Published:Updated:

'நேர்கொண்ட பார்வையில் இடம்பெறும் 'பைபோலார் டிஸ்ஆர்டர்'... குணப்படுத்த முடியாத நோயா?

பெ.மதலை ஆரோன்
முத்துக்குமார் மு

'நேர்கொண்ட பார்வையில்' அஜித்தைப் பாதித்த 'பைபோலார் டிஸ்ஆர்டர்'... காரணங்கள், அறிகுறிகள் தீர்வுகள்!

நேர்கொண்ட பார்வை அஜித்
நேர்கொண்ட பார்வை அஜித்

நம்மிடம் யாராவது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பப் பேசினால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து கோபப்பட்டுவிடுவோம். ஆனால், மருத்துவ அறிவியல் இந்தப் பிரச்னையை வேறு கோணத்தில் பார்க்கிறது. 'ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பப் பேசுவது, ஒரு கேள்விக்கு 10 பதில்களைச் சொல்வது ஆகிய அறிகுறிகள் 'பைபோலார் டிஸ்ஆர்டர்' (Bipolar disorder) என்ற மனநலக் குறைபாடாக இருக்கும்' என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

பைபோலார்  டிஸ்ஆர்டர்
பைபோலார் டிஸ்ஆர்டர்
freepik

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் 'பைபோலார் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அஜித். இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் வகையில், அமைதி, திடீர் கோபம், அதிகமாக யோசித்தல் எனப் பல்வேறு உணர்வுகளை அஜித்தின் கதாபாத்திரம் பிரதிபலித்திருக்கிறது.

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சையை எடுத்துக்கொண்டால் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். 'பிரச்னை நீடித்தால் தற்கொலை வரை செல்லக்கூடும்' என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

பைபோலார் டிஸ்ஆர்டருக்கான தீர்வு குறித்து விரிவாகப் பேசினார் அவர்.

"மனஎழுச்சி, மனஅழுத்தம் ஆகிய இரண்டு பிரச்னைகளும் சேர்ந்ததுதான் பைபோலர் டிஸ்ஆர்டர். இதை `இருதுருவ நோய்' என்றும் குறிப்பிடுவோம். ஆண், பெண் என இருவருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படலாம்.

மன எழுச்சி!

பைபோலார்  டிஸ்ஆர்டர்
பைபோலார் டிஸ்ஆர்டர்
freepik

ஒருவருக்கு அதிகமான சந்தோஷம் ஏற்படும்போது மனஎழுச்சி ஏற்படும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 'குறைவாகத் தூங்க வேண்டும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டும்' என்ற எண்ணம் இருக்கும். தெரிந்த நபர், தெரியாத நபர் என்று எந்தப் பாகுபாடுமில்லாமல் அனைவரிடமும் அளவுக்கு அதிகமாகப் பேசுவார்கள். எப்போதும் கற்பனைகள், சிந்தனைகளில் மூழ்கியிருப்பார்கள். அதிகமான செலவுகளைச் செய்வார்கள். சாதாரண விஷயத்துக்கும் அதிகமாகக் கோபப்படுவார்கள். 'அவர்களால் மட்டுமே எல்லாம் முடியும்' என்ற எண்ணம் இருக்கும். ஒருகட்டத்தில் தனக்குத்தானே பேசிக்கொள்ளவும் சிரித்துக்கொள்ளவும் செய்வார்கள்.

மனஅழுத்தம்!

மனஅழுத்தம்
மனஅழுத்தம்
freepik

பைபோலார் டிஸ்ஆர்டர் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் பலரும் மனஅழுத்தத்துக்கு ஆளாவார்கள். மனஎழுச்சியின் காரணமாக அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள் மனஅழுத்தத்தால் அமைதியாகிவிடுவார்கள். இதனால் அதிகமான சோகத்துடனே இருப்பார்கள். யாரிடமும் பேசப் பிடிக்காது. எந்தச் செயலிலும் நாட்டம் இருக்காது. கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள். 'தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது. தன்னுடைய எதிர்காலம் முடிந்துவிட்டது' என்ற மனநிலையில் இருப்பார்கள் என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

2017-ம் ஆண்டு தரவுகளின்படி உலக மக்கள் தொகையில் 4.66 கோடி பேருக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் பாதிப்பு உள்ளது. அமெரிக்காவில் இந்தக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் 4.4 சதவிகிதம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை 0.1 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பைபோலார்
பைபோலார்

'பைபோலார் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. ஐந்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்' என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தப் பாதிப்புக்கான சிகிச்சை குறித்து டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் கூறும்போது, "முறையான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். இந்தப் பிரச்னைக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் கவுன்சலிங் ஆகிய இரண்டு வகையாகத் தீர்வு காணலாம். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, தற்கொலை எண்ணம் அதிகமாக ஏற்படும். எனவே மனஅமைதிக்காக யோகா பயிற்சி, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பைபோலார் டிஸ்ஆர்டர்
பைபோலார் டிஸ்ஆர்டர்
freepik

நோயாளிகளின் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு, இ.சி.பி (Electro convulsive therapy) என்ற சிகிச்சை முறையும் கொடுக்கப்படுகிறது. முறையான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் பாதிப்பிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்" என்கிறார் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.