Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்: குரங்கு அம்மை அலட்சியம் தவிர்ப்போம்!

குரங்கு அம்மை ( மாதிரி படம்)

குரங்கு அம்மை: தலைவலி, காய்ச்சல், சோர்வு, தசைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து, சருமத்தில் வெடிப்புகள் ஏற்படுவதுவரை பாதிப்புகளைக் கொடுக்கிறது.

வாசகர்களுக்கு வணக்கம்: குரங்கு அம்மை அலட்சியம் தவிர்ப்போம்!

குரங்கு அம்மை: தலைவலி, காய்ச்சல், சோர்வு, தசைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து, சருமத்தில் வெடிப்புகள் ஏற்படுவதுவரை பாதிப்புகளைக் கொடுக்கிறது.

Published:Updated:
குரங்கு அம்மை ( மாதிரி படம்)
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் நோய்கள் (Zoonotic Disease), பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவ ஆரம்பிக்கும். அந்த வகையில், கோவிட்-19 போல இப்போது உலகில் பரவிக்கொண்டிருக்கும் பெருநோய், குரங்கு அம்மை
குரங்கு (மாதிரி படம்)
குரங்கு (மாதிரி படம்)

குரங்கு அம்மை முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது 1958-ம் ஆண்டு டென்மார்க் ஆய்வகத்தில் இருந்த ஆராய்ச்சிக் குரங்குகளிடம். 1970-ம் வருடம் காங்கோ நாட்டில் முதன்முதலாக அது மனிதர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒன்பது மாதக் குழந்தை, குரங்கு அம்மையிலிருந்து மீண்டுவிட்டாலும், சில மாதங்களில் ஏற்பட்ட தட்டம்மை பாதிப்பால் உயிரிழந்தது சோகம். 2003-ம் ஆண்டு குரங்கு அம்மை அமெரிக்காவில் பெருவெடிப்பாகப் பரவியபோது, 70 பேர் பாதிக்கப்பட்டனர். 2022 மே மாதத்திலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, இந்தியா என அது மீண்டும் பரவி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மையைத் தற்போது சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்து கையாண்டு வருகிறது. இதுவரை 75 நாடுகளில், 16,000 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு குறைவானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் இந்த நோய்க்கு எளிய இலக்காளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோய் பரவும் முறை பற்றி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலும், நோய் பாதித்த விலங்கிடமிருந்து ஒரு மனிதருக்கு, அல்லது நோய் பாதித்த மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு, நேரடித் தொடர்பு மூலம் குரங்கு அம்மை வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். தடிப்புகள், புண்கள், சிரங்குகள், உடல் திரவங்கள் என நோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளவர்களிடம் நேரடி தொடர்புகொள்ளும்போதும், அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்த நேரும்போதும் நோய்த்தொற்று பரவலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வைரஸ் ( மாதிரி படம்)
வைரஸ் ( மாதிரி படம்)

குரங்கு அம்மை அலட்சியப்படுத்தக் கூடியது அல்ல. இந்த வைரஸின் தற்போதைய திரிபில் ஏற்படும் நோய்த்தொற்றில் இறப்பு விகிதம் 1%. தலைவலி, காய்ச்சல், சோர்வு, தசைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து, சருமத்தில் வெடிப்புகள் ஏற்படுவதுவரை பாதிப்புகளைக் கொடுக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்ட 3, 4 வாரங்களில் கொப்புளங்கள் குறைந்து தணியும். குரங்கு அம்மைக்கு என பிரத்யேக சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை; நோய்க்குறிகளுக்கான சிகிச்சைகளே வழங்கப்பட்டு வருகின்றன. பெரியம்மைக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் குரங்கு அம்மைக்கு எதிராக 85% திறன் பெற்றிருப்பது, மருத்துவர்கள் சுட்டிக்காட்டும் நல்ல செய்தி.

கேரளாவில் நான்கு பேர், டெல்லியில் இரண்டு பேர் என, இந்தியாவில் இதுவரை 6 குரங்கு அம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் குரங்கு அம்மையின் முதல் உயிரிழப்பை, 22 வயது இளைஞரின் மரணத்தை தொடர்ந்து கேரளா உறுதிசெய்துள்ளது. இதுவே ஆசியாவின் முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு. மத்திய அரசு, குரங்கு அம்மை பரவலை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செயல் குழு (Task Force) அமைத்துள்ளது. பொதுமக்கள் நலன் மற்றும் மருத்துவமனை ஏற்பாடுகள் சார்ந்த செயல்திட்டங்களையும் மத்திய - மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

குரங்கு அம்மை நோயைப் பொறுத்தவரை, மிக முக்கியமாகக் குறித்துக்கொள்ள வேண்டிய விஷயம்... பாதிக்கப்பட்டவர் நோயின் தீவிரத்தன்மைக்குப் போவதோ, உயிரிழக்க நேரிடுவதோ, வயது முதல் நோய் எதிர்ப்பு சக்திவரை சம்பந்தப்பட்டவரின் உடல்நிலை குறித்த மற்ற கூறுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ’நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம், எதிர்ப்பு சக்தியுடன் இருக்கிறோம்’ போன்ற நம்பிக்கைகளை எல்லாம் கோவிட்-19 அலைகள் அழித்து எழுதிக்காட்டியதை நினைவில்கொள்வோம்.

குரங்கு அம்மை
குரங்கு அம்மை

2020-ம் ஆண்டு ஐ.நா வெளியிட்ட அறிக்கை, விலங்குகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் அத்துமீறும் செயல் மற்றும் காலநிலை மாற்றங்களால், இனி வரும் காலங்களில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்கள் அதிகமாகப் பரவயிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டியது. அதற்கான தற்காப்பு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகளை பாதுகாக்கும் அக்கறையுடன் மட்டுமே மேற்கொள்ளாமல், இந்த நோய்களால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் ஆப்பிரிக்க நாடுகளையும் மனதில் கொண்டு செய்ய வேண்டும்.

உலகம் எவ்வளவு சிறியது என்பதையும், நாடுகளின் வரைகோடுகளை அழித்து விளையாடும் பெருநோய்களை எதிர்கொள்ள நாம் எந்தளவுக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும், குட்டியூண்டு கோவிட்-19 வைரஸ் நமக்குக் கற்பித்தது. இப்போது குரங்கு அம்மையின் வகுப்பறையில் இருக்கிறோம்.

இதற்கு முடிவுரை இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகம் அடுத்த நோயை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதே, குரங்கு அம்மை கற்றுக்கொடுக்கும் கசப்பான மருத்துவ உண்மை.