Published:Updated:

பசுவின் சாணம் கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா? சித்த மருத்துவர் கு.சிவராமன் பதில்

பசுவின் சாணம் கொரோனாவைக் குணப்படுத்துமா?
பசுவின் சாணம் கொரோனாவைக் குணப்படுத்துமா?

உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர்.

எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா
கொரோனா
Pixabay

கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை. சிகிச்சைக்கான பிரத்யேக மருந்துகளும் கண்டறியப்படவில்லை. அறிகுறிகளுக்கான சிகிச்சையே உலகம் முழுவதும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சீன அதிபர் ஜின்பிங், இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ சுமன் ஹரிபிரியா சட்டப்பேரவையிலேயே இதைப் பதிவு செய்துள்ளார். அங்கு நடைபெற்ற விவாதத்தில் பேசிய சுமன் ஹரிபிரியா, "பசுவின் சாணத்தை எரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் புகைக்குக் கொரோனா வைரஸை வெளியேற்றும் ஆற்றல் இருக்கிறது. அதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இது தீர்வாக அமையும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Cow dung
Cow dung
Pixabay

"மதச்சடங்குகளில் பசுவின் சாணமும் கோமியமும் பயன்படுத்தப்படுவதற்குப் பின்னால் அறிவியல் ரீதியான காரணங்களும் அடங்கியிருக்கின்றன. குஜராத்தில் செயல்படும் சில ஆயுர்வேத மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் பசுக்களும் தங்க வைக்கப்படுகின்றன. நோயாளிகளுக்குப் பசுவின் சாணம், கோமியத்தால் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்த் (Panchamrit) மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. இந்த மருந்தின் மூலம் புற்றுநோய் குணமாக்கப்படுகிறது என்று அறிந்தேன். அதனால்தான் முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் பசுவை கடவுளாக வழிபட்டுள்ளனர்" என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் பசுவின் சாணம் மற்றும் கோமியத்தின் பயன்கள் குறித்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியின் மூலமாக தான் இதை அறிந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் த்ரிவேந்திர சிங், "பசுக்கள் ஆக்சிஜனை சுவாசத்தின் மூலம் வெளியேற்றும். அதனால் பசுக்களுக்கு மசாஜ் செய்தால் சுவாசப் பிரச்னைகள் குணமாகும். காசநோய் பிரச்னை இருப்பவர்கள் பசுக்கள் இருக்கும் பகுதியில் வாழ்ந்தால் நோய் முற்றிலும் குணமாகிவிடும்" என்று அதிர வைத்தார்.

நோய்களை ஆன்மிகத்தின் வழியாக அணுகாமல், அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.
மருத்துவர் கு.சிவராமன்
`சந்தையில் ரகசிய வாழ்க்கை.. கொரோனா அச்சம்!’ - சீன அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த குடும்பம்

அவ்வப்போது பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் ஒவ்வொரு நோய்க்கும் மருந்தாகப் பரிந்துரைக்கின்றனர் பா.ஜ.க அரசியல் பிரமுகர்கள். உண்மையிலேயே இந்த இரண்டிலும் மருந்துவக் குணங்கள் இருக்கின்றனவா? கொரோனா வைரஸ் நோய்க்கு இவை தீர்வாக அமையுமா என்று பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் கேட்டோம்.

"கொரோனா வைரஸின் செயல்திறன் பற்றியே இன்னும் சரியான புரிந்துணர்வு ஏற்படவில்லை. அந்த வைரஸின் டி.என்.ஏ வையே சில தினங்களுக்கு முன்புதான் வெளியிட்டிருக்கின்றனர். டி.என்.ஏ குறித்த விவரங்கள் வெளியிடப்பட்ட பின், இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகள் உலகில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பதற்றமான சூழல் நிலவும்போது மக்களுக்குத் தவறான வழிகாட்டுதல்களை வழங்கக்கூடாது.

Dr.K.Sivaraman
Dr.K.Sivaraman

பசுவின் சாணத்தை எரிப்பதால் வெளிவரும் புகை, நோயைக் குணப்படுத்தும் என்பதெல்லாம் வெறும் அனுமானம்தான். இத்தகைய நோய்களை ஆன்மிகத்தின் வழியாக அணுகாமல், அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும்.

பசுவை ஒரு மதத்தின் குறியீடாக வைத்துக்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கம் போன்று ஏதாவது நிகழும்போது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்குதான் நிலவுகிறது. பசுவின் சாணம், கோமியத்தைப் பயன்படுத்தி விவசாயத்தில்தான் பஞ்சகவ்யம் போன்ற மருந்துகளைத் தயாரிக்கின்றனர். அவற்றில் காணப்படும் பாக்டீரியா மண்ணுக்கு நல்லது செய்வை என்பதால் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்கு இது ஓகே. ஆனால், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இவை மருந்தாகப் பயன்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை.

Cow
Cow
Pixabay

இந்த நேரத்தில் மாற்று மருத்துவ முறையைப் பின்பற்றும் மருத்துவ நிபுணர்கள், முதலில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய் பரவாமல் தடுக்கும் ஆலோசனைகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேறு வைரஸ்களின் தாக்கத்தைப் போக்குவதற்குப் பயன்பட்ட மூலிகைகளை வைத்து அடிப்படை ஆய்வுகளைச் செய்து பார்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் 1960-ம் ஆண்டு முதல் வேறு வேறு வகையாக இந்த உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. அதனால் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் இதற்கும் பயன்படுமா என்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அதைவிடுத்து ஆதாரங்கள் இல்லாத தகவல்களையெல்லாம் பரப்பக்கூடாது" என்றார்.

Corona
Corona
Pixabay
இந்தியாவில் 25 கொரோனா பாசிட்டிவ்... இத்தாலியப் பயணி காரணமா? மத்திய சுகாதாரத் துறை விளக்கம்!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் `சூத்ரா' என்ற பெயரில் பசுவின் சாணத்தில் ஆய்வு மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோருக்குச் சம்பளம் வழங்கவே நிதியில்லாத நிலையில், பசுவின் சாணத்தில் ஆய்வு மேற்கொள்ள பல கோடியை ஒதுக்கியுள்ளதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு