Published:Updated:

இந்தியாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல்... நாம் செய்ய வேண்டியது என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Bird flu was detected among domestic birds in Kerala
Bird flu was detected among domestic birds in Kerala ( AP Photo/Prakash Elamakkara )

தற்போதுவரை, இந்த H5N8 வைரஸ் மனிதர்களைத் தாக்கும் தன்மையைப் பெறவில்லை. எனினும், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிதாகப் பிறந்திருக்கும் 2021-ம் ஆண்டு, ஏவியன் இன்ஃப்ளூயன்சா (Avian Influenza) வடிவில் மீண்டும் ஒரு சவாலை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றது.

ஏவியன் இன்ஃப்ளூயன்சா என்றால் என்ன?

இன்ஃப்ளூயன்சா எனும் வைரஸ்கள் பறவைகள், பன்றிகள், குதிரை, நாய் மற்றும் மனிதர்களுக்குப் பரவி நோயுண்டாக்கும் ஆற்றல் மிகுந்தவை.

இவற்றுள் பறவைகளைத் தாக்கும் இன்ஃப்ளூயன்சா வைரஸ்களை ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் என்றும், பன்றிகளைத் தாக்குபவற்றை ஸ்வைன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்றும், மனிதர்களை தாக்குபவற்றை ஹ்யூமன் இன்ஃப்ளூயன்சா என்றும் அழைக்கிறோம்

தற்போது இந்தியாவில் பரவி வரும் இன்ஃப்ளூயன்சா, பறவை இனத்தை குறிவைத்துப் பரவும் ஏவியன் இன்ஃப்ளூயன்சா.

Indian feeds Siberian gulls from a boat on the River Ganges in Varanasi, India.
Indian feeds Siberian gulls from a boat on the River Ganges in Varanasi, India.
AP Photo/Rajesh Kumar Singh

இந்தியாவில் பறவைக் காய்ச்சல்... வலசைப் பறவைகள் காரணமா?

இமாச்சல பிரதேசத்தில் காட்டு வாத்துகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் காகங்களிலும், ஹரியானா மாநிலத்தில் வளர்ப்புக் கோழிகளிடமும், கேரளாவில் வாத்துகளிலும் இந்த வைரஸ் பரவி கணிசமான அளவில் மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் வலசைப் பறவைகள் மூலம் இந்தத் தொற்று இறக்குமதி ஆகியிருக்கலாம் என்று மத்திய கால்நடை வளத்துறை கூறுகிறது. வலசைப்பறவைகள் வானத்தில் பறக்கும்போது இடும் எச்சங்கள் வழி காற்றில் கலந்து, அதை சுவாசிக்கும் பறவைகளுக்கும் இந்த நோய் பரவக்கூடும்.

மேலும், வைரஸ் பாதிப்புக்குள்ளான பறவைகளின் சிறுநீர், எச்சம் மற்றும் சுவாசப்பாதை சுரப்புகள் வழி மற்ற பறவைகளுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. கோழிப்பண்ணைகளில் மிகக்குறுகிய இடத்தில் நெருக்கமாகப் பறவைகள் பராமரிக்கப்படும் சூழ்நிலையில், ஒரு கோழிக்குத் தொற்று ஏற்பட்டாலும் அது பண்ணையில் இருக்கும் எல்லா பறவைகளையும் எளிதில் தாக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

தற்போது இந்தியாவில் ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள 15 இடங்கள், ஏவியன் இன்ஃப்ளூயன்சா தொற்று கண்டறியப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோழி
கோழி
க. தனசேகரன்

இந்த இடங்களில் உள்ள பண்ணைகளில் உள்ள பறவைகள் தொற்று பரவா வண்ணம் அழிக்கப்பட்டு வருகின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம், அடுத்த 10 நாள்களுக்கு கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலிருந்து உயிர் கறிக்கோழிகள் தனது மாநிலத்துக்குள் வருவதை தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. மேலும், அங்கே பறவைகளிடையே தொற்று பரவும் அகர் மால்வா மாவட்டத்தில் கறிக்கோழி மற்றும் முட்டை வர்த்தகத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

ஹரியானா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று பாதிக்கப்பட்டு இறந்த பறவைகளை பிரேதக்கூறாய்வு செய்து பரிசோதனை செய்ததில், அவற்றில் H5N8 எனும் வகை இன்ஃப்ளூயன்சா- ஏ வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, இந்தப் பறவை இன்ஃப்ளூயன்சா மனிதர்களுக்குப் பரவுமா?

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைபடி, ``இதுவரை H5N8 வகை பறவை இன்ஃப்ளூயன்சா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதாக சான்றுகள் இல்லை. மேலும், இந்தத் தொற்று ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் வாய்ப்பு மிகக் குறைவு" என்று நற்செய்தி பகிர்ந்துள்ளது.

இருப்பினும், இதற்கு முன் 1997-ம் ஆண்டு ஹாங்காங் நாட்டில் H5N1 எனும் இதே இனத்தைச் சேர்ந்த வைரஸ் அங்குள்ள பறவை விற்பனை செய்யும் சந்தையில் இருந்து மனிதர்களுக்குப் பரவியது குறிப்பிடத்தக்கது. நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 18 பேரில் 6 பேர் மரணமடைந்தனர். உடனடியாக, அது மேலும் பரவிவிடாமல் தடுக்கப்பட்டது.

Migratory birds are seen at a wetland in Pobitora Wildlife sanctuary, outskirts of Gauhati, northeastern state of Assam
Migratory birds are seen at a wetland in Pobitora Wildlife sanctuary, outskirts of Gauhati, northeastern state of Assam
AP Photo/Anupam Nath

பறவைகளிடையே பரவும் இத்தகைய வைரஸ்கள், பறவைகளை நேரடியாகக் கையாளும் மனிதர்களுக்கு மிக அரிதாகப் பரவும் வாய்ப்புண்டு. ஆயினும், இதுவரை இந்தியாவில் பறவைகளைத் தாக்கும் இன்ஃப்ளூயன்சா நோயால் யாரும் உயிரிழந்ததாகப் பதிவு இல்லை.

இந்த வைரஸ் கறிக்கோழி மற்றும் கோழி, வாத்து போன்ற பறவைகளின் முட்டைகளை உண்பதால் மனிதர்களுக்குப் பரவுமா?

70 டிகிரி செல்சியஸ் வெப்பத்துக்கு மேல் சமைத்து, சூடுசெய்து நாம் உண்ணும்போது இந்த வைரஸ் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே, குறிப்பிட்ட வெப்பத்தில் சமைக்கப்பட்டு உண்ணும் கோழிக்கறி மற்றும் முட்டைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

எனினும், முட்டைகளை பச்சையாகக் குடிப்பது, பறவைகள் மாமிசத்தை அரைகுறையாக சமைத்து உண்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, தமிழகத்தில் மாமிசங்களை இவ்வாறு பச்சையாக / அரைகுறையாக உண்ணும் பழக்கம் இல்லை என்பதால் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை.

பறவைகளிடையே பரவும் இத்தகைய வைரஸ்களால், அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதா?

ஆம். பொதுவாகவே இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் பறவைகள் - பன்றிகள்- மனிதர்கள் என்று இனம் விட்டு இனம் தாவும் ஆற்றல் பெற்றவை.

இதற்கான காரணம், இன்ஃப்ளூயன்சா - ஏ வைரஸ்கள் மிக விரைவாக மரபணு மாற்றங்கள் மூலம் புதிய வைரஸ்களாக உருமாற்றம் அடையும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

Birds fly over the Dal Lake as the sun sets in Srinagar
Birds fly over the Dal Lake as the sun sets in Srinagar
AP Photo/Dar Yasin

1918-ம் ஆண்டு உலகை உலுக்கிய H1N1 இன்ஃப்ளூயன்சா பெருந்தொற்றும் பறவை இனத்திலிருந்து மனிதர்களுக்குத் தாவிய வைரஸால் உண்டானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பறவை இனத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் பன்றிகளுக்கோ மனிதர்களுக்கோ தன்னகத்தே உருமாற்றம் அடைந்து பரவும் வாய்ப்பு உண்டு. அவ்வாறு உருமாறும் திறன் கொண்டு பரவினால், அந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி நம்மிடம் இருக்காது. இதன் விளைவாக சுவாசப்பாதை மூலம் பரவும் மற்றொரு பெருந்தொற்றை உருவாக்கிவிடும் சூழல் ஏற்படலாம்.

எனவே, பறவை இனத்தில் இந்த இன்ஃப்ளூயன்சா வைரஸ் பரவுவதை நாம் தடுத்தாக வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

* வளர்ப்புப் பறவைகளிடையே ஏற்படும் அசாதாரண மரணங்கள் போன்றவற்றை உடனடியாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்துவிட வேண்டும். இது தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும்.

* தற்போதுவரை, இந்த H5N8 வைரஸ் மனிதர்களைத் தாக்கும் தன்மையைப் பெறவில்லை. எனினும், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

* கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளின் மாமிசத்தையும் முட்டைகளையும் நன்றாகச் சமைத்து உண்ண வேண்டும்.

Health workers in protective suits prepare to set fire after culling ducks following the detection of H5N8 strain of bird flu among domestic birds in Alappuzha district, Kerala
Health workers in protective suits prepare to set fire after culling ducks following the detection of H5N8 strain of bird flu among domestic birds in Alappuzha district, Kerala
AP Photo/Prakash Elamakkara

* மாமிசம், முட்டைகளை சமைத்துவிட்டு கைகளை நன்றாக சோப் போட்டுக் கழுவி விட வேண்டும்.

* நாம் வாழும் பகுதிகளில் அசாதாரணமான முறையில் கொத்தாகப் பல பறவைகள் இறந்துகிடப்பதைப் பார்த்தால் உடனே மாவட்டத் தலைமைக்குத் தகவல் வழங்கிட வேண்டும்.

தற்காப்பும் முன்னெச்சரிக்கையும்தான் எந்த நோய்க்குமான கவசம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு