Published:Updated:

சிகரெட்டைவிட அபாயமானதா இ-சிகரெட்... மத்திய அரசின் தடையின் பின்னணி என்ன?

e-cigarette
e-cigarette

சாதாரண சிகரெட்டுகளைக் காட்டிலும் மிகப்பெரிய சந்தை இ-சிகரெட்டுக்குப் பின்னால் உள்ளது. அதனால்தான் இந்தியாவில் அதன் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் செயல்படும் ஐடிசி புகையிலை நிறுவனம்கூட, இ-சிகரெட் உற்பத்தியைத் தொடங்கியது.

இந்தியாவில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விநியோகம், விளம்பரம் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அறிவிப்பின்போது, இ-சிகரெட்டைப் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்துவதால் இந்தத் தடை விதிக்கப்படுகிறது என்றும் மாணவர்களின் பயன்பாடு 77 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இ-சிகரெட் மீதான தடையை அறிவித்திருக்கும் மத்திய அரசு பாரம்பர்ய புகையிலைப் பொருள்கள், சிகரெட்டுக்குத் தடைவிதிக்கவில்லை.

e-cigarette
e-cigarette
pixabay

இ-சிகரெட் எப்படி இருக்கும்?

பார்ப்பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும். பேனா போன்று நீளமாக இருக்கும். அதன் உள்ளே நிகோடின் திரவம் நிரப்பப்பட்ட சிறிய குடுவை இருக்கும். அதைச் சூடுபடுத்தும் கருவியும் பேட்டரியும் இருக்கும். பேட்டரியால் இயங்கும் சிகரெட்டை ஒருவர் வாயில் வைத்து உள்ளிழுக்கும்போது அதிலிருக்கும் சென்சார், சிக்னல் அனுப்பி அந்தக் கருவியை இயக்கும். கருவி இயங்கத்தொடங்கியதும், குடுவையில் இருக்கும் நிகோடின் திரவம் ஆவியாகி, புகைப்பவரின் நுரையீரலுக்குள் செல்லும். அதை வாயில் வைத்து உறிஞ்சும்போது வெளியில் புகை வராது, தீக்கங்கும் இருக்காது. பலமுறை பயன்பாட்டுக்குப் பிறகு நிகோடின் திரவம் காலியானதும் மீண்டும் அதை நிரப்பிக்கொள்ள முடியும். பேனா, யுஎஸ்பி டிரைவ் எனப் பல்வேறு கண்ணைக் கவரும் டிசைன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

புகையிலைப் பயன்பாடு இல்லை, குடலைப் புரட்டும் நாற்றமில்லை, உடல்நலப் பாதிப்புகளும் அதிகமில்லை என்பன போன்ற கவர்ச்சியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. 500-க்கும் மேற்பட்ட விதவிதமான ஃபிளேவர்களில், ரூ.300 - ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

புகையிலைப் பயன்பாட்டால் ஓராண்டில் 9 லட்சம் பேரை இழந்து கொண்டிருக்கும் இந்தியாவில், இ-சிகரெட்டுக்கு மட்டும் எதற்காகத் தடைவிதிக்கப்பட்டது என்ற கேள்வி எழாமல் இல்லை. சாதாரண சிகரெட்டைக் காட்டிலும் இ-சிகரெட் அத்தனை ஆபத்து நிறைந்ததா என்று நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் கேட்டோம்.

Vikatan
e-cigarette info.
e-cigarette info.

"ஒருவர் புகைபிடிக்கும்போது சிகரெட்டில் இருக்கும் நிகோடின் உள்ளே சென்று அட்ரிலினலின் ஹார்மோனைத் தூண்டி, மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தைச் சுரக்கச் செய்கிறது. இந்த ரசாயனம்தான் இன்பம் என்ற உணர்வை அளிக்கும். அதனால்தான் புகைபிடிக்கும்போது இன்பமான உணர்வு கிடைப்பதாக உணருகின்றனர். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் தவிர வேறு பல ரசாயனங்களும் இருப்பதால்தான் இதயநோய், புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

ஆனால் இ-சிகரெட்டில் நிகோடின் மட்டும்தானே காணப்படுகிறது. அதனால் சாதாரண சிகரெட்டுக்குப் பதிலாக இ-சிகரெட் புகைத்தால் உடல்நலப் பாதிப்புகள் குறையும் என்ற தவறான கருத்தாக்கம் பரப்பப்படுகிறது. புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புபவர்களுக்கு மாற்றாகவும் இ-சிகரெட் விளம்பரப்படுத்தப்படுகிறது. இ-சிகரெட்டில் இருக்கும் நிகோடினை ஆவியாக்குவதற்குப் பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் அனைத்தும் சாதாரண சிகரெட் பிடிப்பதால் உருவாகும் அனைத்துப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அனைத்து வகை புகையிலைப் பொருள்களையும் தடை செய்வதுதான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகுக்கும்" என்கிறார்.

Dr Thirupathi
Dr Thirupathi

இந்தியாவில் 2008-ம் ஆண்டிலிருந்து பொது இடத்தில் புகைபிடிப்பது தடைவிதிக்கப்பட்டது. விமான நிலையம், உணவகங்கள், பார், கேளிக்கை விடுதிகள் போன்ற இடங்களில் புகைப்பதற்கென்று தனியறை அறை உருவாக்கப்பட்டு, அங்கு புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டது. சிகரெட் பாக்கெட்டின் 85 சதவிகித பகுதியில் புகைப்படத்துடன் கூடிய எச்சரிக்கை வாசகம் பிரசுரிக்க வேண்டும் என்ற சட்டம் 2016-ல் அமல்படுத்தப்பட்டது.

உலகில் மொத்த புகைபிடிக்கும் நபர்களில் 12 சதவிகிதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். அதிகம் பேர் புகைபிடிக்கக்கூடிய நாடுகளின் பட்டியிலில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டோர் புகைபிடிக்கின்றனர். இந்த நேரத்தில் இ-சிகரெட்டுகளுக்கு மட்டும் தடைவிதிப்பதன் பின்னணி என்ன என்று புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் விவரிக்கிறார்.

e-cigarette
e-cigarette

"சாதாரண சிகரெட்டிலிருந்து இ-சிகரெட்டுக்கு மாறுவது இன்றைய இளைஞர்களின் டிரெண்டாக மாறி வருகிறது. எப்படி வெற்றிலை பாக்கு, புகையிலை, குட்கா என்ற ஒவ்வொரு பொருளுக்கும் இளைய தலைமுறை மாறியதோ அதே போன்று சிகரெட்டிலும் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறி வருகின்றனர். சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளோடு இ-சிகரெட்டை விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டு, திட்டம் அமல்படுத்தப்பட்டது. விளைவு, பள்ளி செல்லும் மாணவர்களிடம் இ-சிகரெட் அதிகமாகப் புழங்கத் தொடங்கியது. காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பைகளை சோதனை செய்தால் நூற்றுக்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகள் சிக்கின. அதனால் ஒட்டுமொத்த தடைவிதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சாதாரண சிகரெட்டுகளைப் புகைப்பவர்களைக் காட்டிலும் இ-சிகரெட்டைப் புகைப்பவர்கள் குறைவான அளவில் இருந்தாலும், அதன் பயன்பாடு அதிகரிக்கும் அபாயம் இருந்தது. செல்போனை புதிது புதிதாக மாற்ற விரும்புவதைப்போல் புதிய தொழில்நுட்பத்தில் வெவ்வேறு ஃபிளேவர்களில் கிடைக்கும் இ-சிகரெட்டைப் புகைக்க அதிக இளைஞர்கள் விரும்புவார்கள். சாதாரண சிகரெட்டைக் குடித்தவர்கள்கூட இதற்கு மாறிவிடும் அபாயம் உள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் இ-சிகரெட்டுகளை இந்தியாவில் விற்பனை செய்ய ஷோரூம்களைத் தொடங்குவது, விளம்பரப்படுத்துதல் உள்ளிட்ட மக்களை ஈர்ப்பதற்கான பல்வேறு வேலைகளைத் தொடங்கிவிட்டன.

cigarette
cigarette

சாதாரண சிகரெட்டுகளைக் காட்டிலும் மிகப்பெரிய சந்தை இ-சிகரெட்டுக்குப் பின்னால் உள்ளது. அதனால்தான் இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவில் செயல்படும் ஐடிசி புகையிலை நிறுவனம்கூட, இ-சிகரெட் உற்பத்தியைத் தொடங்கியது. சாதாரண சிகரெட்டைப் புகைப்பவர்கள் அது தீர்ந்ததும் போய்விடுவார்கள். ஆனால், இ-சிகரெட் அப்படியல்ல தொடர்ந்து புகைத்துக்கொண்டே இருக்க முடியும். ஒரே சிகரெட்டை பல காலம் வைத்துப் புகைக்க விரும்பமாட்டார்கள். அதற்காகத்தான் புதிய புதிய ஃபிளேவர்களில், வடிவங்களில் சிகரெட்டுகளை விற்பனை செய்கின்றனர். ஒரு ஃபிளேவரை முயன்றவர் அடுத்ததை முயன்று பார்க்க வேண்டும் என்று விரும்புவார். இவ்வாறு தொடர்ச்சியாக அதன் பயன்பாட்டை அதிகரிக்கும், தெளிவான மார்க்கெட்டின் உத்தியை இந்த நிறுவனங்கள் கையாள்கின்றன. அதனால் ஒட்டுமொத்த தடைதான் இதற்கு ஒரே தீர்வாக இருக்கும்.

பிற புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டைக் குறைப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக வரைமுறைப்படுத்த வேண்டும். புகையிலைப் பயன்பாடு தொடர்பான சட்டங்களை முழுமையாக அமல்படுத்தினாலே பயன்பாட்டைக் குறைக்க முடியும். முழுமையாகத் தடை செய்யாவிட்டாலும், உரிமம் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் தாராளமாகப் புகையிலைப் பொருள்கள் கிடைப்பதைத் தடுத்து, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்" என்றார்.

புகைபிடித்தல்
புகைபிடித்தல்

இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன்முதலில் இ-சிகரெட் தடை செய்யப்பட்டது. அது நாட்டுக்கே முன்னுதாரணமாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எந்த வகை போதைப்பொருளாக இருந்தாலும் அது மனித உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. மனிதவளத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ள இந்தியாவின் நலனைக் காக்க வேண்டுமானால், அனைத்துப் புகையிலைப் பொருள்களையும் தடை செய்வதுதான் சரியாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு