Published:Updated:

இளம் வயதில் தூங்காமல் இருந்தால் டிமென்ஷியா வருமா? - புதிய ஆய்வின் முடிவுகளும் சந்தேகங்களும்!

மறக்கடிக்கும் டிமென்ஷியா!
மறக்கடிக்கும் டிமென்ஷியா!

தூக்கமின்மைக்கும் டிமென்ஷியாவுக்கும் உள்ள தொடர்பை அறிய சில மனநோயாளிகளை அவர்களின் 65 வயதுக்கு முன்னர் இவர்கள் தனியாக ஆராய்ச்சிக்கென தேர்வு செய்துள்ளார்கள். அதில் மனச்சோர்வு டிமென்ஷியாவுக்கு முக்கிய காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தூக்கத்துக்கும், மனச்சோர்வால் ஏற்படும் ஒருவித மறதியான டிமென்ஷியாவுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா எனப் பல வருடங்களாக பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனாலும், தெளிவான பதில் கிடைக்கவில்லை. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கை, தற்போது 50 முதல் 60 வயதில் உள்ளவர்கள், ஆறு அல்லது அதற்கும் குறைவான மணி நேரம் மட்டுமே இரவு தூக்கம் இருப்பவர்களுக்கு 70 வயது ஆனதும் டிமென்ஷியா வருவதற்கான அபாயம் உள்ளதாக அடித்துக் கூறுகிறது.

இந்த ஆராய்ச்சிக் கட்டுரை `நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் 25 வயதான 8,000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் 50 வயதுவரை ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது, சுமார் 25 ஆண்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு தேவையான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவு பல கேள்விகளை எழுப்பி இருந்தாலும் அதன் முடிவு ஒரு தெளிவையும் கொடுத்துள்ளது. 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்கம் கொண்டவர்களுக்கு, அதிகமாக உறங்குபவர்களைவிட சுமார் 30 சதவிகிதம், டிமென்ஷியா வருவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. சராசரியாக ஒருவருக்குத் தேவைப்படும் தூக்கத்தின் அளவு 7 மணி நேரம் எனவும், குறைவான தூக்க நிலையில் உள்ளவர்கள் சுமார் 30 வருடங்களில் நோய் தாக்குதலுக்கு உட்படுவார்கள் என்றும் கூறுகிறது இந்த ஆய்வு முடிவு.

Insomnia
Insomnia

இந்த ஆராய்ச்சியில் எந்த நேரடி தொடர்புமில்லாத மருத்துவர் கிரஸ்டைன் யஃப்பே என்பவர் இதை மிகவும் பாராட்டுகிறார்.இவர் யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியாவில் நியூராலஜி மற்றும் சைக்காலஜி துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

நம் மூளைப் பகுதியில் அல்சைமர் நிலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை புரதத்தின் சேகரிப்பு ஏற்படுவதுதான் டிமென்ஷியாவின் தொடக்கம் . இந்த சேகரிப்புக்கள் ஞாபகமறதி மற்றும் மந்த சிந்தனை செயல்பாடு வெளியில் தெரிய ஆரம்பிப்பதற்கு 15 முதல் 20 வருடங்கள் முன்பாகவே நிகழத் தொடங்குகின்றன. இதற்கும் தூக்கமின்மைக்கும் நேரடியான தொடர்பு உள்ளதால், தூக்கமின்மையே வரப்போகும் டிமென்ஷியாவை சுட்டிக்காட்டும் ஓர் குறிப்பாகக் கருதலாம்.
இது தொடர்பாக டாக்டர் எரிக் ம்யூசெயிக் என்பவர் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர் சென்டர் ஆன் பயலாஜிகல் ரிதம்ஸ் அண்ட் ஸ்லீப் எனும் வாஷிங்டன் நகரிலுள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நியூராலஜிஸ்டாகவும் நிறுவனத்தின் உதவி இயக்குநராகவும் பணி புரிகிறார்.

இந்த ஆராய்ச்சியில் இவரும் நேரடியாகப் பங்கு கொள்ளவில்லை. இவரின் கேள்வி, ``இது கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பதைப்போல் உள்ளது. தூக்கமின்மைதான் புரத சேமிப்பை ஏற்படுத்துகிறதா அல்லது புரத சேமிப்பால் தூக்கம் வராமல் போகிறதா" என்பதே.
``இந்த ஆராய்ச்சியின் முடிவு இதைப்போன்ற கேள்விகளை எழுப்பினாலும், இதை நல்லதொரு தொடக்கமாகத்தான் கொள்ள வேண்டும். காரணம் வயது குறைவான பலரை ஆராய்ச்சியில் பங்கு கொள்ள வைத்திருப்பதால், பல நேரம் அல்சைமர் நோய் அல்லது புரத சேர்க்கை அல்லது மனக்குழப்பங்கள் போன்றவை ஏற்படுவதற்கு முன்பாகவே ஒரு சிவப்பு விளக்கு எரியத் தொடங்கிவிடுகிறது" என்கிறார் எரிக்.

இதே போல் Whitehall II என்று கூறப்படும் ஆராய்ச்சி 1980 தொடக்கத்தில் நடத்தப்பட்டது. இதில் பிரிட்டிஷ் அரசுப் பணியாளர்கள் 7,959 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டார்கள். இவர்களின் தூக்கம் பற்றிய தகவல் 1985 முதல் 2016 வரை சுமார் ஆறு முறை திரட்டப்பட்டது. தகவல்களை ஆராய்ந்த பின் வெளியிடப்பட்ட முடிவு, இவர்களில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட 521 நபர்கள் அவர்களது 77 வது வயதில் டிமென்ஷியா நோயால் தாக்கப்பட்டுள்ளனர் என்கிறது.

Dementia -Repesentational Image
Dementia -Repesentational Image
Image by Gerd Altmann from Pixabay

இந்த ஆராய்ச்சி முறை தொடர்பாக இதில் ஈடுபட்ட செவெரீன் சாபியா என்பவர் சிலவற்றைக் கூறி உள்ளார். இவர் பிரென்ச் பப்ளிக் ஹெல்த் ரிசரச் சென்டரான இன்செர்னில் தொற்றுநோயியல் நிபுணராகப் பணிபுரிகிறார். இந்த ஆராய்ச்சியில் ஒருவரின் தூக்க நிலை அல்லது டிமென்ஷியா நிலையை ஏற்படுத்தக்கூடிய பல காரணிகளான புகை பிடித்தல், குடிப்பழக்கம், உடற்பயிற்சி நிலை, பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI), பழம் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், படிப்பு நிலை, திருமண விவரம், ஹைபர் டென்ஷன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பலவற்றை தொடர்பு படுத்திப் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.

மேலும் தூக்கமின்மைக்கும் டிமென்ஷியாவுக்கும் உள்ள தொடர்பை அறிய சில மனநோயாளிகளை அவர்களின் 65 வயதுக்கு முன்னர் இவர்கள் தனியாக ஆராய்ச்சிக்கென தேர்வு செய்துள்ளார்கள். அதில் மனச்சோர்வு டிமென்ஷியாவுக்கு முக்கிய காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. தவிர, மனச்சோர்வுக்கும் தூக்கமின்மைக்கும் உள்ள நேரடி தொடர்பும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதே போல் மனநோய் இல்லாதவர்கள் மீதும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி, தூக்கமின்மைக்கும் டிமென்ஷியா நிலைக்கும் தொடர்பு இருப்பதாகக் காட்டியுள்ளது.

இதன் அடுத்த நிலையாக எத்தனை நபர்கள் தூக்க மாத்திரை எடுத்துக்கொள்கிறார்கள், அதில் எத்தனை நபர்களுக்கு ApoE4 என்ற அணுப் பிறழ்வு நிலையில் உள்ளது என்றும் தகவல்களைச் சேகரித்துள்ளார்கள். இந்த அணுப் பிறழ்வு, அல்சைமர் வருவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியின் மற்றும் ஒரு முடிவு, தூக்க நிலைக்கும் நோய்க்கும் உண்டான தொடர்பில் ஆண் பெண் என்ற பாலின வித்தியாசம் இல்லை எனச் சொல்கிறது. யுனிவர்சிட்டி ஆஃப் மினசோடாவில் தொற்று நோயியல் மற்றும் கம்யூனிடி ஹெல்த் தொடர்பில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் பமீலா லுட்சே என்பவர் இந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

``இந்தக் கண்டுபிடிப்பு மிகச் சிறிய அளவில் தூக்கத்துக்கும் டிமென்ஷியாவுக்குமான தொடர்பை நிரூபித்துள்ளது. தூக்கமின்மை என்பது பலருக்கு உள்ளது. ஆகவே, ஒரு துளி அளவு இதற்கும் நோய்க்கும் தொடர்பு இருக்குமென்றால் கூட அது சமுதாயத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்க வல்லது."

Dementia - representational image
Dementia - representational image
Image by Gordon Johnson from Pixabay

எல்லா ஆராய்ச்சிகளைப்போல இதிலும் சில குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்று, இந்த ஆராய்ச்சிக்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் தனி நபர்களால் கொடுக்கப்பட்டவை. இதன் நம்பகத்தன்மை சற்றே கேள்விக்குரியதே. இதற்குப் பதிலாக, இந்த ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நபர்களின் தூக்க நேரம் அக்சிலரோமீட்டர் கொண்டு கண்டறியப்பட்டதாகவும் அந்தத் தகவல் அவர்கள் கூறி இருந்த தூக்க நேரத்துடன் சரியாக இருந்ததாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்த முறை சரிபார்ப்பு அவர்களின் 69 வயதுக்கு மேல் தான் செய்யப்பட்டது. அவர்களின் சிறிய வயதில் இதே போல் செய்யப்பட்டிருந்தால், தகவல்களின் நம்பகத்தன்மை அதிகரித்திருக்கும்.

இந்த ஆராய்ச்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் வெள்ளைத்தோல் கொண்டவர்களும், படித்தவர்களும் உடல் நிலையில் ஆரோக்கியமானவர்களுமாக இருக்கிறார்கள். ஆனால், பிரிட்டனின் மொத்த மக்கள் தொகை முழுவதும் அவ்வாறில்லை. தவிர, மின்னணு மருத்துவ தகவல்களை டிமென்ஷியா நோய் பற்றி ஆராய்வதற்கு உபயோகிக்கப்பட்டபோது, தேவையான தகவல்கள் விட்டுப்போயிருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் நோய் வகை பற்றிய ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி கல்லூரியின் பேராசிரியர் ராபர்ட் ஹோவார்ட் என்பவர் இந்த ஆராய்ச்சியின் முடிவை ஆய்வு செய்து பின் முடிவுகளை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்சிடம் சமர்ப்பிக்கத் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். இவரின் வார்த்தைகளில் இன்சோம்னியா அதாவது தூக்கமின்மை நிலையில் உள்ளவர்களுக்கு அவ்வாறு இருப்பதற்கு என எந்த ஒரு தனி காரணமும் தேவை இல்லை. இவர்களுக்கு இந்தக் கண்டுபிடிப்பு தங்களுக்கு டிமென்ஷியா வந்துவிடுமோ எனும் அச்சத்தை இந்த நேரத்தில் உண்டு பண்ணிவிடும்.

ஆனாலும், இந்த இரண்டுக்குமான தொடர்பை நியாயப்படுத்தும் பல அறிவியல் கோட்பாடுகள் உள்ளன. உதாரணமாக, பெரு மூளைத் தண்டுப் பகுதியில் தென்படும் அமெலாயிடு என்ற புரத நீர் தூக்கமில்லாமல் போனால், அதிகரித்து அல்சைமர் நோயை உண்டாக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி வேறு சில கருத்துகளும் உள்ளன. டாக்டர் ம்யூசிக் சொல்வது அதிக நேரம் விழித்திருப்பது, நியூரான்களை அதிகமாகச் செயல்பட வைக்கிறது. இதன் காரணமாக அமிலாயிட்டின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. மற்றும் ஒரு கோணம், தூக்கத்தில் இருக்கும்போதுதான் நம் மூளைப் பகுதியில் ஓடும் நீர் அங்குள்ள அதிக அளவிலான தாதுப்பொருளை நீக்க உதவுகிறது. தூக்கமின்மையால் இந்தக் கழிவு ஏற்படாமல் அது மூளைப்பகுதியில் தங்கிப்போகிறது. சில விஞ்ஞானிகள் தூக்க நேரத்தைப் பாகுபடுத்தி இப்படிப்பட்ட சில பகுதி நேரங்களில் தாதுப்பொருள் வெளியேறத் தூக்கம் அவசியம் என்றும் கூறுகின்றனர்.

Dementia
Dementia
Image by Gerd Altmann from Pixabay

இவற்றை எல்லாம் தாண்டி ஒரு படி முன்னேறி டாக்டர் லுட்ஸி இவ்வாறு கூறுகிறார்.
``டிமென்ஷியா ரிஸ்க் ஃபாக்டர் என்று கருதப்படும் தூங்காத இரவுகளை நொறுக்குத்தீனி தின்று கழிப்பது, அதே காரணத்தால் காலையில் சுறுசுறுப்பற்று இருப்பது, அதனால் ஏற்படக்கூடிய உடல் பருமன், அதன் தொடர்ச்சியாக நீரிழிவு மற்றும் ஹைப்பர் டென்ஷன்'' என்று இந்தத் தூக்கமில்லாத நேரத்தின் தொடர்ச்சியைக் கூறி அதிர்ச்சி அளிக்கிறார்.

ஆனால், பல ஆராய்ச்சியாளர்களும் ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகிறார்கள். இந்த ஆராய்ச்சி மிகவும் சவாலான ஒன்று. இதுவரை நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் குழப்பமான முடிவுகளை முன் வைத்திருக்கின்றன. உதாரணமாக, ஓர் ஆராய்ச்சியில் அதிக நேரம் அதாவது 9 மணி நேரத்துக்கும் அதிகமாக உறங்குபவர்களுக்கு இந்த டிமென்ஷியா நோய்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆராய்ச்சி முடிவின் நம்பகத்தன்மை இது வயதானவர்களை வைத்து நடத்தப்பட்டது என்பதால் சரியானதாக இருக்காது என்று நிராகரிக்கப்படுகிறது. அதே போல் சமீபமாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தூக்க நேரம் 8 மணி நேரமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. காரணம் 9 மணி நேரம் உறங்குபவர்கள் தேவையான அளவில் இல்லாததால். ஆனால், இந்த ஆராய்ச்சியின் முடிவும் சரியாக இருக்கவில்லை.

இந்தப் புதிய ஆராய்ச்சியில் மனிதர்களின் தூக்க நிலை காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறதா என்பதையும் ஆராய்ந்து பார்த்தது அதன் முடிவாக டாக்டர் சாபியா என்பவர் `குறைவான உறக்க நிலை அதிகரிக்கும்போது, டிமென்ஷியாவுக்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. காரணம் 50 வயது வரை குறைவான தூக்க நிலையில் இருந்தவர், அதிகரிக்கும் வயதுடன் தூக்க நேரத்தையும் அதிகரிக்கும்போது அது டிமென்ஷியாவால் இருக்கக்கூடும்' என்கிறார்.

அட, தூக்கம் இவ்வளவு அவசியம் என்றால் அதை எப்படிப் பெறுவது?
டாக்டர் யாஃபே தூக்க மாத்திரை மற்றும் வேறு பல வழிகளில் நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது என்கிறார். ஆனால், இந்த ஆழ்ந்த நிலையில்தான் நம் உடல் தேவையில்லாததை வெளியேற்றியும், தேவைப்பட்டதை உருவாக்கியும் வேலை செய்யும் என்றும் கூறுகிறார்.

Dementia -Representational Image
Dementia -Representational Image
Image by Gerd Altmann from Pixabay

இவரிடம், தூக்கம் வரவில்லை அதனால் அவ்வப்போது சிறு தூக்கம் போட்டு சமாளிக்கலாமா என்று கேட்டபோது, ``ஆழ்ந்த உறக்கம் இருந்தால் இந்தச் சிறு தூக்கம் தேவையற்றுப் போய்விடும். ஆகவே, தூக்கமின்மையால் சிரமப்படுபவர்கள் தூக்கத்துக்கான சிறப்பு மருத்துவர்களைப் பார்ப்பதே சரி" என்கிறார்.

டாக்டர் லுட்சே தன் பரிந்துரைகளை முன்வைக்கிறார். இவை சென்டர் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல் அண்ட் ப்ரிவென்ஷனால் தூக்கத்துக்கான வழிகளாகப் பரிந்துரைக்கப்பட்டவை.

அவை...

- தூங்குவதற்கு முன் கஃபைன் மற்றும் மதுபானம் குடிக்காமல் இருப்பது,
- தொலைபேசி, கம்ப்யூட்டர் போன்ற கருவிகளைப் படுக்கை அறையில் இருந்து அப்புறப்படுத்துவது,
- தூங்கும் நேரத்துக்கான அட்டவணை தயாரித்து அதன் படி நடப்பது.

ஆனால், டாக்டர் ம்யூசிக்கின் வார்த்தைகளில் தூக்கம் என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவு நடுத்தர வயதில் நிம்மதியான உறக்கம் அவசியம் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், இந்த இரண்டுக்குமான தொடர்பைப் பற்றியும், அது எவ்வாறு ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கிறது என்பதையும் அதன் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி முடிக்கிறார்.

- லதா ரகுநாதன்

அடுத்த கட்டுரைக்கு