Published:Updated:

அருப்புக்கோட்டை: நொறுங்கிய எலும்புகள், அறுவை சிகிச்சையின்றி ஒட்டவைத்த அரசு மருத்துவமனை... எப்படி?

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை

விபத்தில் உடைந்த எலும்புகளை `C-Arm’ என்ற நவீனக் கருவி மூலம் அறுவைசிகிச்சை இன்றி ஒரு மணி நேரத்தில் ஒட்டவைத்து சாதனை படைத்துள்ளனர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. கட்டடத் தொழிலாளியான இவர், கட்டட வேலைகளுக்காக விருதுநகர் மட்டுமன்றி பல பகுதிகளுக்கும் செல்வது வழக்கம். கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்துள்ளார். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் அய்யாத்துரையின் வலதுபக்கத் தோள்பட்டையின் எலும்புகள் உடைந்து நொறுங்கியது.

அய்யாத்துரையுடன் மருத்துவர் அருணாச்சலம்
அய்யாத்துரையுடன் மருத்துவர் அருணாச்சலம்

மிகுந்த வலியால் துடித்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் வலி குறையாததால், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 5 நாள்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்குப் பின்னர், `C-Arm’ என்ற நவீன கருவி மூலம் ஒரு மணி நேரத்தில் அவருக்கு உடைந்த எலும்புகளை ஒட்டவைத்துள்ளனர் எலும்பு மற்றும் மூட்டு அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அருணாசலம் மற்றும் சோமமூர்த்தி நாகராஜன்.

இதுகுறித்து எலும்பு மற்றும் மூட்டு அறுவைசிகிச்சை மருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம். ``கட்டடத் தொழிலாளியான அய்யாத்துரை கட்டட வேலை செய்துகொண்டிருக்கும்போது, தரையில் கிடந்த மின்வயரை தெரியாமல் மிதித்ததில், மின்சாரம் தாக்கி சுவரில் மோதி கீழே விழுந்துள்ளார். இதில், அவரது வலதுகை மூட்டுக்குக் கீழ் பகுதியில் எலும்பு நொறுங்கியுள்ளது. வலி தாங்காமல், வைத்தியரிடம் மாவுக்கட்டு போட்டுப் பார்த்துள்ளார். அப்படியும் வலி குறையாமல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அதிலும் வலி குறையாமலும், கையை அசைக்க முடியாத நிலையிலும் இருந்த அவர் சிகிச்சைக்காக இங்கு வந்தார்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

அவரை பரிசோதித்ததில் எலும்பு நொறுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தோம். பொதுவாக எலும்பு உடைந்தோ, நொறுங்கியோ இருந்தால் அதிகபட்சமாக 4 நாள்களுக்குள் அறுவைசிகிச்சை செய்தால்தான் எலும்புகளை ஒட்டவைக்க முடியும். ஆனால், அய்யாத்துரை கையில் எலும்பு உடைந்ததில் இருந்து 25 நாள்கள் கழித்துதான் இங்கு வந்தார். உடைந்த எலும்புகளை ஒட்டவைக்க முடியுமா என்ற சந்தேகத்தில்தான் `C-Arm’ கருவி மூலம் முயன்று பார்த்தோம். இந்தக் கருவியை எலும்பு உடைந்த பகுதியில் வைத்து பரிசோதித்தால், எலும்பின் பாதிப்பு குறித்து பெரிதாகத் திரையில் தெரியும்.

அய்யாத்துரையின் கைப்பகுதி எலும்புகள் நொறுங்கி இருந்தது. இதைப் பொதுவாக அறுவைசிகிச்சை செய்துதான் சரிசெய்ய முடியும். ஆனால், எங்களின் முயற்சியால், அய்யாத்துரைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவைசிகிச்சை செய்யாமலேயே வெளிப்பகுதியில் இருந்து ஸ்குரூவைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் வெற்றிகரமாக ஒட்ட வைத்துள்ளோம். இது சிறப்பான முயற்சி, வெற்றி. மயக்கவியல் நிபுணர் வெங்கடேசன் இதற்கு உறுதுணையாக இருந்தார். இந்தச் சிகிச்சை முடிந்து மூன்று நாள்கள் ஆகின்றன.

தேசியத் தரச்சான்று
தேசியத் தரச்சான்று

தற்போது எலும்புகள் நன்கு இணைந்துவிட்டன. அவரால் கையை அசைத்து இயல்பாக வேலைசெய்ய முடியும். இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள நாங்கள் வைத்த நம்பிக்கை, உறுதியுடன் கூடவே, தலைமை மருத்துவ அதிகாரி வடிவேல், டாக்டர்கள் சந்திரமெளலி, காமாட்சி பாண்டியன் ஆகியோர் அளித்த ஊக்கமும் இந்தச் சிகிச்சை வெற்றிகரமாக அமைய காரணமாக இருந்தது” என்றார்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசினோம். ``அரசு மருத்துவமனைகளின் தரம், உட்கட்டமைப்பு வசதிகள், சிகிச்சை முறைகள் குறித்து மத்திய மருத்துவக்குழு ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆண்கள், பெண்கள் சிகிச்சைப்பிரிவு, நெஞ்சக நோய்ப்பிரிவு, பிரசவ வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தை பராமரிப்புப் பிரிவு, கண்நோய்ப் பிரிவு என ஒவ்வொரு துறையின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். 70 மதிப்பெண்கள் பெற்றாலே அந்த மருத்துவமனைக்கு `தேசியத்தர உறுதிச்சான்று’ வழங்கப்படும். ஆனால், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஜூலையில் மேற்கொண்ட ஆய்வில் 92 மதிப்பெண்களை வழங்கியது மத்திய மருத்துவக்குழு. இதன்மூலம், மத்திய அரசின் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ், `தேசியத்தர உறுதிச்சான்று’ எங்கள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

படுக்கைகள்
படுக்கைகள்

ஏற்கெனவே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இம்மருத்துவமனை `காயகல்ப விருது'ம் பெற்றுள்ளது. தரத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் 2,374 பிரசவங்கள், 2,308 பெரிய அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளன. 2,42,437 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இங்கு மொத்தம் 294 படுக்கைகள் உள்ளன. தேசியத்தரச்சான்று பெற்றதன் மூலம் ஒரு படுக்கைக்கு ஓராண்டுக்கு ரூ.10,000 வீதம் 294 படுக்கைக்கு ரூ.29.40 லட்சம் எனத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்தத் தொகையை மருத்துவமனை மேம்பாட்டுக்குப் பயன்படுத்தி வருகிறோம்” என்றனர் பெருமிதத்துடன்.

அரசு மருத்துவமனைகளின் ஒவ்வொரு சிறப்பான செயல்பாட்டிலும் உறுதிப்படுத்தப்படுவது... எளிய மக்களின் ஆரோக்கியம்!

அடுத்த கட்டுரைக்கு