Published:Updated:

செரிமானக்கோளாறிலிருந்து விடுபட ஆயுர்வேதம் சொல்வது என்ன?

`ஒருவர் சாப்பிட்ட உணவு செரிமானமாகவில்லையென்றால் அவர் அடுத்தவேளை உணவை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்கிறது ஆயுர்வேதம். அதன்படி அடுத்தவேளை உணவைத் தவிர்ப்பதே நல்லது. சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் சிறிய அளவு உணவை எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய நவீன யுகத்தில் நண்பர்களுக்கு மத்தியில் `பார்ட்டி’ கலாசாரம் அதிகரித்துவிட்டது. வார இறுதியிலோ, வார நாள்களிலோ அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு வெளியே சென்று விருப்பமான உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அப்படி `பார்ட்டி' நேரத்தில் சாப்பிடும் உணவுகள் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. உண்ட உணவு செரிக்காமல் அவதிப்பட நேரும். அவர்களுக்கெல்லாம் எளிய தீர்வுகளைச் சொல்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

வயிற்று வலி
வயிற்று வலி
pixabay.com

``ஒருவர் உண்ணும் உணவு நன்றாகச் செரிமானமாகிவிட்டால் அவருக்கு மருந்துகள் தேவைப்படாது. ஆனால், உணவு செரிமானமாகவில்லையென்றால் வயிற்றுப்புண், வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளுக்குக் காரணம் செரிமானக் கோளாறு என்றாலும் பெரும்பாலானோர் அதுகுறித்து கவலைப்படுவதில்லை. அடுத்தவேளை உணவை உட்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்.

சாப்பிட்ட பிறகு, வரக்கூடிய ஏப்பத்தில் அதற்குமுன் சாப்பிட்ட உணவின் மணமோ, சுவையோ தெரியக் கூடாது. சத்தம் அதிகமாகவோ, குறைவாகவோ வரக்கூடாது. வயிற்றுப்பொருமலோ, வயிற்று வலியோ ஏற்படக் கூடாது. உடம்பு லேசாகவும், மலம் கழிப்பது இயல்பாகவும் இருக்க வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லாமல் ஏப்பம் சுத்தமாக இருந்தால் சாப்பிட்ட உணவு செரிமானமாகிவிட்டது என்று பொருள்.

செரிமானம்
செரிமானம்
pixabay.com

பசியின்மை, ஏப்பத்தில் புளிப்புச் சுவை மற்றும் அந்த உணவின் மணம் தெரியவந்தால் உண்ட உணவு செரிமானமாகவில்லை என்பதை அறியவேண்டும். `ஒருவர் சாப்பிட்ட உணவு செரிமானமாகவில்லையென்றால் அவர் அடுத்தவேளை உணவை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்கிறது ஆயுர்வேதம். அதன்படி அடுத்தவேளை உணவைத் தவிர்ப்பதே நல்லது. சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் சிறிய அளவு உணவை எடுத்துக்கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செரிமானப் பிரச்னைக்கு வரப்பிரசாதம் சீரகம். அக உறுப்புகளைச் சீர்செய்வதாலேயே அதற்குச் சீரகம் எனப் பெயர் வந்தது. சீரகத்தைச் சிறிதளவு எடுத்து வறுத்து, அதை நீரில் போட்டு கொதிக்கவிட்டு சூடு ஆறியதும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரைத் தாகம் எடுக்கும்போதெல்லாம் அருந்திவந்தாலே செரிமானக் கோளாறிலிருந்து விடுபடலாம். அதேபோல பசி வரும்போது மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சீரகம்
சீரகம்

பசி எடுக்கும்போது தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்து, உணவை உட்கொள்வது அவசியம். தாகம் எடுக்கும்போது உணவை உட்கொள்வதைத் தவிர்த்து தண்ணீர் அருந்த வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தாலே செரிமானப் பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும்” என்கிறார் மருத்துவர் ஆர்.பாலமுருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு