கட்டுரைகள்
Published:Updated:

ஒரு டம்ளர் தண்ணீரில் உற்சாகம்!

ஒரு டம்ளர் தண்ணீரில் உற்சாகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு டம்ளர் தண்ணீரில் உற்சாகம்!

ஆர்ட் ஆஃப் ஈட்டிங்! - 2

பெட் காபியோ, பெட் டீயோ இல்லாமல் விடியாது சிலருக்கு. சூடாக காபியோ, டீயோ உள்ளே போனால்தான் ‘காலைக்கடன்' சுமையே இறங்கும்.

‘காலையில எழுந்ததும் சொம்பு நிறைய தண்ணி குடிச்சா, உயரமா வளரலாம்னு எங்க தாத்தா சொல்லிருக்காரு' என 70 வயதிலும் அதைப் பின்பற்றுவோர் இருக்கிறார்கள்.

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சில நாடுகளில் காபி, டீக்கு பதிலாக காலையிலேயே கோலா பானங்களைக் குளிரக் குளிரக் குடிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு.

இன்னும் இந்த லிஸ்ட்டில் பிளாக் டீ, கடுங்காப்பி, நீராகாரம் என ஒவ்வொருவருக்கு ஒரு சாய்ஸ் இருக்கலாம். இவற்றில் எது சரி, ஏன்? சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன் விளக்குகிறார்.

ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

“காலையில் தூக்கத்திலிருந்து விழித்ததும், பல் துலக்கிவிட்டு நீங்கள் குடிக்க வேண்டியது ஒரு டம்ளர் தண்ணீர். அது அன்றைய நாள் முழுவதும் உங்கள் உடலின் நீர்ச்சத்து வறண்டுபோகாமல் இருக்கவும், ‘மெட்டபாலிசம்' எனப்படும் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும். அது தண்ணீரோ, வெதுவெதுப்பான நீரோ... எதுவாகவும் இருக்கலாம். அப்படிக் குடிக்காதபட்சத்தில் உங்கள் உடலில் நிச்சயம் நீர்ச்சத்து வறண்டுபோகும்.

நீர்ச்சத்து குறைந்தால் என்னவாகும்..?

‘நைட்டு நல்லாதான் தூங்கினேன். ஆனாலும் உடம்பு டல்லாவே இருக்கு...', ‘என்னன்னே தெரியலை... காலைலயே உடம்பு அசதியா இருக்கு...', ‘குழப்பமா இருக்கு...', ‘தலைசுத்துது...', ‘தூக்கமே பத்தாதது போல இருக்கு...' என உங்களைப் புலம்பவைக்கும் இந்த அறிகுறிகளுக்கெல்லாம் நீர்ச்சத்து குறைவதே காரணம் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அந்த நாள் முழுவதும் அதே மனநிலை தொடரும். உங்களுடைய ஒரு நாளின் உற்சாகம் ஒரு டம்ளர் தண்ணீரில் இருப்பதை இதுவரை யோசித்திருப்பீர்களா?

ஒரு டம்ளர் தண்ணீரில் உற்சாகம்!

“காலைல எழுந்ததும் தண்ணி குடிக்கிறதா? வெறும் வயித்துல தண்ணி குடிச்சா குமட்டுமே. எனக்கெல்லாம் காபி/டீ குடிக்கலைன்னா தலையே வெடிச்சிடும்’' என்ற ரகமா நீங்கள்? காபி, டீ குடிப்பதால் உங்களுக்குத் தலைவேண்டுமானால் வெடிக்காமல் இருக்கலாம். ஆனால் பல காலமாக நீங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் அந்தப் பழக்கத்தால் உங்கள் செரிமான இயக்கங்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும். மட்டுமன்றி, உங்கள் உடலில் ஊட்டச்சத்துகள் கிரகிக்கப்படுவதிலும் சிக்கல் இருக்கும்.

எனவே, வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஓகே. சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்த நீராகவோ, வெந்தயம் சேர்த்த நீராகவோ இருந்தால் இன்னும் சிறப்பு. வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை மஞ்சள் தூள், சிட்டிகை பட்டைத்தூள், சில துளிகள் எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துக் குடிப்பது சிறப்போ சிறப்பு. ‘இதெல்லாம் வேலைக்கே ஆகாது' என்பவர்களுக்கு மூலிகை டீ ஓகே.

இவற்றில் ஏதோ ஒன்றைக் குடித்து, அரை மணி நேரம் இடைவெளி விடுங்கள். அதன் பிறகு உங்களுக்குப் பிடித்த காபியோ, டீயோ குடிக்கலாம். குழந்தைகளும், ஆரோக்கியத்தின் மேல் அதீத அக்கறை கொண்டவர்களும் காபி, டீக்கு பதில் பால் அல்லது பலதானிய கஞ்சியுடன் காலைப்பொழுதை ஆரம்பிக்கலாம். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர், காபி, டீயைத் தவிர்த்துவிட்டு மேற்குறிப்பிட்ட ஒன்றைப் பின்பற்றலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் உற்சாகம்!

மீண்டும் அரை மணி நேரம் இடைவெளி விடுங்கள். அதன் பிறகு, ஊறவைத்த பாதாம், வால்நட்ஸ், முந்திரியில் தலா இரண்டு எடுத்துக்கொள்ளலாம். இது அன்றைய பொழுதை எனர்ஜியுடன் தொடங்கிவைக்கும். பிரேக்ஃபாஸ்ட் வரையிலான இடைவெளியையும் நிரப்பும்.

இத்தனை அட்வைஸும் உடல்நலப் பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு. ஒருவேளை உங்களுக்கு தைராய்டு இருந்தால் காலையில் முதல் வேலையாக தைராய்டு மாத்திரையை எடுத்துக்கொண்ட பிறகு, 45 நிமிடங்கள் கழித்துதான் எந்த திரவத்தையும் அருந்த வேண்டும். அப்போதுதான் மருந்து சீராக வேலை செய்யும்.

நீரிழிவுக்கும் இதர பிரச்னைகளுக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்வோரும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாக்கின் சுவையைவிடவும், மருந்தின் அளவுக்கும், இடைவேளைக்கும்தான் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.''

- பழகுவோம்