Published:Updated:

40+ வயதுக்காரர்களை அதிகம் பாதிக்கும் மூட்டுவலி - தீர்வு என்ன? #LifeStartsAt40 #நலம்நாற்பது

எலும்பு பிரச்னைகள்
எலும்பு பிரச்னைகள்

நாற்பது வயதுக்கு மேல் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் பகிர்கிறார், மருத்துவர் அருண் கண்ணன்.

`நான் சென்னை வந்த புதுசுல, மேன்ஷன்ல தங்கியிருந்தேன். ஆபீசுக்கும், நான் தங்கியிருந்த மேன்ஷனுக்கும் 5 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அசால்ட்டா நடந்தே ஆபீஸ் வந்துடுவேன். இப்போ கார், அப்பார்ட்மென்ட் வாழ்க்கைனு செட்டிலானதால படிக்கட்டுகள்லகூட ஏற முடியல. ஒன்லி, லிஃப்ட்தான். இப்போல்லாம் ரொம்பநேரம் தொடர்ச்சியா நிக்க முடியல, படிக்கட்டுல ஏற முடியல. வயசாகிடுச்சோனு தோணுதுடா தம்பி!' என்றார் என்னுடன் பணியாற்றும் அந்த அண்ணன். அவர் மட்டுமல்ல, நாற்பதை நெருங்கும் பலரும், இதுபோலச் சொல்வதை அதிகம் கேட்க முடிகிறது. அடிப்படையில் `நமக்கு வயசாகிடுச்சோ' என்ற உணர்வை இவர்களுக்கு ஏற்படுத்தும் சூழல்கள் மூட்டு வலியும், எலும்பு வலியுமே. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளைவிட எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களே நம் ஊரில் அதிகம்.

மூட்டு வலி
மூட்டு வலி

``எலும்புத் தேய்மானம், ஒருவகை வயது முதிர்வுதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல, நாற்பது வயதை நெருங்கும் எல்லோருக்கும் நிச்சயம் உடல்நலம் குறித்த அச்சம் ஏற்படும். ஆனால், மூட்டு வலி வந்ததும், `நமக்கு வயதாகிவிட்டதென' நினைத்து மனதுக்குள் முடங்கிவிடவேண்டாம். கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால், வயது முதிர்வால் ஏற்படும் அந்தப் பிரச்னையை எளிதாகத் தடுக்கலாம்" என்கிறார், எலும்பு நோய் சிறப்பு மருத்துவர் அருண் கண்ணன். இதுபற்றி மேலும் விரிவாகப் பேசினார் அவர்.

``எலும்பு தொடர்பான பிரச்னைகள் நாற்பது வயதில்தான் அதிகமாக ஏற்படும். முதுகு வலி, கழுத்து வலி, தோள் வலி, மூட்டு வலி, எலும்புத் தேய்மானம் (Osteoporosis) போன்ற பிரச்னைகள் அந்தந்த வயதுக்கான பிரச்னைகள்தாம். நாற்பதைத் தாண்டும்போதே மெனோபாஸ் வரும் என்பதால், எலும்பு தொடர்பான பிரச்னைகளைப் பெண்கள் அதிகம் எதிர்கொள்வார்கள். அதுநாள்வரை அவர்கள் எலும்பைப் பாதுகாத்துவந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், இப்போது குறையத் தொடங்கியிருக்கும்.

எலும்பு பிரச்னைகள்
எலும்பு பிரச்னைகள்

நாற்பதுக்குமேல் கூடுதல் கவனம் தேவை. ஏன் தெரியுமா?

மனித உடலமைப்பில், முதுகெலும்புக்கு இடையே உள்ள சின்னச் சின்ன இடைவெளிகளில் ஜவ்வு போன்ற ஒரு பகுதி இருக்கும். அதில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களை ஒருகட்டம்வரை உடலானது தானாகவே சரிசெய்து கொள்ளும். ஆனால், நாற்பது வயதுக்கு மேல் உடல் அதற்கு ஒத்துழைக்காது. பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும் அந்த ஜவ்வுப் பகுதி, வயது முதிர்வால் நார் மாதிரி ஆகிவிடும். இந்தவகை பாதிப்பால் எலும்புகளில் வலி ஏற்படும். முதுகெலும்பு மட்டுமன்றி, முழங்கால் மூட்டுப்பகுதியிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்வதுண்டு. எந்தப் பகுதியில் ஏற்படுகிறதோ, அந்தப் பகுதியில் மூட்டு வலி ஏற்படும். எனவே, எலும்பு ஆரோக்கியத்தில் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

நாற்பதில், இருபது சாத்தியமா?

வயது முதிர்வு, தசை வலுவிழத்தல், உடல் பருமன், மரபணு போன்ற காரணங்கள்தான் எலும்பு தொடர்பான சிக்கல்களுக்கு முக்கியக் காரணிகள். இவற்றில் வயது முதிர்வு மற்றும் மரபணு காரணங்களை நம்மால் தடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இருபது வயதில் இருந்ததைப்போலவே நாற்பது வயதிலும், வேகமாக ஓடி ஆடிச் செயல்படவேண்டும் என்று நினைப்பது தவறு. நாற்பது வயதில் நம் உடலில் உள்ள எலும்புப் பகுதியில் வலி ஏற்படுவதை நம் உடல் வலுவிழப்பதற்கான அறிகுறி என்ற அடிப்படை புரிதல் அனைவருக்கும் அவசியம்.

மூட்டு வலி
மூட்டு வலி

சிலர் 'நான் 20 வயதில் இருந்ததைப் போல இருக்க ஆசைப்படுகிறேன்' என்றுகூறி தேவையில்லாத பயிற்சிகளையும் வழிமுறைகளையும் முறையற்ற மருத்துவ ஆலோசனையின்றி செய்வார்கள். இதனால், உடலைச் செயற்கையாக அதிக அழுத்தத்துக்கு உள்ளாக்குவார்கள். அப்படி உடலை வருத்திச் செயல்பட்டால் மேன்மேலும் எலும்புகளைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, நாற்பதுகளில் இருபதைச் சாத்தியப்படுத்த முயலவேண்டும். நாற்பதுகளில், எலும்பு ஆரோக்கியத்தைக் காக்க சில வழிமுறைகள் உள்ளன; அவற்றைப் பின்பற்றலாம். முதுகு வலி, முழங்கால் வலி, தோள்பட்டை வலி ஆகியவற்றால்தான் அதிகமான பாதிப்பு ஏற்படும். அவை குறித்து பார்ப்போம்.

* முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகக் குனிந்து நிமிர்ந்து வேலைசெய்யக் கூடாது. அதேபோல அடிக்கடி அதிக எடை தூக்கக்கூடாது. உட்காரும்போது, பின்னால் சாயக்கூடிய வசதியுள்ள நாற்காலிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

* முழங்கால் வலி உள்ளவர்கள் கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்போது முழங்காலில் அழுத்தம் ஏற்படும். அத்தகையவர்கள், முடிந்தவரை சம்மணமிட்டு உர்காருவதைத் தவிர்க்கலாம். பிரச்னை மிகத் தீவிரமாக இருக்கிறது, சில நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர்ந்தால் எழுந்திருக்க சிரமமாக உள்ளது என்பவர்கள், இந்தியன் முறை கழிவறையைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மூட்டு வலி
மூட்டு வலி

* ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்னை தோள் வலி (Frozen shoulder). தோள் பகுதியில் வலி ஏற்பட்டு அதை அசைக்கமுடியாமல் போய்விடும். கையைத் தூக்க சிரமமாக இருக்கும். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு இது இருக்கும். உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி மூலம் இதைச் சரிசெய்து கொள்வதுதான் சரியான பழக்கமாகும்.

இடுப்பு எலும்பு வலி, முழங்கால் வலி ஆகிய இரண்டுக்கும் பொதுவான விஷயம், உடல் பருமன். எந்தளவுக்கு உடல் எடை இருக்கிறதோ அதே அளவுக்கு இடுப்பு மற்றும் முழங்காலில் உள்ள எலும்பில் அழுத்தம் அதிகமாகி, வலி ஏற்படும். எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

உடற்பயிற்சி 20 சதவிகிதம்தான், உணவு 80 சதவிகிதம்!

உடல் பருமனாக இருப்பவர்கள் நேரம் கிடைக்கும்போது நீச்சல், சைக்கிளிங், நடைப்பயிற்சி செய்து வரலாம். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி 20 சதவிகிதம்தான் உதவும். மீதமுள்ள 80 சதவிகிதம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறைதான். பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் உடலில் உற்பத்தியாகும் ஆன்டிஆக்ஸிடன்ட் குறைந்துவிடும். எனவே கீரைகள், பழங்கள், நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.

உணவுகள்
உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடவேண்டும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகளைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். பிஸ்கட் சாப்பிட்டால் ஆரோக்கியம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு. பிஸ்கட்டில் அதிக கலோரிகள் உள்ளன. இதேபோல், எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். பழ ஜூஸ்களில் சர்க்கரையைத் தவிர்ப்பது சிறப்பு.

கால்சியம், வைட்டமின் டி உள்ள உணவு வகைகளை உண்ணவேண்டும். பால் சார்ந்த உணவுகள், கீரைகள், கேழ்வரகு, மீன், இறால், முட்டை ஆகியவற்றில் கால்சியம் நிறைந்துள்ளன. பல உணவுகளில் வைட்டமின் டி சத்து கிடையாது. எனவே, வைட்டமின் டி சத்தைச் சூரிய வெளிச்சத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகையால், காலை சூரிய வெளிச்சத்தில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது நல்லது. எலும்பு அடர்த்தியை அதிகரிக்க நடைப்பயிற்சி மிக அவசியம்.

எலும்பு பிரச்னைகள்
எலும்பு பிரச்னைகள்

எந்த வயதுக்காரரும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வலி மாத்திரைகளைக் கடைகளில் வாங்கி பயன்படுத்தக் கூடாது. `கொலாஜன்' (Collagen), `குளுக்கோசமைன்' (Glucosamine) ஆகியவை நிறைந்த ஊட்டச்சத்து மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையோடு மூட்டுவலிக்குப் பயன்படுத்தலாம். எலும்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நம் கையில்தான் 80 சதவிகிதம் தீர்வு இருக்கிறது. மருத்துவர்கள் கையில் 20 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, அன்றாட வாழ்வியல் முறைகளிலும், உணவுமுறையிலும் கவனமாக இருக்கவேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண் கண்ணன்.  

அடுத்த கட்டுரைக்கு