"மனித உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளுக்கும் வயதாவது இயல்பு. அதேபோல கண்களுக்கும் முதுமை உண்டு..." என்கிறார் சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.
புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களை வாசிக்கும்போதும் மொபைலை பார்க்கும் போதும் சிலர் கண்களைச் சுருக்கி மிகுந்த சிரமத்துடன் பார்ப்பதைக் காணலாம். இந்தப் பிரச்னைக்கு சிலர் ரீடிங் கண்ணாடி பயன்படுத்துவது உண்டு. ரீடிங் கண்ணாடி பயன்படுத்த தொடங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்குகிறார் டாக்டர் வசுமதி.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS"40 வயதில் அடி எடுத்து வைக்கும்போது கண்களில் உள்ள இயற்கையான லென்ஸ் பகுதியானது தன் நெகிழ் தன்மையை இழக்கத் தொடங்கும். இளவயதில் காட்சிகளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல் அல்லாமல் பார்வையில் லேசான தடுமாற்றத்தை உணரத் தொடங்குவார்கள்.

காட்சிகளைக் காண்பதில் மட்டுமன்றி புத்தகங்கள், செய்தித்தாள்கள் வாசிப்பதிலும் ஒருவித தடுமாற்றத்தை உணர்வார்கள். மருத்துவ ரீதியாக இந்தப் பிரச்சனையை, ''ப்ரெஸ்பையோபியா' (Presbyopia) என்று சொல்கிறோம். முன்பு போல அல்லாமல் வாசிப்பதிலும், மொபைல் திரைகளைப் பார்ப்பதிலும் சிரமம் ஏற்படுவதால் பலரும் இனி நமக்கு ரீடிங் கண்ணாடி தேவையோ என்று யோசிக்கத் தொடங்குவார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த பிரச்னையின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
புத்தகம் அல்லது மொபைல் திரையைப் பார்க்கும்போது அதில் உள்ள எழுத்துகள் மங்கலாகத் தெரிவதுபோல உணர்வார்கள். அதுவே சற்று தள்ளி வைத்துப் படிக்கும்போது தெளிவாகத் தெரிவதுபோல இருக்கும்.
மங்கலான வெளிச்சத்தில் சிறிய எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் இருக்கும். வாசிக்கும்போது, தைக்கும் போது.மற்றும் இன்னும் சில வேலைகளைச் செய்யும்போது கண்களில் ஒருவித அசெளகர்யம் ஏற்படுவதுபோல இருக்கும். இந்த விஷயங்களைச் செய்யும்போது தலை வலிப்பது போலவும் உணர்வார்கள்.

ரீடிங் கண்ணாடி தேவையா?
ரீடிங் கண்ணாடிகளின் பவர் ஆனது diopters என்ற யூனிட்டுகளால் அளவிடப்படுகிறது. குறைந்தபட்சமாக 1.00 டையோப்டர் முதல் அதிகபட்சமாக 4.00 டையோப்டர் வரை ரீடிங் கண்ணாடிகளின் பவரானது வேறுபடும். புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களைப் படிப்பதிலும், செல்போன் திரையைப் பார்ப்பதிலும் சிரமத்தை உணரும் பலரும் தாமாகவே கண்ணாடி கடைகளுக்குச் சென்று ரீடிங் கண்ணாடியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
ஒருவேளை உங்களுக்கு பார்வை தொடர்பாக வேறு பிரச்னைகள் இருந்து, அதன் விளைவாகவும் எழுத்துகளை மற்றும் காட்சிகளைப் பார்ப்பதில் சிரமம் இருக்கக்கூடும். அந்நிலையில் நீங்களாக வாங்கிப் பயன்படுத்தும் ரிடிங் கண்ணாடி உங்களுக்கு ஏற்கெனவே இருக்கும் பார்வை தொடர்பான பிரச்னையை சரிபடுத்தாது. எனவே கண் மருத்துவரை அணுகி ஒருமுறை முழுமையான கண் பரிசோதனையை மேற்கொண்டு உங்களுக்கு இருக்கும் பவருக்கு ஏற்ப பொருத்தமான கண்ணாடியை உபயோகிப்பது தான் சரியானது.
எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
உங்களுக்கு பார்வையில் திடீரென பெரிய மாற்றம் ஏற்படும் போது...
எல்லாமே மங்கலாகத் தெரிவதாக உணரும்போது.
கண்களில் வலி இருந்தால்...
வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்களில் அசௌகர்யத்தை உணர்ந்தால்...
டபுள் விஷன் எனப்படும் பிரச்னை இருந்தால்..அதாவது காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரியும்போது...

40 ப்ளஸ் வயதில் உள்ள அனைவரும்...
40 வயது என்பது நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன் உள்ளிட்ட பல நோய்களுக்கான ஆரம்ப வயதாகவும் இருக்கிறது..குறிப்பாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு பார்வை தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். 40 வயதுவரை நீரிழிவே கண்டுபிடிக்கப்படாமல் இருப்பவர்கள் பலர் உண்டு..அவர்களுக்கெல்லாம் ரத்தச் சர்க்கரை அளவுடன், பார்வை தொடர்பான பிரச்னையும் பெரிதாகிக்கொண்டே இருந்திருக்கும்.
எனவே வாசிப்பதில் சிரமம் இருப்பதாக உணர்ந்தால் நீங்களாக கண்ணாடி கடைக்குச் சென்று ரீடிங் கிளாஸ் வாங்கிப் பயன்படுத்துவது மட்டுமே தீர்வாகாது. நீரிழிவின் பாதிப்பால் ஏற்பட்ட பார்வை பிரச்னையா என்பதையும் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
வாசிப்பதில் சிரமத்தை உணர்ந்தாலோ, காட்சிகள் மங்கலாகத் தெரிவதை உணர்ந்தாலோ அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக கண் மருத்துவரை அணுகி தேவைப்பட்டால் ரிடிங் கண்ணாடி பயன்படுத்த தொடங்குவது அவசியம். இது பார்வை தொடர்பான உங்கள் பிரச்னை தீவிரம் அடையாமல் தடுக்கும்.
- பார்போம்
- ராஜலட்சுமி