Election bannerElection banner
Published:Updated:

கோவிட் 19: எப்படி படுத்தால் மூச்சுத் திணறலிலிருந்து தப்பிக்கலாம்? நிபுணரின் விரிவான வழிகாட்டல்!

பக்கவாட்டில் படுக்கும் நிலை..
பக்கவாட்டில் படுக்கும் நிலை.. ( பா.காளிமுத்து )

இந்த நிலைகளில் படுத்தால் மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பை நீங்கள் அதிகளவில் குறைத்துவிடலாம்.

கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலையில் மூச்சுத் திணறல் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. கடந்த வருடம் மூச்சுத் திணறல் பாதிப்புக்குள்ளான கொரோனா நோயாளிகளைவிட இந்த வருடம் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். அதனால்தான், நாடெங்கிலும் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், `ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை’ என்கிற நிலைக்குச் செல்லாமல் முன்கூட்டியே தங்களைத் தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகள் இருக்கின்றன.

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

அதுகுறித்து விரிவாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சீனியர் பிசியோதெரபிஸ்ட் சுரேஷ்குமார். ``கொரோனா இரண்டாவது அலையில் பலரும் மூச்சுத் திணறல் மற்றும் அதீத உடல் சோர்வு மற்றும் உடல்வலி ஆகியவற்றால் பாதிக்கப் படுகின்றனர். கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுழைந்து தொண்டை வழியாகச் சென்று நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்கள் மெதுவாக வீங்க ஆரம்பிக்கின்றன. இதனால் ஆக்ஸிஜன் முறையாக உள்ளே செல்ல முடியாத சூழல் உருவாகி, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியாக இருந்து மூச்சுவிட சிரமப்படுகிறவர்கள் படுக்கும்போது எந்த பொசிஷனில் படுக்கிறார்கள் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

* கொரோனா மட்டுமல்ல வேறு எந்தவொரு மூச்சுத்திணறல் பிரச்னைக்கும் மருத்துவர்களுடைய பெஸ்ட் அட்வைஸ் குப்புறப் படுத்துக்கொள்வதுதான். ஒருவர் குப்புறப் படுக்கும்போது, அதிகளவில் ஆக்சிஜன் நுரையீரலுக்குச் செல்லும். தலைக்கு ஒரு தலையணையும் வயிற்றுப் பகுதி கீழே அழுத்தாதவாறு வயிற்றுக்குக் கீழே ஒன்று அல்லது இரண்டு தலையணைகளையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கையினை தலைக்கு வைத்துக்கொண்டு இன்னொரு கையை நீட்டி வைத்துக்கொள்ளலாம். படுக்கை விசாலமாக இருக்கும்பட்சத்தில், ஒரு காலை உங்கள் வசதிக்கேற்றவாறு மடக்கிக்கொள்ளலாம். மூச்சுத் திணறலுக்கு இது சிறந்த படுக்கை நிலை. இந்த நிலையில் படுத்தால் மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பை நீங்கள் பெருமளவில் குறைத்துவிடலாம்.

குப்புறப் படுக்கும்போது...
குப்புறப் படுக்கும்போது...
பா.காளிமுத்து

* அதேபோல சமதளத்தில் நேராக மல்லாந்து படுக்கும்போது நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் சரியாகச் செல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்படும். ஆகையால் முழங்காலுக்கு மேல் தொடைப்பகுதியில் ஒரு தலையணையை வைத்துக்கொள்ள வேண்டும். தலை சாய்க்கும் பகுதி 30 முதல் 40 டிகிரி வரை தூக்கிய நிலையில் இருக்க வேண்டும். வீட்டில் அதற்கான வசதிகள் இல்லாவிடில் இரண்டு தலையணைகளை நேராகவும் ஒரு தலையணையை செங்குத்தாகவும் வைத்து அதில் தலையை வைத்துக் கொள்ளலாம். இந்த பொசிஷனும் உங்கள் நுரையீரலுகு அதிக ஆக்ஸிஜனை கிடைக்கச் செய்யும்.

மல்லார்ந்து படுக்கும்போது
மல்லார்ந்து படுக்கும்போது
பா.காளிமுத்து

* அடுத்ததாக பக்கவாட்டில் படுக்கும்போது என்ன பொசிஷன் எனப் பார்க்கலாம். தலைக்கு இரண்டு தலையணைகளை வைத்து உயர்த்திக்கொள்ள வேண்டும். இன்னொரு தலையணையை எடுத்து நெஞ்சுப்பகுதியை அணைத்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இரண்டு கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் வலதுபுறமும், இடதுபுறமும் மாறி மாறி படுத்துக்கொள்ள வேண்டும்.

பக்கவாட்டில் சாய்ந்து படுக்கும்போது...
பக்கவாட்டில் சாய்ந்து படுக்கும்போது...
பா.காளிமுத்து

படுக்கும்போது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த நான்கு நிலைகளிலும் மாறி மாறி படுத்தால் மூச்சுப் பிரச்னை வருவதைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். படுக்கும்போது மட்டுமல்ல உட்காரும்போதும் நிற்கும்போதும் நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அதிகளவில் கிடைக்கச் செய்வதற்கும் சில பொசிஷன்கள் இருக்கின்றன.

* கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததும் நீங்கள் கண்ட பொசிஷனில் உட்கார்ந்தீர்கள் என்றால் உங்களுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் வர வாய்ப்புள்ளது. ஆகையால், இரண்டு தலையணைகளை மடியில் வைத்தபடி அமர்ந்துகொண்டால் நுரையீரலுக்கு அதிகளவில் ஆக்ஸிஜன் கிடைக்கும்.

உட்காரும்போது...
உட்காரும்போது...
பா.காளிமுத்து

* மேஜையில் இரண்டு தலையணைகளை வைத்து நீங்கள் சேரில் அமர்ந்துகொண்டு அந்த தலையணைமீது கைவைத்து சாய்ந்து படுத்துக்கொண்டால் அதுவும் நல்ல பலன் கொடுக்கும்.

மேஜையில் சாய்ந்த நிலையில்..
மேஜையில் சாய்ந்த நிலையில்..
பா.காளிமுத்து

* அதேபோல நிற்கும்போது ஒரு சுவரிலிருந்து சற்று தள்ளி நின்றுகொண்டு உங்கள் பின்பகுதியை சுவரில் சாய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு காலை மட்டும் மடித்து சுவரில் வைத்துக்கொண்டு தலையை கொஞ்சம் முன்னே தள்ளியவாறு நின்றால் அதுவும் நல்ல பலனளிக்கும்.

நிற்கும்போது...
நிற்கும்போது...
பா.காளிமுத்து

இதெல்லாம் மருத்துவர் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கும்பட்சத்தில் செய்ய வேண்டியவை. மிக முக்கியமாக உங்களது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருந்து மூச்சுத்திணறல் ஏற்படும்போது செய்ய வேண்டியவை. மாறாக உங்களது ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும் என்பதையும் கனத்தில்கொள்ளுங்கள். மருத்துமனையில் ஆக்ஸிஜன் கிடைக்க தாமதமானால் அந்த இடைப்பட்ட நேரத்தில் இதை நீங்கள் முயன்று பார்க்கலாம்” என்றார்.

இந்தத் தகவல்களையும் கொரோனாவுக்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டிய மூச்சுப் பயிற்சிகள் குறித்தும் வீடியோ வடிவில் முழுமையாகப் பார்க்க…

"மூச்சுத் திணறல் வராமல் தடுக்க ஈஸியான வழி!" #Breath | #oxygen | #Covid19

Posted by Aval Vikatan on Tuesday, April 27, 2021
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு