Published:Updated:

Covid Questions: இணைநோய்கள் உள்ள முதியோர்கள்... கொரோனா சூழலில் ஹெல்த் செக்கப் செய்யலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

என் மாமனாருக்கு வயது 85. இதய நோயாளி, நீரிழிவு, பிபியும் உண்டு. கொரோனாவுக்கு முன்புவரை ஆறு மாதங்களுக்கொரு முறை ஹெல்த் செக்கப் செய்துகொள்வார். கொரோனா வந்தபிறகு அவரை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. ஆனாலும் தனக்கு சுகர் அளவு, பிபி போன்றவை அதிகரித்திருக்குமோ எனப் பயப்படுகிறார். அடிக்கடி படபடப்பு ஏற்படுவதாகச் சொல்கிறார். லேபுக்கு அழைத்துச்சென்று டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார். இந்தச் சூழலில் அவரை வெளியே அழைத்துச்சென்று டெஸ்ட் செய்வது சரியானதா? அவருக்கு எப்படிப் புரியவைப்பது?

- பி.அமுதா, திருச்சி

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்
மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் முத்துச்செல்லக்குமார்.

நீரிழிவு, இதய பிரச்னைகள், தைராய்டு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட இணை நோய்கள் (கோ மார்பிடிட்டீஸ்) உள்ளவர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஹெல்த் செக்கப் செய்ய வேண்டியது அவசியம்தான். ஆனால், கொரோனா தொற்று பெருகிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் அது சரியானதல்ல. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள். மருத்துவர்களாலும் அவர்களைத் தவிர்த்து சாதாரண நோயாளிகளுக்கு நேரத்தைச் செலவிடுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. எனவே, நிலைமையைப் புரிந்துகொண்டு, இணை நோய்கள் உள்ளவர்கள், வீட்டிலேயே குளுக்கோ மீட்டர், பிபி மானிட்டர் போன்றவற்றை வைத்து அவ்வப்போது உடல்நலத்தைக் கண்காணித்துக்கொள்ளலாம். தவிர்க்க முடியாத நிலையில், பரிசோதனைக்கூடங்களுக்குத் தகவல் சொன்னால் அவர்கள் வீட்டுக்கே வந்து பாதுகாப்பான முறையில் டெஸ்ட் செய்துவிட்டு, ரத்த, சிறுநீர் மாதிரிகளைப் பெற்றுச் செல்கிறார்கள். அந்த ரிசல்ட்டைப் பொறுத்து மருத்துவரிடம் போன் அல்லது ஆன்லைனில் கன்சல்ட்டேஷன் பெறலாம்.

இதய நோயாளிகள் இந்த விஷயத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு வீட்டிலேயே இசிஜி எடுக்க முடியாது. பைபாஸ் உள்ளிட்ட அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள், ஸ்டென்ட் வைத்திருப்பவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மூச்சுவாங்கினால் கவனம் வேண்டும். இதயம் செயலிழக்கும்போது மட்டுமல்ல, ஆஸ்துமா, கோவிட் உள்ளிட்டவற்றால்கூட மூச்சுவாங்கலாம். அதை அலட்சியப்படுத்த வேண்டாம். இத்தகையவர்களுக்கு மருத்துவமனை விசிட் தவிர்க்க முடியாது. தேவைப்பட்டால் ஆஞ்சியோ செய்யப்பட வேண்டும்.

இதய நோயாளிகள்
இதய நோயாளிகள்

தவிர்க்க முடியாமல் மருத்துவமனைக்கோ, லேபுக்கோ செல்லும்போது நோயாளியும் உடன் செல்வோரும் அதிகபட்ச பாதுகாப்போடு செல்ல வேண்டும். டபுள் மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளி போன்றவை அவசியம். முடிந்தால் கையோடு யூஸ் அண்ட் த்ரோ பெட் ஸ்பிரெட் எடுத்துச் சென்று, அதன் மீது படுத்து டெஸ்ட் செய்துகொண்டு உடனே அதை அப்புறப்படுத்திவிடலாம். கோவிட் டெஸ்ட்டும் எடுத்துக்கொண்டு செல்வது பாதுகாப்பானது. மாமனாரின் உடல்நிலையை ஒரேயடியாக அலட்சியமும் செய்ய வேண்டாம். அதே நேரம் தேவையற்ற பயத்தின் காரணமாக இந்தச் சூழலில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களின் சுமையையும் அதிகரிக்க வேண்டாம். எல்லாவற்றையும்விட முக்கியமாக எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவற வேண்டாம். அது உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நீங்கள் தரும் பாதுகாப்பு.

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு