Published:Updated:

ஆரோக்கியம் தரும் ஆலமரம்... பற்களின் வலிமைக்கு உரம்... | மூலிகை ரகசியம் - 20

ஆல மரம்

ஆல மரப்பட்டையை ஒன்றிரண்டாகச் சிதைத்து, குடிநீரில் போட்டு வாய்க் கொப்பளிக்க, வாயில் தோன்றும் புண்கள், நாவில் உண்டாகும் சிறு கொப்புளங்கள், ஈறிலிருந்து வடியும் ரத்தம் ஆகியன குணமாகும். பேசும் போது வாயில் தோன்றும் நாற்றத்தையும் ஆலமரப் பட்டைக் குடிநீர் சரி செய்யும்.

ஆரோக்கியம் தரும் ஆலமரம்... பற்களின் வலிமைக்கு உரம்... | மூலிகை ரகசியம் - 20

ஆல மரப்பட்டையை ஒன்றிரண்டாகச் சிதைத்து, குடிநீரில் போட்டு வாய்க் கொப்பளிக்க, வாயில் தோன்றும் புண்கள், நாவில் உண்டாகும் சிறு கொப்புளங்கள், ஈறிலிருந்து வடியும் ரத்தம் ஆகியன குணமாகும். பேசும் போது வாயில் தோன்றும் நாற்றத்தையும் ஆலமரப் பட்டைக் குடிநீர் சரி செய்யும்.

Published:Updated:
ஆல மரம்

நீண்ட வானுயர்ந்த மரங்களையும் அகன்று விரிந்திருக்கும் மரங்களையும் பார்க்கும்போது உண்டாகும் பரவசம் அலாதியானது! அதுவும் மிகப்பெரிய ஆல மரத்தின் கம்பீரத்தைப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா!

ஆலமரம் என்றவுடனே அதன் பெரிய பெரிய விழுதுகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, மகிழ்ச்சியாக ஊஞ்சல் ஆடிய நினைவுகள் உங்களுக்கு தோன்றினால், உங்கள் குழந்தைப் பருவத்தை இயற்கையோடு கழித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஆலமரங்கள், இப்போது வெகுவாக குறைந்துவிட்டன. கம்பீரமாகவும், மிகப்பெரியதாகவும் வளரக்கூடிய ஆலமரத்தை `மருத்துவப் பொக்கிஷம்’ என்று அழைக்கும் அளவிற்கு அதில் மருத்துவ குணங்கள் உள்ளன.

மூலிகை ரகசியம்
மூலிகை ரகசியம்

காவல் தெய்வம்

முன்பெல்லாம் பேருந்து நிறுத்தமாகவும், கூட்டங்களுக்கு அரங்கு போலவும் ஆலமரங்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்றோ சாலை விரிவாக்கம் காரணமாக பல ஆலமரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன.

மரத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படின், மரத்தை அப்படியே வேரோடு பெயர்த்து எடுத்து இடமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் எல்லாம் இப்போது வந்துவிட்டது. பல ஆண்டுகள் வாழ்ந்து வரும் ஆலமரத்தை `காவல் தெய்வமாக’ நினைத்து வழிபாடு செய்யும் வழக்கம் சில கிராமத்து மக்களிடையே இப்போதும் தொடர்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பற்களின் நண்பன்

`ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியை பலமுறை கேள்விப்பட்டிருப்போம். இதில் ஆலுக்கு சொந்தக்காரர்தான் இந்த ஆலமரம். ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்கும் பழக்கம் அனேகருக்கு உண்டு. மென்மையான ஆலமர விழுதுகளைக் கொண்டு பல் துலக்க, பற்களுக்கு மிகுந்த பலம் கிடைக்கும்.

கூடுதல் பலனாக நம் பல் ஈறுகளும் இறுக்கமைடையும். பற்களும் அவற்றைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஈறுகளும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடையும்.

இதன் விழுதுகளைக் காயவைத்து, பொசுக்கி, பற்பொடியாகவும் உபயோகப்படுத்தலாம்.

ஆலமரம்
ஆலமரம்

ஆலம் பால்

பசும்பால் தெரியும்… ஆட்டுப்பால் தெரியும்… இதென்ன ஆலம்பால் என்கிறீர்களா? ஆலமரத்திலிருந்து நமக்கு கிடைக்கும் மருத்துவப்பால் இது! ஆலம்பால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. ஆலம்பாலைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க, `ஆடும் பல்லையும் இறுக்கும்’ என்று சித்த மருத்துவ பாடல் ஒன்று தெரிவிக்கின்றது.

ஈறுகளுக்கு வலிமையைக் கொடுத்து, பற்களை இறுக்கிப் பிடிக்க ஆலம்பால் பெருமளவில் உதவும். பிற மருந்துகளோடு சேர்ந்து, சருமநோய்கள் மற்றும் ரத்தக் குறைவு முதலிய தொந்தரவுகளை நிவர்த்தி செய்யவும் இந்த ஆலமரப் பால் மருந்தாகப் பயன்படுகிறது.

புண்களைப் போக்கும் ஆலமரப்பட்டை

ஆல மரப்பட்டையை ஒன்றிரண்டாகச் சிதைத்து, குடிநீரிட்டுக் கொண்டு வாய்க் கொப்பளிக்க, வாயில் தோன்றும் புண்கள், நாவில் உண்டாகும் சிறு கொப்புளங்கள், ஈறிலிருந்து வடியும் ரத்தம் ஆகியவை குணமாகும். பேசும்போது வாயில் தோன்றும் நாற்றத்தையும் ஆலமரப் பட்டைக் குடிநீர் சரிசெய்யும்.

துவர்ப்புச்சுவை கொண்ட ஆலமரப்பட்டைகளில் புண்களை குணமாக்கும் பல்வேறு வேதிப்பொருள்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துவர்ப்புச் சுவையுள்ள மூலிகைப் பொருள்கள், புண்களை குணமாக்கும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. புண்களைக் கழுவும் `மருந்து நீராகவும்’ இந்த ஆலமரப் பட்டை குடிநீரைப் பயன்படுத்தலாம்.

ஆலமர இலைகளை லேசாக வதக்கி, கட்டிகளுக்கு வைத்துக் கட்ட, விரைவாக கட்டி பழுத்து உடையும். மூட்டு வீக்கங்களுக்கும் இதை பற்றாக உபயோகிக்கலாம். வலி நிவாரணியாகச் செயல்படுவது, புண்களை விரைந்து குணமாக்குவது, வீக்கங்களைக் குறைப்பது… போன்ற நுணுக்கமான செயல்பாடுகள் ஆலமர இலைகளுக்கும் பட்டைகளுக்கும் இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன!

ஆலமரம்!
ஆலமரம்!

வானை முட்டும் அளவுக்கு பெரிய மரமாக வளர்ந்து நிழலையும் குளிர்ச்சியையும் பலன்களையும் தரும் ஆலமரம், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல பறவைகளுக்கு உறைவிடமாகவும் அமைகிறது! ஆலமரத்தைச் சுற்றி வாருங்கள். கிளைகளை நோட்டமிடுங்கள்… அங்கு வண்ணங்களைச் சூடிய பல பறவைகள் உங்களுக்காகக் காத்திருக்கலாம்!

தாவரவியல் பெயர்:

Ficus benghalensis

குடும்பம்:

Moraceae

கண்டறிதல்:

பெருமர வகையைச் சார்ந்தது. விழுதுகள் அதிகளவில் வளர்ந்து மரத்திற்கு தனித்துவத்தை அளிக்கும். பெரிய இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். தண்டும் பட்டையும் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

தாவரவேதிப் பொருள்கள்:

Beta – Sitosterol, Rhamnoside, Bengalinoside, Liglic acid

ஆலமரம்… பலமிக்க மருத்துவக் காவலன்!