Published:Updated:

கஷாயம், ஆவிபிடித்தல், குடிநீர் மருந்து... வைரஸுக்கு எதிரான ஆயுர்வேத சிகிச்சைகள்!

கபசுரக் குடிநீர்
கபசுரக் குடிநீர்

ஆயுர்வேத மருத்துவத்தில் சளி, இருமல், காய்ச்சல் எனப் பல்வேறு நோய் உபாதைகளைத் தடுக்க தற்போது 'ஆயுஷ் கஷாயம்' மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயுஷ் கஷாயம் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டது.

வெயில் தணிந்து மழையும் குளிருமாகப் பருவநிலை மாறத்தொடங்கியிருக்கிறது. பொதுவாக, இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகள் பல.

குறிப்பாக, 'கொரோனா நோய்த்தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தாவில் 'கபசுரக் குடிநீர்' முன்வைக்கப்படுகிறது. இதைப்போலவே, ஆயுர்வேத மருத்துவத்திலும் பல ஆயுர்வேத மருந்துகள் நோய்த்தொற்றைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யக்கூடியவை' என்று கூறுகின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். அது பற்றிக் கூறுகிறார், ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்.

ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்
ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்

"பொதுவாக ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க்கிருமிகள் தாக்குகின்றன. எனவேதான் இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான தற்காப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் எல்லாவிதமான நோய்த்தொற்றுகளையும் எளிய முறையில் தடுப்பதற்கான மருந்துகள் உள்ளன.

'ஆயுஷ் கஷாயம்!'

கஷாயம்
கஷாயம்

ஆயுர்வேத மருத்துவத்தில் சளி, இருமல், காய்ச்சல் எனப் பல்வேறு நோய் உபாதைகளைத் தடுக்க தற்போது 'ஆயுஷ் கஷாயம்' மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆயுஷ் கஷாயம் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டது. எளிய மூலிகைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தக் கஷாயம் நோய்த்தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

துளசி, சுக்கு, மிளகு, பட்டை என நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிய நான்கு மூலப் பொருள்களைக் கொண்டு இந்த 'ஆயுஷ் கஷாயத்'தை நாம் தயாரிக்கலாம். முதலில் 300 மிலி தண்ணீரை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் துளசி, சுக்கு, மிளகு மற்றும் பட்டை என நான்கு பொருள்களையும் தலா 2 கிராம் சேர்க்கவும். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியவுடன் இறக்கவும். மூலிகைத் தேநீராகப் பருகவும்.

'ஆயுஷ் கஷாயத்'தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இதைத் தொடர்ந்து அருந்தி வர, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட எல்லா நோய்த்தொற்றுகளையும் தடுக்க முடியும். உடலில் நோய் எதிர்ப்புத் திறனும் பலப்படும்.

ஃபிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்: பயன்படுத்துவது குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்!

வேப்பிலை மகிமை!

வேப்பிலை
வேப்பிலை

வேப்பிலையும் மஞ்சளும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

பொதுவாகவே வேப்பிலையும் மஞ்சளும் நோய்க்கிருமிகளை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை என்பதை நாம் அறிவோம். குறிப்பாக நோய்த்தொற்றுகளை நாம் இவற்றை வைத்தே தடுக்கலாம்.

10 வேப்பிலைகளை எடுத்து அதனோடு 5 கிராம் அளவுக்கு மஞ்சள் சேர்த்து அரைத்து உட்கொள்ளலாம். அதே போல் 10 வேப்பிலைகளை 300 மில்லி அளவு தண்ணீரில் போட்டு அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் பருகலாம்.

ஆவிபிடிப்பது ஆரோக்கியமானது!

`கொரோனா கால்சென்டர்; இறுதிச் சடங்குக்கு ரூ.15,000' - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆவிபிடித்தல் சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100 மிலி தண்ணீரில் நான்கு பல் தோல் உரித்த அல்லது உரிக்காத, பூண்டைச் சேர்த்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும்.

பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கொண்டு தயாராகும் நீரை ஆவிபிடிக்கும்போது நுரையீரலில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்படும். இதை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை எனச் சில நாள்கள் தொடர்ந்து ஆவிபிடிப்பது சிறந்தது. கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் கருதப்படும் நிலையில், இந்த முறையில் ஆவிபிடிப்பது நல்ல பயனளிக்கும்.

பூண்டு
பூண்டு

குடிநீர் மருந்து!

ஆயுர்வேதத்தில் குடிநீரை மருந்தாகப் பயன்படுத்தலாம். 300 மிலி தண்ணீரில் 2 கிராம் சுக்கு மற்றும் 2 கிராம் தனியா சேர்த்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். அதை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 50 மிலி அளவு உட்கொள்ளும்போது நோய்கிருமிகள் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஆயுர்வேதம் பரவலாக வேண்டும்!

இந்தியாவில் கேரளா உள்பட பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க அம்மாநில அரசுகள் ஆயுர்வேத சிகிச்சைகளான 'ஆயுஷ் கஷாயம்', 'ஆவிபிடித்தல்' போன்றவற்றை முன்னிறுத்தி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் ஆயுர்வேத சிகிச்சை பரவலாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும். ஆனால், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் பெரியளவில் இல்லை'' என்கிறார் மருத்துவர் கௌதமன்.

அடுத்த கட்டுரைக்கு