நொடிப்பொழுதில் நாம் கடந்து வரும் இந்த `ரத்தம் தேவை' மெசேஜ் ஒவ்வொன்றுக்குப் பின்னும் உயிருக்குப் போராடும் ஒருவரின் வலி நிறைந்த கதை மறைந்துள்ளது என்கிறார்கள் ரத்ததானம் செய்யும் தன்னார்வலர்கள்!

ஜூன்-14-ம் தேதியான இன்று உலக ரத்த கொடையாளர்கள் தினமாகக் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் ABO ரத்த வகையைக் கண்டறிந்து அதற்காக நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த தினமே உலக ரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு, தமிழகத்தில் தொடர்ந்து ரத்ததான சேவை செய்துவரும் நாம் தமிழர் கட்சியின் `குருதிக்கொடை பாசறை'யின் மாநில ஒருங்கிணைப்பாளர் நாதனிடம் பேசினோம்.

`` `குருதிக்கொடை பாசறை' அமைப்பை 2009-ம் ஆண்டு தொடங்கினோம். விபத்துக்குள்ளானவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் தங்களுக்குச் சரியான ரத்த வகை கிடைக்காமல் உயிரிழப்பதைத் தடுக்கவும், ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கத்திலும் தொடங்கப்பட்டதுதான் எங்கள் `குருதிக்கொடை பாசறை.'
இன்று இந்த அமைப்பில் தமிழகம் முழுக்க 18 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான மக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் ரத்த தான ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஆயிரக்கணக்கில் ரத்த தான முகாம்களை நடத்திச் சேகரித்த ரத்த யூனிட்டுகளை பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுத்திருக்கிறோம்.
நாங்கள் சேகரிக்கும் ரத்தத்தைப் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கே தருவோம். தனியார் மருத்துவமனைகளுக்கும் கொடுத்துக்கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் தானமாகத் தரும் ரத்தத்தை அவர்கள் மக்களுக்கு இலவசமாகத் தராமல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர் என்ற புகார் வந்த பிறகு, தனியார் மருத்துவமனைகளுக்குத் தருவதை நிறுத்திவிட்டோம்.
சிலர் எங்களை நேரடியாகவே அணுகி தங்களுக்குத் தேவைப்படும் ரத்த வகை பற்றியும், ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் கூறுவார்கள். அவசரத்துக்கேற்ப நாங்களும் உடனடியாக ஏற்பாடு செய்துகொடுப்போம். இதற்காகவே நிறைய வாட்ஸ்அப் குரூப்கள், ஃபேஸ்புக் பக்கங்களை வைத்திருக்கிறோம். சிலர் நேரடியாகவே எங்கள் மொபைல் நம்பருக்கு அழைப்பார்கள். சிலர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வழியாகத் தொடர்புகொள்வார்கள்.

சில தினங்களுக்கு முன் இரவு 12 மணிக்கு விழுப்புரத்திலிருந்து ஒரு நபர் என் மொபைல் நம்பருக்கு அழைத்து, `நாளைக்குக் காலையில 8 மணிக்கு என் மனைவிக்கு சிசேரியன் பிரசவம். அவளோட பிளட் குரூப் AB நெகட்டிவ். இந்த குரூப் பிளட் எங்கேயுமே கிடைக்கல. எப்படியாவது ஏற்பாடு செஞ்சு தாங்க'னு போனிலேயே அழத் தொடங்கிவிட்டார்.
அவசரத்தை உணர்ந்து இரவே விழுப்புரத்திலுள்ள குருதிக்கொடை பாசறையின் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து, AB நெகட்டிவ் ரத்த வகை உள்ளவரைக் கண்டறிந்து, மறுநாள் காலை 7 மணியளவில் அந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இதுபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பலர் கையறு நிலையில் மிகவும் அரிதான ரத்த வகை வேண்டும் என்று கடைசி நேரத்தில் சொல்வார்கள். அவர்கள் கேட்ட ரத்த வகையை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டுத்தான் எங்களின் மற்ற வேலைகளையே செய்வோம்.
கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுவதற்கு முன்புவரை ஒவ்வொரு மாதத்துக்கும் குறைந்தது இரண்டு, மூன்று ரத்த தான முகாம்களை நடத்தி வந்தோம். ரத்த தானம் அளிப்பவர்களுக்குக் `குருதிக்கொடை பாசறை'யின் சார்பில் சான்றிதழ் வழங்கி ஊக்குவிப்போம். கொரோனா ஊரடங்கில் அந்த முகாம்கள் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. பல கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்று கேள்விப்பட்டோம். தடைகளைத் தாண்டி சில ரத்த தான முகாம்களை நடத்தினோம்.
கடந்த மே-18-ம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 3,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவசரத் தேவை என்று யாராவது ரத்தம் கேட்டால் எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக ரத்தம் தேவைப்படுவோர்கள் உள்ள மருத்துவமனைகளுக்கே தகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையோடு சென்று ரத்தம் கொடுத்து வருகிறார்கள். அவசர சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுவோர்கள் 76674 12345 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம்.

`சிகிச்சையின்போது ரத்தப் பற்றாக்குறையால் உயிரிழந்தார்கள்' என்ற நிலை தமிழகத்தில் மாற வேண்டும். `ஒவ்வொரு துளியும் உயிர்காக்கும், கொடுப்பவர் உள்ளம் உயர்வாகும்' என்ற உயரிய சிந்தனையோடு எங்கள் சேவை தொடரும்..." என்றார் நாதன்.
இதுவரை 72 முறை ரத்த தானம் அளித்திருக்கும் குருதிக்கொடை பாசறையின் உறுப்பினரான தமிழ் எடிசனிடம் அவரது சேவை குறித்துக் கேட்டோம்.

``தஞ்சாவூர்ல இருக்குற சாரனூர்ப்பட்டி கிராமம்தான் என் சொந்த ஊர். தஞ்சாவூர் டு திருச்சிக்கு போற நேஷனல் ஹைவேல தினமும் விபத்து நடக்கும். ரத்த இழப்பு ஏற்பட்டு நிறையபேர் உயிருக்குப் போராடுவாங்க. மருத்துவமனைக்குக் கொண்டுபோனாலும் அவங்களுக்கு ரத்தம் கொடுக்க ஆள் கிடைக்காம நிறைய பேர் இறந்து போயிருக்காங்க.
இந்தச் சம்பவங்கள் எல்லாம் என்னை ரொம்ப பாதிச்சது. இதுக்கு என்னால என்ன பண்ண முடியும்னு யோசிச்சேன். என்னோட 18 வயசுல ரத்த தானம் செய்ய ஆரம்பிச்சேன். அப்போ நான் சூப் கடையில வேலைபார்த்துகிட்டு இருந்தேன். இப்போ எனக்கு 38 வயசாகுது. வெல்டிங் வொர்க் பண்றேன். 20 வருஷமா ரத்த தானம் செஞ்சுகிட்டு வர்றேன். ஆரம்பத்துல நானே நேரடியா மருத்துவமனைக்குப் போய் ரத்தம் கொடுப்பேன். கடந்த 10 வருஷமா `குருதிக்கொடை பாசறை'யோடு இணைந்து செயல்பட்டு வர்றேன்.
12 வருஷத்துக்கு முன்னாடி என் 6 வயசுப் பையனுக்குக் கால்ல அடிபட்டு எலும்பு முறிந்துவிட்டது. அவனைத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சிகிச்சைக்காகச் சேர்த்திருந்தோம். அங்க ஒரு பொண்ணு அழுதுகிட்டு இருந்தாங்க.
என்னன்னு விசாரிச்சப்போ, அந்தப் பொண்ணோட அம்மாவுக்கு கால்ல அடிபட்டு சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படுதுனு தெரிய வந்தது. ஆனா, யாரும் ரத்தம் கொடுக்க முன்வரல. அதனால டாக்டர் பார்க்க முடியாதுன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். உதவிக்குக்கூட யாரும் இல்ல. அந்த அம்மாவோட பிளட் குரூப்போட என்னோட பிளட் குரூப் பொருந்துனதால உடனே டாக்டர்கிட்ட சொல்லி ரத்தம் கொடுத்தேன். இப்போ அவங்க நல்லா இருக்காங்க.
ஒவ்வொரு முறை ரத்த தானம் கொடுத்த பிறகும், `ஓர் உயிரை காப்பாத்த நாமும் காரணம்'னு ஒரு நிறைவு ஏற்படும். இந்த நிறைவுதான் தொடர்ந்து ரத்த தானம் செய்ய என்னைத் தூண்டிக்கிட்டு இருக்கு. இறந்த பிறகு என்னோட உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கவும் எழுதிக் கொடுத்திருக்கேன். என் மனைவியும் ரத்த தானம் பண்ணுவாங்க. எனக்கு ரெண்டு பையன், ஒரு பொண்ணு. அவங்க வளர்ந்த பிறகு அவங்களையும் ரத்த தானம் செய்ய ஊக்குவிப்பேன்.
இந்த உலகத்துலேயே பெரிய விஷயம் ஒரு உயிரைக் காப்பாத்துறதுதான். அதுக்கு நாமும் ஒரு காரணமா இருக்கோம்ங்கிற சந்தோஷத்தை, கோடி கோடியான காசு, பணத்தாலகூட கொடுக்க முடியாது" என்கிறார் நிறைவான குரலில்.
இதுவரை நீங்கள் எத்தனை முறை ரத்த தானம் செய்திருக்கிறீர்கள் என்பதையும், ரத்த தானம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் #WorldBloodDonorDay என்ற ஹேஷ்டேக்குடன் கமென்ட்களாகப் பதிவிட்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!