Published:Updated:

``தடுப்பு மருந்துகள் உதவாது... பயணங்களைத் தவிர்த்திடுங்கள்!" - கொரோனாவுக்கு மருத்துவரின் அட்வைஸ்

கொரோனா
கொரோனா

தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளப்பட்ட பின் மேற்கொள்ளும் பயணம் ஆபத்தற்றதாக இருக்குமா?

கொரோனா வைரஸின் தாக்கம், `இதோ குறைகிறது, அதோ குறைகிறது' என ஏதாவதொரு வகையில் பிரச்னை கட்டுக்குள் வருகின்றது என்ற தொனியில் ஓர் அறிக்கையை, ஒவ்வொரு நாளும் சீன அரசிடமிருந்து எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறது உலகம். ஆனால், நிலைமை சீனாவுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய தேதிக்கு 83,000-க்கும் அதிகம். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 2,500-ஐ தாண்டி இரண்டு நாள்கள் கடந்துவிட்டன.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளில், கடந்த சில வாரங்களாகக் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதாகவும், இது தங்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் சார்பில் கடந்த வாரம் அறிக்கையொன்று வெளியானது. சமீபத்தில் பாதிப்பு உச்சத்தைத் தொட்ட நாடுகள் இத்தாலி மற்றும் தென் கொரிய நாடுகள் என்கின்றன செய்திகள். இத்தாலியில் மட்டும், பாதிப்பு 400-க்கு அதிகமாகவும் தென் கொரியாவில் 890-க்கு அதிகமாகவும் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் சொல்கின்றன. ஐரோப்பிய நாடுகளில்தான் தாக்கம் அதிகமென்பதால், ஐரோப்பா முழுக்க உச்சக்கட்ட அலெர்ட் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தினந்தோறும் அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவிலும் அலெர்ட் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர், தன் மக்களிடையே நிகழ்த்திய கொரோனா விழிப்புணர்வு நிகழ்வில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் `அடிக்கடி கை கழுவுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். கூடவே, நாட்டு மக்கள் அனைவரும்

தன்னைப்போல `ஜெர்மோபோபியா' எனப்படும் தொற்றுக்கிருமிகள் குறித்த அச்சத்துடனேயே மக்கள் அனைவரும் எப்போதும் இருக்க வேண்டும்.

என அறிவுறுத்தியும் இருந்தார். அப்படி அச்சத்தோடு இருக்கும்போது, தன்னை அறியாமல் சுத்தத்தோடும் சுகாதாரத்தோடும் மக்களால் இருந்துவிட முடியும் என்பதுதான் ட்ரம்ப் கூறிய வார்த்தைகளின் அடிப்படை அர்த்தம். `ட்ரம்ப்பின் இந்த வார்த்தைகள், அமெரிக்கர்களுக்கானது மட்டுமல்ல. உலக மக்கள் அனைவருக்குமானது!' எனக்கூறி சமூக வலைதளங்களில் பரவலாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப்பின் அறிவுரைகள் யாவும் ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் `பயணிகள் வழியாகத்தான் கொரோனா தீவிரமாகப் பரவுகிறது' எனக்கூறி அமெரிக்காவிலிருந்து நோய்த்தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல் பயணப்படுபவர்களை விமான நிலையத்திலேயே கண்டறிந்து அவர்கள் பயணத்தை ரத்து செய்து வருகிறது அந்நாட்டு சுகாதாரத்துறை. கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, `அவசரத் தேவை இல்லாதபட்சத்தில், அமெரிக்கர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என அறிவுப்பும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 25 லட்ச விமான பயணிகளைப் பார்க்கும் அமெரிக்காவே இப்படியான செய்திகளை வெளியிட்டிருப்பது, கொரோனா குறித்த பதற்றத்தை மக்களிடையே மேலும் மேலும் அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது என்றே சொல்ல வேண்டியுள்ளது.

 `என் சகோதரனுக்கு கண்ணிவெடி; எனக்கு கொரோனா!' நெகிழவைக்கும் சீன செவிலியரின் பணி

கடந்த 10 வருடங்களில், நோய்த்தொற்றொன்று இவ்வளவு தீவிரமாகப் பரவுவது இதுவே முதன்முறை என அறிவியலாளர்கள் கூறிவரும் நிலையில், அமெரிக்கா மட்டுமன்றி உலகம் முழுக்க பல நாடுகள் தங்களின் விமான வழி, நீர் வழிப் பயணங்கள் குறித்து மிகத்தீவிரமான கட்டுப்பாடுகளைப் புதிதாக ஏற்படுத்தி வருகின்றன.

`அவசரத் தேவை இல்லாதபட்சத்தில், அமெரிக்கர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.'
அமெரிக்க அரசு
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதற்கிடையில் மக்களிடையே நிலவும் தேவையில்லாத அச்சத்தைத் தடுப்பதற்காக, இன்றைய தினம், உலக சுகாதார நிறுவனம் சார்பில் பயண அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பயணத்துக்கு முன் - பயணத்துக்குப் பின், பயணிகள் என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பவை யாவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக,

* கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் பகுதிகளுக்குப் பயணப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
* முதியோர், வாழ்வியல் நோய் பாதிப்பு உள்ளவர்கள், சர்வதேசப் பயணங்களைத் தவிர்த்துவிடலாம்.
* கொரோனா தாக்கம் தெரியவரும் பகுதிக்குப் பயணித்துத் திரும்பி வருபவர்கள், அடுத்த 14 நாள்களுக்கு மருத்துவ கண்காணிப்புக்கு உட்பட வேண்டும், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
* ஒருவேளை பயணத்துக்குப் பின் காய்ச்சல் பாதிப்பு தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நபர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். உடன் அருகிலுள்ள மருத்துவ சேவையைப் பெற வேண்டும் என்பன போன்ற

பல விஷயங்களும் கூறப்பட்டுள்ளன. இதில், மற்ற அனைத்தையும்விட அதிக முன்னுரிமை கொடுத்து பேசப்பட்டுள்ள விஷயம், `தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வது' குறித்துதான். காரணம், சீனாவில் `செல்ஃப் ஐஸோலேஷன்' காரணமாகப் பாதிப்பு தற்போது ஓரளவு கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இதைக் குறிப்பிட்டிருப்பது, சீனாவுக்குச் சென்று ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் ப்ரூஸ் ஆய்ல்வேர்ட்.

உலகம் முழுவதும் இந்நேரம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு தொற்றுநோயை தங்களைத் தனிமைப்படுத்தி வைத்துக்கொண்டதன் மூலம் கட்டுப்படுத்தியிருக்கும் வுஹான் மக்களுக்கு உலகமே கடன்பட்டிருக்கிறது.
ப்ரூஸின் ஓபன் ஸ்டேட்மென்ட்.
ப்ரூஸ் ஆய்ல்வேர்ட்
ப்ரூஸ் ஆய்ல்வேர்ட்

அதென்ன தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வது? அமெரிக்காவின் கூற்றான `தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளப்பட்ட பின் மேற்கொள்ளும் பயணம்' ஆபத்தற்றதாக இருக்குமா? - மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியனிடம் கேட்டோம்.

செல்ஃப் ஹைஜீன் -செல்ஃப் ஐஸோலேஷன்
இரண்டும் முக்கியம்!
தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்
தொற்றுநோயியல் மருத்துவர் வி.ராமசுப்பிரமணியன்

``மற்ற பயணச் சூழல்களைவிடவும் விமான வழிப் பயணங்களில்தான் சுத்தமும் சுகாதாரமும் முறையாகப் பேணப்படும். ஆனால், தொற்றுப் பிரச்னைகளைத் தடுக்க வெறும் சுற்றுச்சூழல் சுகாதாரம் மட்டுமே உதவாது. செல்ஃப் ஹைஜீன் எனப்படும், சுய சுத்தமும் இருந்தால்தான் தொற்றிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும். உதாரணத்துக்கு, நீல நிற சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து கொள்வது, ஹேண்ட் சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வது போன்றவை இருக்க வேண்டியது அவசியம். இந்த செல்ஃப் ஹைஜீன் யாவும், பாதிப்பற்றவர்களுக்குத்தான் பொருந்தும். பாதிப்பு ஏற்கெனவே தெரியவருபவர்கள், செல்ஃப் ஹைஜீனோடு சேர்த்து `செல்ஃப் ஐஸோலேஷன்' எனப்படும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்வதையும் மருத்துவ உதவியோடு பின்பற்ற வேண்டியது அவசியம். இவர்கள், பயணங்களைத் தவிர்ப்பது கட்டாயம்.

கொரோனா
கொரோனா
`27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி!' - தகர்ந்த 14 நாள்கள் நம்பிக்கை; அதிர்ச்சியில் சீனா

நோய் பாதிப்பு தெரியாதவர்கள் தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டுமென அமெரிக்க அதிகாரிகள் சொல்லியுள்ளதாகத் தெரிகிறது. எனக்கு அதில் உடன்பாடில்லை. ஏனெனில், தடுப்பு மருந்துகள் யாவும், 70 சதவிகிதம் மட்டுமே தொற்றைத் தடுக்க உதவும். மீதுமுள்ள 30 சதவிகிதத்துக்கு, பாதிப்பு ஏற்பட்டு விடலாம். கொரோனாவின் தீவிரம் அதிகரிப்பதை வைத்துப் பார்க்கும்போது, நாம் 30 சதவிகித ரிஸ்கைக் கூட எடுக்க வேண்டாமென்றே நினைக்கிறேன். அந்தவகையில், என்னுடைய அறிவுரை என்னவெனில், நோய் பாதிப்பு தெரியவருபவர்கள் - நோயற்றவர்கள் என யாருமே இந்த நேரத்தில் சர்வதேசப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருப்பதே நல்லது. கட்டாயத் தேவை என்பவர்கள் மட்டும், பயணப்படலாம். அவர்களும்கூட சீனா, கொரியா, பாங்காக், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கொரோனா தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு பயணப்படாமலேயே இருப்பதே சிறப்பு" என்றார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு