Published:Updated:

`கொரோனாவுக்கான முதல் ஆயுர்வேத மருந்து' - ஏமாற்றிய குஜராத் கம்பெனி... ஆயுஷ் அமைச்சகம் விளக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆயுத் அட்வான்ஸ் அறிமுகத்தின்போது
ஆயுத் அட்வான்ஸ் அறிமுகத்தின்போது

பெருந்தொற்றுக் காலத்தில், பணத்துக்காக ஆசைப்பட்டு உண்மையற்ற தகவல்களைப் பரப்பி மக்களைத் திசைத்திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அபாயகரமான சூழலை கடப்பதற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் கொரோனா குறித்தும், கொரோனா தடுப்பூசி குறித்தும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கொரோனாவைக் குணப்படுத்தும் முதல் ஆயுர்வேத மருந்தைத் தயாரித்துள்ளதாக பல்வேறு செய்தி ஊடகங்களில் பொய்யான அறிவிப்பை வெளியிட்டது கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனாவை எளிதில் குணமடையச் செய்யும், உட்கொள்ளும் வகையிலான திரவ ஆயுர்வேத மருந்தை தங்கள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகவும் ஆயுத் அட்வான்ஸ் (AAYUDH Advance) என்று பெயரிடப்பட்ட அந்த மருந்து இரண்டு மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகவும் குஜராத்தைச் சேர்ந்த `சுக்லா அஷர் இம்பெக்ஸ்’ (Shukla Ashar Impex) என்ற நிறுவனம் கடந்த 19-ம் தேதி, பல்வேறு செய்தி ஊடகங்களில் கட்டண அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருக்கும் இந்த அபாயகரமான சூழலில், கிட்டத்தட்ட செய்தியைப் போலவே வெளியாகியிருந்த இந்த அறிவிப்பு பலரையும் புருவம் உயர வைத்தது. கொரோனா தடுப்பூசி குறித்த குழப்பத்தில் இருக்கும் பலரும் அந்த மருந்து குறித்து தீவிரமாகத் தேடத் தொடங்கினர். அந்த மருந்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், எங்கே கிடைக்கும், என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கமென்ட்களை பார்க்க முடிந்தது.

ஆயுத் அட்வான்ஸ்
ஆயுத் அட்வான்ஸ்

அப்படி அந்த அந்த அறிவிப்பில் என்னதான் குறிப்பிடப்பட்டிருந்தது என்கிறீர்களா?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் மனிதர்களிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது என்றும் அந்தப் பரிசோதனையின் முடிவில் பாதுகாப்பான அதே நேரத்தில் மருந்து வீரியமுடன் செயல்படுவதாகவும், இந்த மருந்தை நான்கு நாள்கள் கொடுத்ததும் கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த தகவல்களை அளிக்கக்கூடிய உலகின் முன்னணி இதழில் இந்த ஆயுர்வேத மருந்து பலன் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை எல்லாவற்றையும்விட, இந்த `ஆயுத் அட்வான்ஸ்’ மருந்து ரெம்டெசிவிரை (Remdesivir) விட மூன்று மடங்கு பலன் அளிக்கிறது என்று மத்திய அரசு நிறுவனமான சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்ததுதான் உச்சபட்சம். அத்துடன் நிறுத்தவில்லை அவர்கள்...

இதென்ன பிரமாதம் என்கிற கதையாக, சுக்லா அஷர் இம்பெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீப் சுக்லா, `ஆயுத் அட்வான்ஸ் தடுப்பூசியில் இருந்து மாறுபட்டது. தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, ஆனால், ஆயுத் அட்வான்ஸ் கொரோனா வைரஸை அழிப்பதாகச் சொல்கிறார்” என்றும் படிப்போரை மலைக்க வைத்தது அந்த அறிவிப்பு.

ஆயுஷ் அமைச்சகம்
ஆயுஷ் அமைச்சகம்

இதைப் படித்த பலரும், இது உண்மையா... உலக நாடுகளே கொரோனாவைத் தடுக்க திணறிக்கொண்டிருக்கும்போது இப்படியான அதி அற்புத மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதை அரசாங்கமே மக்களிடம் சொல்லுமே... ஏன் விளம்பரம் கொடுக்கிறார்கள் என அடிப்படையான புரிந்துணர்வுகூட இல்லாமல் அந்த மருந்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். அதுகுறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இந்தச் சூழலில், `சுக்லா அஷர் இம்பெக்ஸ்’ நிறுவனம் சொல்வதில் துளியும் உண்மை இல்லை என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``ராஜ்காட்டை மையமாகக் கொண்ட `சுக்லா அஷர் இம்பெக்ஸ்’ நிறுவனம் முற்றிலும் தவறான கூற்றுகளை முன்வைத்துள்ளது. மேலும், ஆயுர்வேதத்தின் விதிகளை மீறியுள்ளது. அந்த நிறுவனத்தின்மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

பெருந்தொற்றுக் காலத்தில், பணத்துக்காக ஆசைப்பட்டு உண்மையற்ற தகவல்களைப் பரப்பி மக்களைத் திசைத்திருப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மக்களும் ஆதாரமற்ற விஷயங்களை எக்காரணத்தைக் கொண்டும் நம்பிவிடக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு