இந்தியாவில் கோவிட் 19 கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில், அலோபதி மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவத்தையும் இணைத்துப் பரிந்துரைக்கும் பட்சத்தில் சிறந்த, விரைந்த பலன்களை எதிர்நோக்கலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை வைஷ்ணவா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சில கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, குணப்படுத்தப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டோம். சித்தாவைத் தொடர்ந்து, தற்போது ஹோமியோபதி மருத்துவர்களும் இந்தப் பணியில் அரசோடு இணைந்துள்ளனர்.

ஹோமியோபதி மருத்துவ முறையின்கீழ், நோயைத் தடுப்பதும் குணப்படுத்துவதும் மிகவும் எளிது என்கின்றனர் அம்மருத்துவர்கள். இதுகுறித்து, தமிழக அரசின் ஹோமியோபதி மருத்துவக் கழகத்தின் தலைவர் ஆர்.ஞானசம்பந்தத்திடம் கேட்டோம்.
``கடந்த ஒரு மாதத்துக்கு முன், `ஆர்செனிக்கம் ஆல்பம் என்ற மருந்தை, குறிப்பிட்ட வீரிய அளவில் மக்களுக்குத் தருவதன் மூலம் அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம்' என அறிவுறுத்தியது மத்திய ஆயுஷ் ஆலோசனை ஆய்வுக்கழகம். இந்த ஆர்செனிக்கம் ஆல்பம் மருந்தை, மக்களுக்குத் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கொடுத்தாலே போதும். அடுத்தடுத்த நாள்களில் அவர்கள் எதிர்ப்புத் திறனை பெற்றுவிடுவர். மூன்று நாள்கள் எடுத்துக்கொண்ட பிறகு ஒருமாதம் கழித்து மீண்டும் அந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். இதுதான் மத்திய அரசு பரிந்துரையின் சாராம்சம்.
இந்த மருந்தோடு சேர்த்து, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது - மாஸ்க் அணிவது போன்ற வாழ்வியல் மாறுபாடுகளைப் பின்பற்றவேண்டியிருக்கும்.

இதை அவர்கள் வெளியிட்ட அடுத்த சில தினங்களிலேயே இந்தியாவின் ஒருசில மாநிலங்கள் மும்முரமாக இதைத் தம் மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கின. குறிப்பாக மணிப்பூர் அரசு, மத்திய அரசு பரிந்துரைத்தவுடன் அடுத்த நாளிலேயே தனது பணியைத் தொடங்கியது. இப்போது, மணிப்பூர் மாநிலம் பாதுகாப்பான பச்சை மண்டலப் பிரிவில் இருக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு ஒப்பிடுகையில் நாம் (தமிழக அரசு), சற்று தாமதமாகத்தான் மருந்து விநியோகிக்கத் தொடங்கினோம். இருந்தாலும், இப்போதைக்குப் பல லட்ச மக்களைச் சென்றடைந்துள்ளோம் என்பது ஓரளவுக்கு ஆறுதல். இருப்பினும் இன்னும் வேகம் தேவை.
இந்த ஹோமியோபதி மருந்து எந்தளவுக்குப் பலன் தருமென்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது. கோவையில் 2000-க்கும் மேற்பட்ட முதல்நிலை காவல் பணியாளர்களுக்கு, இந்தத் தடுப்பு மருந்து கொடுத்ததைக் குறிப்பிட விரும்புகிறேன். இப்போதுவரை அந்தப் பணியாளர்கள் அனைவருமே கோவிட் -19 நெகடிவ் என்றுதான் இருக்கின்றனர்.
ஹோமியோபதி மருந்துகள்யாவும், பிற வகை மருந்துகளைவிட அதிக நோய் ஆற்றலைக் கொடுப்பவை என்பதால், மக்களும் அரசும் சந்தேகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு இதை முழுமையாக நம்பலாம்.ஹோமியோபதி மருத்துவர் ஞானசம்பந்தம்

ஹோமியோபதி மருத்துவ முறையென்பது, மற்ற மருந்துகளைப் போல ரத்தத்தில் கலந்து செயலாற்றுபவையல்ல. மாறாக இந்த மருந்துகளின் மூலக்கூறுகள் நாக்கின் நரம்புகளிலேயே செயல்படத் தொடங்கிவிடும். உடனடியாக அவை மூளையை அடைந்து செயல்படும் என்பதால், ரத்தத்தில் கலக்காது. மாறாக இம்யூன் செல்களைத் தூண்டிவிட்டு நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தடுப்பு மருந்துகளை வேகமாக விநியோகிக்கலாம் என அரசாணை வருவதற்கே, காலதாமதாகிவிட்டது. அந்த வகையில். இப்போது சில தினங்களுக்கு முன்னர்தான் ஹோமியோபதி மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளோம்.

இப்போதைக்கு அறிகுறிகள் தென்படும் கொரோனா நோயாளிகளுக்கு, அவரவரின் உடல்நலத்தைப் பொறுத்து அறிகுறிகளுக்கேற்ப சில மருந்துகளைத் தருகிறோம். தமிழகத்தில் அரசின் கீழ் 106 ஹோமியோபதி மருந்தகங்கள் இருக்கின்றன. அவற்றின் வழியாக இவற்றைச் சாத்தியப்படுத்திவருகிறது அரசு.
மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மூலம் மட்டும், அப்பகுதியில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேல் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஃப்ரன்ட் லைன் பணியாளர்களும் இதில் அடக்கம்!ஹோமியோபதி மருத்துவர் ஞானசம்பந்தம்
தடுப்பு நடவடிக்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பதைப் போலவே ஹோமியோபதி சிகிச்சையின் மூலம் வருங்காலத்தில் பல நோயாளிகளை குணப்படுத்துவதிலும் முன்னேற்றம் காண முடியும் என்ற நம்பிக்கை தெரிகிறது.
ஒருங்கிணைந்த மருத்துவம் தான் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் எனும்போது, ஹோமியோபதிக்கும் அரசு முக்கியத்துவம் தர வேண்டும்!ஹோமியோபதி மருத்துவர் ஞானசம்பந்தம்
தமிழகத்தின் ஒருசில மருத்துவமனைகளில்தான் ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் ஹோமியோபதி சிகிச்சைக்கான தளத்தை விரிவுபடுத்த வேண்டும். பிற மருத்துவ முறைகள் மேலிருக்கும் அதே நம்பிக்கை, ஹோமியோபதி மருத்துவத்தின் மீதும் வைக்கப்பட வேண்டும்!" என்றார் அவர்.
அரசு பரிசீலிக்குமா?