டெல்லியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் மோமோஸ் சாப்பிட்டு மூச்சடைத்து விழுந்திருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். மோமோஸை மெல்லாமல் அப்படியே விழுங்கியதால் அது மூச்சுக்குழாயில் சென்று அடைத்துக்கொண்டதாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உணவை மென்று சாப்பிட வேண்டியதன் அவசியம் குறித்து சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணியிடம் கேட்டோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS``சமைப்பதே உணவை இலகுவாக்கி செரிமானத்துக்கு உகந்ததாக்குவதற்காகத்தான். காய்கறிகளோ, கறி வகைகளோ முதலில் வேகவைத்தோ தீயில் வாட்டியோ சமைத்தால்தான் சுவையாக இருக்கும் என்பதைவிட செரிமான நோக்கமே பிரதானமானது. சமைத்த உணவை நன்றாக நொறுக்கு வதற்காகத்தான் இயற்கையே நமக்கு அதற்கேற்றாற்போன்ற பல் வரிசையைக் கொடுத்திருக்கிறது.

நன்றாக மென்று சாப்பிடும்போது உமிழ்நீர் கலந்து மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். எந்த ஓர் உணவாக இருந்தாலும் அதை வாயில் வைக்கும்போது மட்டும்தான் அதன் சுவை தெரிய வேண்டும். பின்னர், அதன் சுவையே மாறிப்போகுமளவுக்கு மென்ற பிறகே, அதை விழுங்க வேண்டும். பல்லே இல்லாத இரைப்பை கடினமான உணவுகளை அரைக்க வேண்டும் என நினைப்பது தவறு. நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு என்று நம் முன்னோர்கள் சொன்ன பழமொழி மிக மிக உண்மையானது என்பதை அனைவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிக்கன், மோமோஸ், சிறிய உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வழுவழுப்பான உணவுப்பொருள்களை அப்படியே விழுங்க முயன்றால் அது மூச்சுக்குழாயில் சென்று அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் விக்கல் சத்தத்தோடு மூச்சடைத்து சரிந்து விழுகிறார் என்றால் அது Cafe Coronary.

அவர்களை முதுகுப்பக்கமாகத் தாங்கி வயிற்றை இறுக்கமாக அழுத்த வேண்டும். இந்த முறைக்கு Heimlich Maneuver என்று பெயர். இச்சிகிச்சையால் உயிர் பிழைத்தவர்கள் அதிகம். பொதுமக்கள் அனைவரும் இந்த முறையைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் துர்சம்பவத்தில், அந்த நபர் குடிபோதையில் மோமோஸ் சாப்பிட்டு அது மூச்சுக்குழாயில் அடைத்து இறந்திருக்கிறார். இதை Cafe Coronary என்று சொல்வோம். தொண்டையில் உணவுக் குழாயும் சுவாசக்குழாயும் ஒட்டியபடியே இருக்கின்றன. சுவாசக்குழாய்க்குப் பின்புறத்தில் உணவுக்குழாய் இருக்கிறது. இவை இரண்டுக்கும் தனித்தனிப்பாதை கிடையாது என்பதால் உணவை மிகக் கவனமாக விழுங்க வேண்டும். ஆகவேதான், டிவி, செல்போன் பார்த்தபடியோ, புத்தகங்கள் படித்தபடியோ சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

உணவுக் குழாயில் காற்று செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, மூச்சுக்குழாயில் உணவோ, நீரோ போனால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இயற்கை இந்தக் கட்டமைப்பை வலுவாகத்தான் அமைத்திருக்கிறது. தண்ணீர் குடிக்கும்போதும், உணவை விழுங்கும்போதும் மூச்சுக்குழாய் தானாக மூடிக்கொள்ளும். அப்போது நம்மால் சுவாசிக்க முடியாது. நம் கவனம் சிதறும்போது இது மாறிப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம். சாப்பிடுவது என்பது அனிச்சை செயல் அல்ல. உணவு, தொண்டையைத் தாண்டி செல்லும்வரை கவனமாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு. அதன் பிறகான செரிமான நடவடிக்கைகள் தானாக நடந்துவிடும்.
சம்பந்தப்பட்டவர் குடிபோதையில் இருக்கும்போது மோமோஸ் விழுங்கி அது மூச்சுக்குழாயை அடைத்து அவர் இறந்திருக்கிறார். உணவை விழுங்குகையில் மூச்சுக்குழாய் மூடிக்கொள்கிற உடலின் செயல்பாடு போதையில் குறைவாகவே இருக்கும். உணவு பரிமாறுகிறவர்கள் அவர்களுக்கு இது போன்ற உணவுகளை சாப்பிடக் கொடுக்கக் கூடாது.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவு குறைந்து அரை மயக்கத்தில் இருக்கும்போது சர்க்கரை அளவைக் கூட்ட அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிச் செய்யும்போது அவர்களால் அதை முறையாக விழுங்க முடியாமல் மூச்சுக்குழாய்க்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிடவும் எப்படிச் சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியமானது" என்கிறார் பாசுமணி.