ஓர் உயிர் பிறக்கும்போது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சிறுநீர்ப்பையின் அளவு என்பது ஒரே அளவில்தான் இருக்கும். சுமார் 300 முதல் 400 மி.லி கொள்ளளவு கொண்டதாக சிறுநீர்ப்பை இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமூக அவலங்கள், பிரச்னைகளைப் பற்றிப் பேசும் திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்த மாதிரிப் படங்கள் வசூலில் சாதிக்கின்றனவோ இல்லையோ மனித மனங்களை வென்றுவிடும். அந்த வகையில் ஒரு பெண் போலீஸ் பொதுவெளியில் படும் அவலத்தைப் பேச வருகிறது `மிக மிக அவசரம்' திரைப்படம். தீபாவளிக்குப் பின்னர் ரிலீஸாக உள்ள இந்தத் திரைப்படத்தின் பிரிவ்யூ ஷோ பிரபலங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் திரையிடப்பட்டிருக்கிறது.

சிறுநீரகம்
சிறுநீரகம்
Pixabay

அந்தப் படத்தில் சிறுநீர் கழிக்க முடியாமல் பெண் போலீஸ் தவிக்கும் காட்சியில், `பொம்பளைங்களுக்கு பிளாடர் பெரிசுதான்.. அதனால அடக்கிக்கோ' என்று ஒரு வசனம் வருகிறது. உண்மையில் பெண்களுக்கு `யூரினரி பிளாடர்' (Urinary Bladder) எனப்படும் சிறுநீர்ப்பையின் அளவு பெரியதா என்று சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.

``ஆண்களைப் பொறுத்தவரை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்ட உடன் கழிவறைகள் இருக்கின்றனவோ இல்லையோ அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் எங்காவது சிறுநீரைக் கழித்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் சிறுவயதிலிருந்தே இடம், பொருள் பார்த்துதான் சிறுநீர் கழிக்கும் வகையில் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அதனால் பல நேரங்களில் சிறுநீரை அடக்கும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து சிறுநீரை அடக்கி அடக்கி, பெண்களின் சிறுநீர்ப்பை தானாகவே பெரிதாகிவிடுகிறது.

Dr.Ravichandran
Dr.Ravichandran

ஓர் உயிர் பிறக்கும்போது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சிறுநீர்ப்பையின் அளவு என்பது ஒரே அளவில்தான் இருக்கும். சுமார் 300 முதல் 400 மி.லி கொள்ளளவு கொண்டதாக சிறுநீர்ப்பை இருக்கும். ஆனால், பெண்கள் சிறுநீரை அடக்கிப் பழகுவதால் வயதாக வயதாக அவர்களின் சிறுநீர்ப்பையின் அளவு ஒரு லிட்டர் வரை கொள்ளளவு கொண்டதாக மாறிவிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லி போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் பல பெண்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் சிறுநீர் கழிப்பதே கிடையாது. அலுவலகத்தில் பொதுக்கழிப்பிடங்கள், முறையான கழிப்பிட வசதி இல்லாத நிலை போன்றவற்றால் அவர்கள் மாலை அல்லது இரவு நேரத்தில் வீடு திரும்பிய பிறகே சிறுநீர் கழிக்கிறார்கள். இது நீடிக்கும்போது ஒருகட்டத்தில் சிறுநீர் கழிக்கவே சிரமப்படுவார்கள். கழிவறை வசதி இல்லாத, சிறுநீர் கழிப்பதற்கான சூழல் அமையாத நாடுகளிலேயே இதுபோன்ற பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

bladder
bladder
Freepik

மேற்கத்திய நாடுகளில் அதிக அளவில் பொதுக் கழிவறைகள் உள்ளன. நெடுஞ்சாலைகளில்கூட போதுமான அளவு கழிவறைகள் உள்ளன. இதனால் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை. ஆனால், இந்தியப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

சாதாரணமாக, மூன்று முதல் நான்கு மணி நேர இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர் கழிப்பதற்கான வசதி, சூழல் இல்லாத பட்சத்தில் அதிகபட்சம் அரை மணி நேரம் தாமதிக்கலாம். போதுமான இடைவெளிகளில் சிறுநீர் கழித்தால் சிறுநீர்ப்பை அதன் இயற்கையான அளவிலேயே இருக்கும். சிறுநீரை வெளியேற்றாமல் அதிக நேரம் அடக்குவதால் நோய்த்தொற்று ஏற்படும். சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்ப்பையின் தசைகள் சுருங்கி விரியும். சிறுநீர்ப்பை பெரிதாகும்போது சுருங்கி விரிவது முறையாக நடைபெறாது.

சிறுநீர் கழிக்க வழியில்லை என்பதால் சிலர் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறான காரியம்.
டாக்டர் ரவிச்சந்திரன்

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கும்போது கட்டுப்படுத்த இயலாமல் சில நேரங்களில் கசிய நேரிடலாம். சிலர் சிறுநீரை முழுவதுமாக வெளியேற்றமாட்டார்கள். இதனால் குறிப்பிட்ட அளவு சிறுநீர் சிறுநீர்ப்பையிலேயே தேங்கிவிடும். நேரம் அதிகரிக்க அதிகரிக்க அதில் கூடுதல் சிறுநீர் சேரும்போது கசிய நேரிடும்.

சிறுநீர் கழிக்க வழியில்லை என்பதால் சிலர் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறான காரியம். பெண்களுக்கு மலத்துவாரம், வெஜைனா, சிறுநீர்க்குழாய் எல்லாம் அருகருகே இருக்கும். மலத்துவாரத்தில் எப்போதும் பாக்டீரியா இருந்துகொண்டே இருக்கும். பெண்களின் சிறுநீர்க்குழாய் மிகவும் சிறியது. 4 செ.மீ. நீளம்தான் இருக்கும். அதனால் மலத்துவாரத்தில் இருக்கும் பாக்டீரியா, சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பாதைக்குள் சென்றுவிடும்.

சிறுநீர்ப்பை
சிறுநீர்ப்பை
Freepik

பாக்டீரியா சிறுநீர்ப்பாதையில் செல்வதால் நோய்த்தொற்று ஏற்படும். இதைத்தான் சிறுநீர்ப்பாதை தொற்று என்கிறோம். ஆனால், அடிக்கடி தண்ணீர் குடித்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பாதையில் தேங்கியிருக்கும் பாக்டீரியா வெளியேற்றப்படும்" என்றார்.

சங்கடம் தரும் சிறுநீர் வாடை - காரணங்களும் தீர்வுகளும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு