சுகர் அளவு அதிகமானால் உடலில் அரிப்பு வருமா? இதற்கு என்ன காரணம்? இதைக் குணப்படுத்த என்ன வழி?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
நீரிழிவு உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் உடன் சேர்ந்து உடலிலுள்ள நீர்ச்சத்தும் வெளியேறுவதால் சருமம் வறண்டுபோகத் தொடங்கும். சருமத்தின் ஈரப்பதம் குறைவதால் சருமத்தின் தன்மையிலும் மாற்றம் தெரியும். அதன் காரணமாக சரும வறட்சி ஏற்பட்டு சிலருக்கு உடல் முழுவதிலும் அரிப்பு வரலாம்.
சிலருக்கு `டயாபடிக் பாலிநியூரோபதி' (Diabetic Polyneuropathy) எனப்படும் நரம்பு நுனி பாதிப்பு ஏற்பட்டு தீவிரமாகலாம். அதனாலும் உள்ளங்கைகள் மற்றும் பாதங்களில் அரிப்பு வரலாம்.
இது தவிர ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்கடங்காமல் இருக்கும் சிலருக்கு கல்லீரல் பாதிப்போ, சிறுநீரக பாதிப்போ ஏற்பட்டு ஆரம்பநிலையில் இருந்தால் அதன் விளைவாகவும் உடல் முழுவதிலும் அரிப்பு ஏற்படலாம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எனவே, நீங்கள் முதல் வேலையாக உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதியுங்கள். HbA1c எனப்படும் மூன்று மாத ரத்தச் சர்க்கரை அளவையும் பரிசோதித்துப் பாருங்கள். நீரிழிவு மருத்துவரை அணுகி சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். சரும வறட்சியைப் போக்கும்படியான மாயிஸ்ச்சரைசிங் க்ரீம் மற்றும் சோப் உபயோகப்படுத்துங்கள். தினமும் இருவேளை குளியுங்கள்.

சர்க்கரை அளவைப் பரிசோதிப்பதுடன் கூடவே உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்திறன் எப்படியிருக்கிறது என்பதையும் பாருங்கள். அவற்றில் எல்லாம் எந்த பிரச்னையும் இல்லை என்பது உறுதியானால், ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் கட்டுக்குள் வைத்திருந்தாலே உங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிப்பு சரியாகிவிடும். மருத்துவ ஆலோசனையோடு உணவுமுறை மாற்றத்தையும் கேட்டுப் பின்பற்றுங்கள்.