Published:Updated:

நிலாச்சோறு, குறுநடை, அன்பான உரையாடல்... ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் ஆலோசனைகள்!

இப்போதைய சூழலில் நிலாவை அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது. வானுயர உயர்ந்திருக்கும் அப்பார்ட்மென்ட் வீடுகளும் ஜன்னல்கள் இல்லாத சில வீடெனும் கூடுகளும் நிலாவை நம்மிடமிருந்து பிரித்துவிட்டன.

பெரிய குடும்பம்... அனுபவம் நிறைந்த முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் வட்டமாக அமர்ந்து நிலா வெளிச்சத்தில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். கிராமத்து வயக்காட்டின் வாசனையும் நிலாவின் வெளிச்சமும் சேர்ந்து செரிமானச் சுரப்புகளை அனைவரிடமும் இயற்கையாகத் தூண்டிக்கொண்டிருந்தது.

Food
Food

தாங்கள் சாப்பிடப்போகும் உணவு என்னவென்பதை அறிந்துவைத்திருக்கிறார்கள். அந்த உணவின் அடிப்படை என்ன, அவற்றின் மூலப்பொருள்கள் என்ன, சாப்பிடும் உணவினால் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் பலன்கள் என்னவென்பதை அறிந்து ரசித்து லயித்துச் சாப்பிடுகிறார்கள். அந்த உணவில் மூத்தோரின் அனுபவமும் அன்பும் பதிந்து நலம் பரப்புகிறது. உணவிலேயே ஆரோக்கியம் கலந்திருப்பதால், நோயின்றி நலமுடன் வாழ்கின்றனர். இது கடந்த தலைமுறையினரின் நிலாச்சோறு அனுபவம்.

கூட்டுக்குடும்ப கலாசாரம் சிதைந்து, உணவின் இலக்கணமும் என்றைக்குச் சீரழிக்கப்பட்டதோ, அன்றே நோய்களுக்கு ஆதாரமான தலைமுறையாக மாறிவிட்டது இன்றைய சமுதாயம். இன்றைய தலைமுறையின் நிலாச்சோறு எப்படி இருக்கிறது தெரியுமா? மின்விளக்குகள் உமிழும் வெளிச்சத்தில் கைபேசியில் பேசியபடி குடும்பத்தலைவர் இரவு உணவை உள்ளே தள்ளுகிறார். தனக்கான கைபேசியில் சொடுக்கிக்கொண்டே ஃபாஸ்ட்புட் உணவை விரைவாகச் சாப்பிடுகிறார் அக்குடும்பத்து இளைஞன். `எல்லோரும் உட்கார்ந்து ஒற்றுமையுடன் சாப்பிடலாமே’ என்று அங்கலாய்க்கிறார் குடும்பத் தலைவி. தவறுகளை சுட்டிக்காட்டவோ, எடுத்துக்கூறவோ இன்றைய குடும்பங்களில் தாத்தாவுக்கோ, பாட்டிக்கோ இடமிருப்பதில்லை. அப்படியே ஒருசில குடும்பங்களில் இருந்தாலும் அவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்கும் எண்ணம் தவறான உணவியலைப் பின்பற்றும் இன்றைய இளைஞர்களுக்கு இருப்பதில்லை.

Obesity
Obesity

நிலாவெளிச்சத்தில் மின்னும் வாகன ஒளியில் ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட பார்சல் உணவுகள், அனுதினமும் பெருநகர வீடுகளின் கதவைத் தட்டுகின்றன. உணவின் உட்பொருள் என்ன, அதன் பயன்கள் என்ன, அதற்கான ஆதாரம் என்ன என்பதுபோன்ற விஷயங்கள் பார்சல் செய்யப்பட்ட துரித உணவுகளில் தெரிய வாய்ப்பில்லை. `தவறான உணவியல்’ எனும் கபட நாடகம் ஒவ்வொரு இரவிலும் அரங்கேற்றப்படுகிறது. நோய்கள் எனும் கொடூரமான கதாபாத்திரங்கள் நம்மை ஆட்டம் காணவைக்கின்றன. இப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலாச்சோறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதைய சூழலில் நிலாவை அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது. வானுர உயர்ந்திருக்கும் அப்பார்ட்மென்ட் வீடுகளும் ஜன்னல்கள் இல்லாத சில வீடெனும் கூடுகளும் நிலாவை நம்மிடமிருந்து பிரித்துவிட்டன. வெள்ளை நிலா பளிச்சென வானத்தில் இயற்கையாக தெரியும்போது, செல்போனில் ‘இதுதான் நிலா’ என்று குழந்தையிடம் காட்டி சோறூட்டுவது எத்தனைதுரதிர்ஷ்டம்.

Night Food
Night Food
அன்பைக் குழைத்து உணவு பரிமாறுவதற்கு மட்டுமல்ல, மனதில் இருக்கும் அன்பையும் பரிமாறுவதற்கான தளமே நிலாச்சோறு!
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

`நிலாச்சோறு' எனும் இரவு உணவு: பொதுவாக இரவு உணவை `நிலாச்சோறு’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். நிலாவைக் காட்டி அம்மா சோறூட்டுவதைப் போல, பாசமாக, நேசமாக பரிமாறப்பட வேண்டியது இரவு உணவு! குழந்தையின் பசியறிந்து செரிமானம் பாதிக்கப்படாத வகையில் ஒரு அன்னை சிரத்தையெடுத்து உணவு தயாரிப்பதைப் போல, இரவு உணவு தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறாக அனைவருடைய இரவு உணவு வகைகளும் இருக்கின்றன. பசியின் வீரியம் உணர்ந்து இரவு உணவை யாரும் எடுத்துக்கொள்வதில்லை. அதிக அளவுள்ள உணவுகள் இரவு நேரத்திலேயே இரைப்பைக்குள் செல்கின்றன. உறங்கும் போதே நோய்களுக்கு வித்திட்டுக்கொண்டிருக்கிறோம். நலச்சோறாக இருக்க வேண்டிய நிலாச்சோறு, நலிவுற்ற சோறாக இருப்பதுதான் அனைத்து விபரீதங்களுக்கும் காரணம். தவறான இரவு உணவால் எத்தனை நோய்கள் உருவெடுக்கின்றன தெரியுமா?

செரிமானத்துக்கு எளிமையான உணவுகள், உங்கள் தட்டில் இடம்பிடிக்க வேண்டியது இரவில்தான். செரிமானக் கருவிகளுக்கு சவாலாக விளங்கும் கடுமையான உணவுகளுக்கு ஓய்வளிக்க வேண்டியதும் இரவில்தான். சாப்பிட்டு முடித்ததும் நிலா வெளிச்சத்தில் அன்பர்களுடன் பேசிக்கொண்டே மெதுவாக நடைப்பயின்றால் செரிமானம் சிறப்பாக அமையும். ஆனால் இரவு உணவைச் சாப்பிடும்போதே உறக்கத்தை நாடுகிறது நோய்களால் தத்தளிக்கும் இன்றைய தலைமுறை. பிறகு எப்படி மெதுநடை போட முடியும்?

Moon lightfood in Manamadurai
Moon lightfood in Manamadurai

சமுதாய நிலாச்சோறு: மாட்டு வண்டியைக் கட்டிக்கொண்டு உறவுகளும் உணவுப் பாத்திரங்களும் தடபுடலென ஓசை எழுப்ப, நதிக்கரை ஓரங்களுக்கு பெளர்ணமி இரவுப் பொழுதுகளில் சென்று இனிய கதைகள் பேசி, கேளிக்கை விளையாட்டுகளுடன் விடிய விடிய கும்மாளம் அடித்த நாள்கள் நம் சமுதாயத்தில் இருந்தன. அந்த நாள்களின் சிறப்பே நிலாச்சோறுதான். உறவுகள் அனைத்தும் வட்டமாகச் சூழ்ந்து உட்கார்ந்திருக்க, குடும்பத்தின் மூத்த பெண்மணி தனது கையால் பெரிய பெரிய சோற்றுருண்டைகளை உருட்டி ஒவ்வொருவர் கையிலும் தர, ஒவ்வொரு பருக்கையையும் ரசித்து ருசித்து சாப்பிட்ட நாள்கள் அவை.

இப்போதும்கூட சித்ரா பெளர்ணமி நாளில் கடற்கரை ஓரங்களில் சமுதாய நிலாச் சோறு நிகழ்வு நடப்பதுண்டு. ஆனால் அதில் இடம்பெறுவது அதிகளவில் பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிடும் போட்டிகளே. ஒரே வேளையில் அளவுக்கு அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது உண்டாகும் பாதிப்புகள் கொடூரமானவை. அன்றைய சமுதாய நிலாச்சோறு நேசத்தை ஊட்டி, மனதை ஆசுவாசப்படுத்தி, உடலை வளர்த்தது. இன்றைய நிலாச்சோறோ நோய்களின் ஆதாரமாக மாறியிருக்கிறது. துரித உணவுகளை அதிகளவில் இரவு நேரத்தில் சாப்பிட்டதும், செரிமானத் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவதுடன் ஒவ்வாமை காரணமாக பல்வேறு குறிகுணங்கள் உடலில் தோன்றுவதைப் பலரும் கவனித்திருக்கலாம்.

Junk Food
Junk Food

நமது மன உணர்வுகளை சக மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வடிகாலாக இருந்தது நிலா வெளிச்சம். ஆனால், இன்று மதுபானங்களை அளவில்லாமல் பருகிக்கொண்டே சக மனிதர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு, கல்லீரலுக்கு ஆப்பு வைக்கத் தொடங்கும் நிகழ்வுகள் இன்றைய நிலா வெளிச்சத்தில்தான் அரங்கேறுகின்றன. ’மனதில் உள்ள சுமையை அகற்றுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு குடும்பத்துக்கு பாரமாக மாறும் ‘குடி’மகன்கள் உச்சத்தைத் தொடுவதும் நிலாவெளிச்சத்தில்தான் நடக்கின்றன. உணவு இலக்கணம் பிறழ்ந்த ’பார்ட்டிகள்’ நடைபெறுவதும் நிலவின் ஒளியில்தான். அளவுக்கு அதிகமான கலோரிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், செயற்கை நிறமிகள் தூவிய துரித உணவுகள், உணவுகளுக்குத் தொட்டுக்கொள்ள சில்லெனும் பன்னாட்டுக் குளிர்பானங்கள் என நிலவின் வெளிச்சத்தில்தான் பகிரப்படுகின்றன. இப்படி முறை தவறிய நிலாச்சோறு இன்றைய நவீன யுகத்தில் அதிகம்.

நமது `நிலாச்சோறு' எனும் இரவு உணவை முறையாக அமைத்துக்கொண்டால், பல்வேறு நோய்களிலிருந்து தப்பிக்கலாம். செல்போன்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கும் ஓய்வளித்துவிட்டு குடும்ப உறவுகளுடன் மொட்டைமாடி நிலாவெளிச்சத்தில் இரவு உணவை அமைத்துக்கொள்ளுங்கள், அது அப்பார்ட்மென்ட் வீடுகளாக இருந்தாலும் சரி! ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பல குடும்பங்கள் நிலாச்சோறு சாப்பிடுவதற்காக இடம்பிடிக்க முந்தும் சூழல் ஏற்பட்டால், சமுதாயம் ஆரோக்கியமாக மாறத் தொடங்கிவிட்டது என்று மகிழ்ச்சியாக தெரிவிக்கலாம்.

Apartment
Apartment

`நிலாச்சோறு' என்பது இயற்கையுடன் நம்மைப் பிணைக்கும் எதிர்பார்ப்பில்லாத நண்பன். நீரும் நிலமும் நிலவும் ஒரு சேர இணைந்து நமது மகிழ்ச்சியை, துயரத்தை சக குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்துகொள்ள உதவும் மனநல மருத்துவர்கள். கூட்டுக்குடும்ப கலாசாரத்துக்கான சாட்சி அழகிய நிலவு. நிலவின் குளுமை மனதை சாந்தப்படுத்துவதுடன், உணவை சமமாகப் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தைச் சொல்லிக்கொடுக்கும் இயற்கையின் ஆசான். அன்பைக் குழைத்து உணவு பரிமாறுவதற்கு மட்டுமல்ல, மனதில் இருக்கும் அன்பையும் பரிமாறுவதற்கான தளமே நிலாச்சோறு!

Vikatan

மின்சாரம் இல்லா இரவு… முழுநிலவு நாள்! தென்னை மரங்களுக்கு நடுவே நிலவின் ஒளி பாய்ந்து மொட்டைமாடியில் பரிமாறப்பட்டிருக்கும் உணவுக்கு சுவையூட்டுகிறது. உணவு சாப்பிட்டதும், மனதில் உள்ள சஞ்சலங்களை அன்பானவர்களுடன் பரிமாறி தெளிவடைய துணை நிற்கிறது நிலவு. இத்தகைய நிலாச்சோற்றை அமைக்க நம்மால் முடியாதா என்ன? நிலாச்சோறு சாப்பிடுவோம். அடைந்திருக்கும் கூடுகளைவிட்டு வெளியேறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு