Published:Updated:

குழந்தைகளிடம் `white lies’ சொல்லும் பெற்றோரா நீங்கள்?! தெரிந்து கொள்ளுங்கள்! #GoodParenting

குழந்தைகளிடம் சொல்லப்படும் சின்னச் சின்னப் பொய்கள்கூட, வருங்காலத்தில் அவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

`ஒழுங்கா சாப்பிடலைன்னா பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்' என்று சொல்வதிலிருந்துதான் தொடங்குகிறது குழந்தைக்கும் தாய்க்குமான முதல் பொய். ஆனால், குழந்தை வளர வளர, பேரன்டிங்கில் பெற்றோர் சொல்லும் பொய்கள் ஒரு கட்டத்தில் குழந்தைகளையும் தொற்றிக்கொள்ளும் என எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொய்
பொய்

சிங்கப்பூரைச் சேர்ந்த Nanyang Technological University என்ற பல்கலைக்கழகம், 20 வயதையொட்டிய இளைஞர்கள் மத்தியில் ஆய்வு நடத்தியது. 379 இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், அதிகம் பொய் சொல்லும் நபர்களிடம், `உங்களுடைய சிறு வயதில், பெற்றோர் உங்களிடம் அதிகம் பொய் கூறியிருந்தனரா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது. சொல்லிவைத்ததுபோல அவர்கள் அனைவருமே, `ஆம்' என்று கூறியுள்ளனர். அதிக பொய் சொன்ன பெற்றோரின் பிள்ளைகள், வருங்காலத்தில் அதிக பொய் சொல்கின்றனர் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. அந்த இளைஞர்களின் பெற்றோர்களிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டபோது, அவர்கள் சொன்ன பதிலின் சாரம் இதுதான் -

`குழந்தையை ஏமாற்ற வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல. சில நல்ல விஷயங்களை அவர்கள் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஒரு சில பொய்களைச் சொல்வோம். அவ்வளவே!'

குழந்தைகளிடம் சொல்லப்படும் சின்னச் சின்னப் பொய்கள்கூட, வருங்காலத்தில் அவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, பெற்றோர்களுக்கு அதிர்ச்சியான செய்தி.

`அடம்பிடிக்கும் குழந்தையை பொய் சொல்லாமல், பயமுறுத்தாமல் எப்படித்தான் வழிக்குக் கொண்டு வருவது?' - என்ற பெற்றோரின் கேள்வியை, குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் முன்வைத்தோம். விரிவான விளக்கத்தை அளித்தார் அவர்.

குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

``முக்கியமான ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலை, நேரடியான பதிலை குழந்தைக்குத் தர வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. ஆகவே, பெற்றோர் பதற்றப்பட வேண்டாம். குழந்தைகளிடம் சொல்லப்படும் சில பொய்கள், நிச்சயம் சரியானதுதான்.

குழந்தையிடம் பொய் ஏன் கூடாது?

சமூக மாற்றத்தின் காரணமாக, குழந்தைகள் எப்படியும் உங்கள் பதிலின் உண்மைத்தன்மையை நண்பர்கள் வழியாகவோ வேறு சொந்தங்கள் வழியாகவோ அவர்களாகவே உணர்ந்துவிடுவார்கள். அது பொய் என்று அறியவரும்போது உங்கள் மீதான நம்பிக்கை அவர்களுக்குக் குறைய தொடங்கும். அதுவே பின்னாள்களில் உங்களுக்கும் அவர்களுக்குமான உறவில் விரிசல் ஏற்படக் காரணமாக அமையலாம்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

லிமிடட் மாற்று பதில்கள் ஓகே!

`குழந்தையின் குறிப்பிட்ட இந்தக் கேள்விக்கான பதில் அல்லது இந்தச் சந்தேகத்துக்கான விளக்கம், இப்போதே அவர்களுக்குத் தெரிய வேண்டுமா?' என்பதை, ஒவ்வொரு முறையும் பெற்றோராகிய நீங்கள் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும். தெரிய வேண்டாம் என நினைத்தால், தயங்காமல் மாற்று பதில்களை அவர்களுக்குத் தரலாம்.

இப்படியாகக் குழந்தைகளுக்கு மாற்று பதில்களைத் தரும் பெற்றோர், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். என்னவெனில், `உன்னுடைய கேள்விக்கு, இது சரியான பதிலில்லை' என்பதை அடுத்தடுத்த நாள்களில் நீங்களாகவே குழந்தையிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். விஷயத்தைச் சொல்லிய பின், `குறிப்பிட்ட வயது வரும்போது, அதை உனக்கு முழுமையாகச் சொல்கிறேன். இப்போதைக்கு நான் சொல்லிய தகவல்கள் மட்டும் உனக்குப் போதும்' எனச் சொல்ல வேண்டும். உடன், `ஏன் இந்த வயதில் உனக்கு இது தெரிய வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றால்...' என, அதைப் பற்றியும் அவர்களிடம் உரைத்தல் நலம்.

இப்படியான மாற்று பதில்களை, `வெள்ளைப் பொய்கள் (White Lies)' என்று குறிப்பிடலாம்.

பதில்கள் பொய்யாக இருக்கக்கூடாது. ஆனால், அவை மாற்று பதில்களாக இருக்க வேண்டும். அதாவது, ஓரளவு உண்மையும் அதில் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர்

எப்போதெல்லாம் மாற்று பதில்களை வழங்கலாம்?

குழந்தையின் எல்லாக் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மாற்று பதில்களைப் பெற்றோர் தரக்கூடாது. ஏனெனில், எந்தவொரு விஷயமும் அளவுக்கு மீறிப் போகும்போது குழந்தை அதையே சரியென்றும், முழுமை என்றும் நம்பத் தொடங்கிவிடும். மேலும், தன்னுடைய அன்றாடச் செயல்கள் அனைத்திலும் அதை எதிரொலிக்கவும் தொடங்கும். ஆகவே...

* வயதுக்கு மீறிய விஷயங்களைக் குழந்தைகள் கேட்பது

* பன்னிரண்டு வயதுக்கு முன்பு ஆண் குழந்தைகள் மாதவிடாய் குறித்து கேள்வி எழுப்புவது

* பதினான்கு வயதுக்கு முன்பு குழந்தை பிறப்பு குறித்த விளக்கங்களைப் பிள்ளைகள் கேட்பது

* பெற்றோர் இருவருக்கு மத்தியில் நிகழும் சண்டையின் பின்னணி குறித்து முழுமையாகச் சொல்லும்படிக் கேட்பது

* உணவுகளைப் பற்றிய தவறான புரிந்துணர்வோடு செயல்பட்டுக்கொண்டிருப்பது

எல்லாப் பெற்றோருமே, படிப்பின் முக்கியத்துவத்தைக் குழந்தைக்கு நிச்சயம் சொல்லித்தர வேண்டும்.

* உடல்ரீதியான மாற்றங்களைத் தவறான கோணத்தில் அணுகுவது

* உறவுகள், ஆண் - பெண் உடலமைப்பு, எண்ணங்கள் குறித்து தவறான புரிந்துணர்வோடு இருந்துகொண்டு அதை நோக்கி இயங்குவது

* வீட்டின் பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் தவறான புரிந்துணர்வோடு இருப்பது. குறிப்பாக அளவுக்கதிகமான தொகையை, தேவையில்லாத காரியங்களில் செலவுசெய்யச் சொல்லித் தொந்தரவு செய்வது

- இதுபோன்ற சூழல்களில் பெற்றோர் மாற்று பதில்களையும் மாற்று விளக்கங்களையும் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலை, நேரடியான பதிலை குழந்தைக்குத் தர வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது.
குழந்தைகளுக்கான மனநல மருத்துவர்

இதுவே, வீட்டின் பொருளாதாரம் தொடர்பான கேள்விகளை குழந்தைகள் கேட்டாலோ, பெற்றோரின் வருமானம் தொடர்பான கேள்விகளைக் கேட்டாலோ தயங்காமல் உண்மையைச் சொல்லலாம். அதிகம் பொருள் ஈட்டும் பெற்றோர், செலவு விஷயத்தில் தங்களைக் கட்டுக்கோப்பானவர்களாகக் காண்பித்துக் கொள்வது சிறப்பு. ஏனெனில் அதுதான் பொருளாதாரம் தொடர்பான ஒழுக்கத்தைக் குழந்தைக்கு மனதளவில் கொடுக்கும். குறைவாகச் சம்பாதிக்கும் பெற்றோர், தங்களின் நிலையைக் குழந்தைக்கு அப்படியே புரியவைப்பது நல்லது.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு

எல்லாப் பெற்றோருமே, படிப்பின் முக்கியத்துவத்தைக் குழந்தைக்கு நிச்சயம் சொல்லித்தர வேண்டும். படிப்பு விஷயத்தில், பொய் சொல்லக்கூடாது. ஒழுக்கம் ஏன் முக்கியம், நல்லொழுக்கம் என்பது எது என்பதையும் குழந்தைகளுக்குப் பெற்றோர் முழுமையாக எடுத்துரைக்க வேண்டும்" என்கிறார் பூங்கொடி.

``பெண் குழந்தை விரைவில் பூப்பெய்த ஐஸ்க்ரீமும் ஒரு காரணம்!’’ - பெற்றோர்களுக்கு அலர்ட்