Published:Updated:

இந்தியர்களின் மூளை, ஐரோப்பியர், சீனர்களின் மூளையைவிடச் சிறியது! - ஐ.ஐ.டி ஆய்வில் தகவல்

மனித மூளைகளில் வளர்ச்சி வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய உதவும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

மனித மூளை
மனித மூளை

மனித மூளையின் வரைபடம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஹைதராபாத் ஐ.ஐ.டி மாணவர்கள், இந்தியர்களின் மூளை வரைபடத்தைப் பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். இதுவரை உருவாக்கப்பட்ட மனித மூளைக்கான வரைபடங்களில் ஐரோப்பியர்களின் மூளையைத்தான் மாதிரியாகப் பயன்படுத்தியுள்ளனர். மூளைக்கான வரைபடத்தை, நரம்பியல் தொடர்பான பாடங்களைப் படிப்பதற்குப் பயன்படுத்துவார்கள்.

மனித மூளை
மனித மூளை

முதன்முதலில் வரையப்பட்ட மூளை அட்லாஸ், 60 வயது ஃப்ரெஞ்ச் பெண்மணியின் உடற்கூறாய்வின்மூலம், கையால் வரையப்பட்டு உருவாக்கப்பட்டது. அதையடுத்து 1993-ம் ஆண்டில்தான் முதலாவது டிஜிட்டல் மனித மூளை வரையப்பட்டது. ஆனால், இவையனைத்துமே மேற்கத்திய மனிதர்களின் மூளையின் வடிவத்தைக்கொண்டே வரையப்பட்டன.

தற்போது, இந்தியர்களின் மூளைக்கான வரைபடம் உருவாக்கும் முதல் முயற்சியில் ஆண், பெண் இருபாலைச் சேர்ந்த 50 பேரின் மூளையை ஆய்வுக்குட்படுத்தினார்கள். இதற்கென மூன்று மருத்துவமனைகளைச்சேர்ந்த மூன்றுவிதமான எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்து படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் அடுத்தகட்டமாக, 100 இந்தியர்களின் மூளையை ஆய்வுக்குட்படுத்தவுள்ளனர்.

மூளையின் செயல்பாடு
மூளையின் செயல்பாடு

இந்தியர்களின் மூளையின் மாதிரிகளைக்கொண்டு உருவாக்கப்படட மூளை வரைபடத்தில் ஆச்சர்யப்படத்தக்க முடிவுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, இந்தியர்களுடைய மூளையின் உயரம், அகலம், பருமன் என அனைத்தையும் ஒப்பிடுகையில், ஐரோப்பியர்கள், சீனர்கள் மற்றும் கொரியர்களின் மூளையைவிடச் சிறியது என்று தெரியவருகிறது.

மூளை தொடர்பான ஆராய்ச்சியின்மூலம், நரம்பியல் தொடர்பான நோய்கள் மற்றும் அல்சைமர், பார்க்கின்சன் போன்ற நோய்களை முன்கூட்டியே அறியவும், சிகிச்சையளிக்கவும் முடியும். தற்போது, மனித மூளைகளில் வளர்ச்சி வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய உதவும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் நோய்க்கூறுகளைக் கண்டறிவதற்கு மேற்கத்திய மனிதர்களின் மூளை மாதிரிதான் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்திய மூளையின் அமைப்பு வித்தியாசப்படுவதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் முடிவுகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனித மூளை
மனித மூளை

மேலும், 20-30, 30-40, 40-50 மற்றும் 50-60 என ஒவ்வொரு வயதுத் தொகுதிக்குமான மூளை வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளனர். அதன்மூலம் அந்தந்த வயதுக்கேற்ப மூளையைப் பாதிக்கும் நோய்க்கூறுகள் குறித்து அறியமுடியும். மூளையின் பருமனுக்கும், அதன் அறிவுக்கும் தொடர்புண்டா என்று பார்க்கையில், பருமனைவிட, அந்த மூளை, உடலின் மற்ற பகுதிகளோடு எப்படி இணைந்து விரைவாகச் செயல்படுகிறது என்பதுதான் கவனத்துக்குரியது.