Published:Updated:

அலர்ட்... ஆண்களையும் பாதிக்கலாம் மார்பகப் புற்றுநோய்! விழிப்புணர்வுத் தகவல்கள் #MaleBreastCancer

ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் என்பதே இங்கு பலருக்கும் புதிய தகவல். மார்பகப் புற்று என்றாலே பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் இங்கிருக்கிறது. அதுகுறித்த அலர்ட் ரிப்போர்ட்!

Breast Cancer Awareness Month
Breast Cancer Awareness Month

பிரபல அமெரிக்கப் பாடகி பியான்ஸின் தந்தை மேத்யூ, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. விஷயம் தெரிந்தவுடன், பியான்ஸ் என்ன செய்தார் தெரியுமா? உடனடியாக மருத்துவமனை சென்று, தனக்கு மார்பகப் புற்று பரிசோதனை மேற்கொண்டார். உடன், அவரின் ஒரே சகோதரியான பாடகி சோலேஜ்ஜையும் அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்தினார் பியான்ஸ். ஆணுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய், மரபுக் காரணங்களால் அவருடைய சந்ததியைச் சேர்ந்த பெண்களைப் பாதிக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்கின்றனர் புற்றுநோயியல் மருத்துவர்கள். இந்த மருத்துவ உண்மையின் அடிப்படையில்தான், மார்பகப் புற்றைக் கண்டறியும் பரிசோதனையை, தான் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார் பியான்ஸ்.

Breast Cancer
Breast Cancer

இந்தச் செய்தியைப் படித்தவுடன், `என்ன, ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு வருமா?' என்றும், `ஆண்களுக்கு வரும் பாதிப்பு, மகள்களைப் பாதிக்குமா?' என்றும் கேட்பவர்கள் ஏராளம். புற்றுநோய் பாதிப்புகள் பாலின அடிப்படையில் இருப்பதில்லை. ஆனால், நம்மில் பலரும் அவற்றை அப்படியாக அணுகிவிடுகிறோம். குறிப்பாக, மார்பகப் புற்றுநோய் என்பது, பெண்களுக்கான பிரத்யேக நோயாகப் பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கும் இந்நோய் வரும் என்பது குறித்த விழிப்புணர்வு மிகக்குறைவாகவே இருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் 370 ஆண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 100 மார்பகப் புற்றுநோயாளிகளில் ஒருவர் ஆணாக இருக்கிறார் என்பது மருத்துவர்கள் குறிப்பிடும் விகிதம். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்கான மாதமான அக்டோபர் மாதத்தில், இந்த நோய் பாதிப்பை பெண் என்ற கோட்பாட்டிலிருந்து சற்று விலகி நின்று யோசிக்க வேண்டும். இந்த நோய் பாதிப்பு குறித்து மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள, புற்றுநோயியல் மருத்துவர் கலைச்செல்வியிடம் பேசினோம்.

Cancer Awarness
Cancer Awarness

"மார்பகப் புற்றுநோயால் ஆண்கள் பாதிக்கப்படுவதன் பின்னணியில், மரபு ரீதியான காரணங்கள்தான் முதன்மையானவையாக இருக்கின்றன. தவிர, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், சிறுவயதிலேயே அதீத கதிரியக்கத்துக்கு உட்படும் சூழல் போன்ற சில காரணிகளும் பட்டியலில் இருக்கின்றன.

உடலமைப்பின் அடிப்படையில்தான் இந்த நோயைப் பெண்களுக்கான நோயாகப் பலரும் நினைக்கின்றனர். பெண்களின் உடலமைப்பில், மார்புப் பகுதியில் கொழுப்புக்கான திசுக்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். அதனால்தான் அவர்களுக்கு அப்பகுதி பெரிதாகக் காணப்படும். புற்றுநோயின் தீவிரத்தை, எப்போதும் மார்பகத் திசுக்கள்தான் நிர்ணயிக்கும்; அளவு நிர்ணயிக்காது. மார்பகத் திசுக்களின் வளர்ச்சி ஆண், பெண் இருவருக்குமே இருக்கும் என்பதால், பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருவருக்கும் உண்டு என்பதுதான் உண்மை. ஆண்களுக்கு இந்தத் திசு வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும் என்பதால், அவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பும் குறைவு.

புற்றுநோய் ஏன், எப்படி..? தவிர்க்கும் வழிமுறைகள்!
விழிப்புணர்வு மாதம்
விழிப்புணர்வு மாதம்

அறிகுறிகளைப் பொறுத்தவரையில் மார்பில் கட்டி, ஒரு மார்பு மட்டும் பெரிதாவது, மார்பில் ஆறாத புண், நீர் வடிதல், மார்பு உள்வாங்கிப் போதல், மார்புக் காம்பில் வீக்கம், அக்குளில் கட்டி போன்றவற்றைச் சொல்லலாம். உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் விரைந்து குணப்படுத்திவிடலாம். மார்புச்சுவரின் அளவைப் பொறுத்துதான் பாதிப்பு பரவும் அபாயமும் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியும் தன்மையும் இருக்கும்.

அந்த வகையில், ஆண்களுக்கு மார்புச்சுவரின் அளவு சிறியதாக இருக்கும் என்பதால், அறிகுறிகள் முதல் நிலையிலேயே வெளிப்படையாகத் தெரிந்துவிடும். பெண்களைவிட ஆண்களுக்குப் பிரச்னை எளிதாக வெளித்தெரிந்துவிடும் என்பதால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் குணம் பெற்றுவிடலாம். அதேநேரம் பிரச்னை வேகமாகப் பரவிவிடும் அபாயமும் இதில் உண்டு. எனவே கவனிக்காமல்விட்டாலோ அலட்சியப்படுத்தினாலோ சிக்கல் வேகமாக அதிகரிக்கும்.

Vikatan
அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் 370 ஆண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்

சிகிச்சைகளில், ஆண், பெண் வேறுபாடு கிடையாது. அனைவருக்கும் கீமோதெரபி, ஹார்மோன் தெரபி போன்றவையே மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால், அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குத்தான் இந்தப் பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், ஹார்மோன் தெரபியில் வயது, பாலினம் மற்றும் உடலமைப்புக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்படும்.

மார்பகப்புற்றைப் பொறுத்தவரை பெண்களைப்போல ஆண்களுக்கு, `இத்தனை வருடங்களுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்' என்ற வரைமுறை கிடையாது.

புற்றுநோய் பாதிப்புள்ள குடும்பப் பின்னணி இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். குறிப்பாக, நெருங்கிய பெண் உறவுக்கு, அதாவது தாய் அல்லது சகோதரிகளுக்கு மார்பகப் புற்றுநோய் இருந்திருந்தால், பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இப்படியானவர்கள், மார்பகத்தில் தெரியவரும் எந்தவொரு வேறுபாட்டையும் உதாசீனப்படுத்தக் கூடாது. வயது அதிகரிக்க அதிகரிக்க, கூடுதல் கவனம் தேவை" என்கிறார் மருத்துவர் கலைச்செல்வி.

புற்றுநோய்
புற்றுநோய்

அமெரிக்காவைச் சேர்ந்த மேன்சன் என்பவர், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். "என் மனைவி வலியுறுத்தியிருக்காவிட்டால், நான் பரிசோதனைக்கே சென்றிருக்க மாட்டேன். இந்த விஷயத்தில், அவ்வளவு குறைவான விழிப்புணர்வே எனக்கு இருந்தது" என்பதுதான் அது. உதாசீனம் அதிகரிக்க அதிகரிக்க, ஆபத்து அதிகரிக்கிறது என்பதை ஆண்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். ஆணோ, பெண்ணோ உடல்நலம் சார்ந்த விஷயத்தில் எப்போதும் அலர்ட்டாக இருக்க வேண்டும்.