மூக்கு வழியே கோவிட் தடுப்பு மருந்து... பாரத் பயோடெக்கின் முயற்சி பலன் தருமா?

தடுப்பு மருந்தை ஊசியின் வழியாக உடலுக்குள் செலுத்துவதற்குப் பதிலாக, சொட்டு மருந்துபோலவோ, ஸ்பிரே வழியாகவோ மூக்குக்குள் செலுத்தும் முறையே 'இன்ட்ரா நேஸல் வாக்ஸின் (Intra Nasal vaccine)'.
கோவிட்-19-க்கு `கோவாக்ஸின் (COVAXIN)' என்ற தடுப்பூசியைக் கண்டறிந்த பாரத் பயோடெக் நிறுவனம் 'மூக்கு வழியே வாக்ஸின்' செலுத்தும் புதிய ஆராய்ச்சி பரிசோதனையை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவலால் சிக்கித் தவித்து வரும் உலக மக்களுக்கு, கொரோனாவுக்கு எதிராகக் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் சிறிது நம்பிக்கையை அளித்தன. அப்படி நம்பிக்கை அளித்த தடுப்பூசிகளில் ஒன்றுதான், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஹைதரா பாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள கோவாக்ஸின் (COVAXIN).

இந்தத் தடுப்பூசி பேஸ்-1 (Phase-1), பேஸ்-2 (Phase-2) மற்றும் பேஸ்-3 (Phase-3) ட்ரையல் பரிசோதனைகளைக் கடந்து கடந்த ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள் உட்படப் பலர் கோவாக்ஸினை எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், 'மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standard Control Organisation-CDSCO)' பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 'மூக்கு வழியே கோவிட் வாக்ஸினை செலுத்திப் பரிசோதிக்கும் முறைக்கு' அனுமதியளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பேஸ்-1 கிளினிக்கல் ட்ரையலை (Phase-1 Clinical Trial) தொடங்கியுள்ளது இந்நிறுவனம்.

தடுப்பு மருந்தை ஊசியின் வழியாக உடலுக்குள் செலுத்துவதற்குப் பதிலாக, சொட்டு மருந்துபோலவோ, ஸ்பிரே வழியாகவோ மூக்குக்குள் செலுத்தும் முறையே 'இன்ட்ரா நேஸல் வாக்ஸின் (Intra Nasal vaccine)'.
"தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியை, இன்ட்ரா நேஸல் வாக்ஸின் எடுத்துக்கொள்வதால் தவிர்க்கலாம். மேலும் 0.1 மிலி அளவிலான மருந்தை மூக்குக்குள் இட்டுக்கொண்டாலே போதும். உங்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும். இது மிகவும் எளிமையான முறையும்கூட" என்கிறது பாரத் பயோடெக் தரப்பு.
மூக்கு வழியே கோவிட் வாக்ஸினை எடுத்துக்கொண்டால் உடலுக்குள் நோய் எதிர்ப்புத்திறன் உருவாகுமா... இது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரியிடம் இதுகுறித்து கேட்டோம்.

"ஏதேனும் ஒரு நோய்க்கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை நாம் பெரும்பாலும் மூக்கின் வழியே எடுத்துக்கொள்வதில்லை. தடுப்பு மருந்துகள் ஊசியின் வழியாக நரம்பிலோ, தசையிலோ செலுத்தப்படும்போது அது நேரடியாக ரத்த செல்களுடன் கலந்து நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும். ஒரு மருந்தை மூக்கின் வழியே எடுத்துக்கொள்ளும்போது அது எந்த அளவுக்கு உடலின் மற்ற பாகங்களுக்கும் செல்லும் என்று தெரியவில்லை. அதிலும் அந்த மருந்தை 0.1 மிலி அளவில் எடுத்துக்கொண்டால் நிச்சயம் அது உடலுக்குள் ஊடுருவாது. இதனால் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் உருவாகுமா என்பது கேள்விக்குறியே!
மூக்குக்குப் பதில் வாய் வழியாகச் செலுத்தப்படும் பட்சத்தில்கூட சிறிது பயன் இருக்க வாய்ப்புள்ளது. அந்த மருந்து உணவு மண்டலத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நம் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டும். குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வாய்வழியே கொடுக்கப்படுவது இதன் அடிப்படையில்தான்.

நோய்த் தொற்று அல்லது கட்டி போன்று மூக்கில் நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு வேண்டுமானால், அதற்கான மருந்தைச் சொட்டு மருந்து போலவோ, ஸ்பிரே வழியாகவோ எடுத்துக்கொள்ளலாம். முழு உடலையும் பாதிக்கும் ஒரு நோய்க்கான மருந்தை மூக்கின் வழியே எடுத்துக்கொள்வது அவ்வளவு சரியான முறையல்ல. இது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சியின் முடிவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் சுதா மகேஷ்வரி.