Published:Updated:

மதுரை, வேலூர், சேலம், கோவை... கொரோனா தீவிரம்... எதிர்கொள்ளத் தயாரா?

Corona Test
Corona Test

வேலூர், மதுரை, சேலம், கோவை என தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் கொரோனா களநிலவரம் என்ன என்ற கேள்வியுடன் தகவல்கள் சேகரித்தோம்.

இதுவரை சென்னையில் அதிகமாகக் குவிக்கப்பட்டிருந்த கோவிட்-19 கவனம், இப்போது பிற மாவட்டங்களுக்கும் திருப்பப்பட்டு வருகிறது. காரணம், தமிழகம் முழுக்கப் பரவலாகப் பெருகிவருகிறது கொரோனா நோய்த்தொற்று. சென்னையைத் தொடர்ந்து மதுரை, தேனி என ஊரடங்குகள் அறிவிக்கப்படுவதன் காரணமும் இதுவே.

corona virus
corona virus

இந்த நிலையில், வேலூர், மதுரை, சேலம், கோவை என தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் கோவிட்-19 களநிலவரம் என்ன என்ற கேள்வியுடன் தகவல்கள் சேகரித்தோம்.

மதுரையில் ஆயிரத்தை நெருங்கும் எண்ணிக்கை!

மதுரை
மதுரை

மதுரையில் பரிசோதனைகளை அதிகப்படுத்திய பின்புதான், இங்கு கோவிட்-19 வைரஸ் பரவல் எந்தளவுக்கு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. சென்னையோடு ஒப்பிடும்போது மதுரையில் பாதிப்பு குறைவாகத் தெரிந்தாலும், மக்கள்தொகை அடிப்படையில் பார்க்கும்போது சென்னைக்கு நிகராக இங்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்கள். அதன் எதிரொலியாக 24-ம் தேதி முதல் முழு ஊரடங்கு மதுரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப நாள்களில் மதுரையில் கொரோனா அதிகமாகப் பரவி வருவது பற்றியும், சோதனைகளைத் தற்போது அதிகப்படுத்தியதால்தான் இத்தனை பாதிப்புகள் தெரிய வருகிறதா என்றும், இதைத் தடுக்க மாவட்ட மருத்துவத் துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணியிடம் கேட்டோம்.

சென்னைக்கு மாற்றலான கரூர் டீன்! - ஓரம்கட்டப்படும் பீலா ராஜேஷ் ஆதரவாளர்கள்

``ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யவில்லை, இப்போதுதான் அதிகம் செய்யப்படுகின்றன என்று சொல்லப்படுவது சரியல்ல. தொடர்ந்து பரிசோதனைகள் செய்துகொண்டுதான் இருக்கிறோம். இப்போது சென்னை உட்பட வெளியூரிலிருந்து வருபவர்கள் அதிகரித்துள்ளதால், அவர்களிடம் பரிசோதனைகள் அதிகம் செய்கிறோம். அதனால் பாதிப்பு அதிகம் வந்து கொண்டிருக்கிறது. சென்னை அளவுக்கு மதுரையில் கொரோனா பரவவில்லை.

மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணி
மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் சங்குமணி

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம். கலெக்டர் உத்தரவுப்படி படுக்கைகளை அதிகப்படுத்தியுள்ளோம். இப்போதுகூட கூடுதல் படுக்கை அமைக்க அமெரிக்கன் கல்லூரியைத் தயார்படுத்தி வருகிறோம். அது மட்டுமல்லாமல் வீடு வீடாகச் சென்று உடல் நலமில்லாதவர்களின் கணக்கை எடுத்து வருகிறோம். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுத்து வருகிறோம். மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இடைவிடாமல் செய்து வருகிறோம்" என்றார்.

ஆரம்பத்தில் மதுரையில் ஒற்றை இலக்கத்திலும் இரட்டை இலக்கத்திலும் கொரோனா பாதிப்பு இருந்துவந்த நிலையில் கடந்த சில நாள்களாக மூன்று இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது மதுரை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

corona
corona
"பாசிட்டிவ் ரிசல்ட்களும் நெகட்டிவ் என்றே காட்டுகின்றன!"
வைராலஜி நிபுணர் ஜேக்கப் ஜான்

வேலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் 10 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அச்சம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ நெருங்கியிருக்கும் நிலையில், மாவட்டத்தில் ஊரடங்கைக் கடுமையாக்க அவர் உத்தரவிட்டிருக்கிறார். காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், துணிக்கடைகள், ஹார்டுவேர், ஷோரூம்கள், நகைக்கடைகள், வாரச் சந்தைகள் ஆகியவை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

`கொரோனா 100% குணம்; பதஞ்சலி மருந்து கண்டுபிடிப்பு?’ -தடைவிதித்த மத்திய அரசு

இந்தியாவின் முன்னணி வைராலஜி நிபுணரும் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான ஜேக்கப் ஜானிடம் பேசினோம்.

``கொரோனா பாதித்த ஒருவரிடமிருந்து குறைந்தது 5 பேருக்காவது தொற்று பரவுகிறது. பொதுமக்கள் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள். இன்னொரு பக்கம், கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்து இதுவரை எந்த மருத்துவரும் தங்கள் கல்லூரிப் பாடங்களில் படிக்கவில்லை. இப்போதுதான் தோன்றியிருக்கும் அந்த வைரஸ் குறித்தும், அது ஏற்படுத்தும் நோய் பாதிப்புகள் குறித்தும் புதிதாக அறிந்துகொள்ளும் மருத்துவர்கள், அதற்கான சிகிச்சையையும் களத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள்.

ஜேக்கப் ஜான்
ஜேக்கப் ஜான்

மக்களுக்குத் தொண்டையில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கும்போது, 60% தொற்றுக்கு ஆளானவர்களுக்கும்கூட நெகட்டிவ் என்றே ரிசல்ட் வருகிறது. மூக்கில் எடுக்கப்படும் டெஸ்ட்டில் 75% தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் நெகட்டிவ் என்றே காட்டுகிறது. எனவே, இந்த டெஸ்ட்டை அடிப்படையாக வைத்து தொற்று இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. ஆக மாவட்ட மக்கள் அனைவரும் கட்டாயமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாஸ்க் அணிய வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டினால் வரும் நாள்களில் தொற்றுப் பரவல் அதிகமாகி, இறப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும்’’ என்று எச்சரித்தார்.

``சேலத்தில் ஊரடங்கு அறிவிக்க வேண்டும்!"

மருத்துவமனை லிஸ்ட்
மருத்துவமனை லிஸ்ட்

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூபதி, ``கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுகானிலிருந்து பரவ ஆரம்பித்து, சென்னையில் தீவிரமாகி, இப்போது எங்கள் பக்கத்துத் தெருவுக்கு வந்துவிட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.

சென்னையில் ஓரளவுக்குப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனால், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் சொற்ப எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் செய்கிறார்கள். ஒருவருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமே பரிசோதனை செய்கிறார்கள். அவருடைய நண்பர்களுக்கோ, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ பரிசோதனை செய்வதில்லை.

ஸ்வாப் டெஸ்ட் சரியாகச் செய்வது எப்படி, எது தவறு?#VikatanExplainer

தமிழக அரசு மாவட்டந்தோறும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பட்டியலில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கெடுபிடி காட்டுகின்றன. வி.ஐ.பி-களின் பரிந்துரை இருந்தால் மட்டுமே அட்மிட் செய்கிறார்கள்.

சமூக ஆர்வலர் பூபதி
சமூக ஆர்வலர் பூபதி

சேலத்தில் தற்போதுள்ள நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்க, மாவட்ட மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதி போதுமானதாக உள்ளது. சென்னையைப்போல எண்ணிக்கை அதிகரித்தால், மருத்துவமனைகளால் சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. அதனால் சேலத்திலும், மற்ற மாவட்டங்களிலும் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பதோடு, சென்னையிலிருந்து மக்கள் பிற மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது'' என்றார்.

கோவையில் 2,713 படுக்கைகள் தயார்!

கோவை
கோவை

கோவையில் கடந்த சில வாரங்களாக சீரான வேகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, கடந்த ஏழு நாள்களில் 111 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை போன்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பாதிப்பு சற்று குறைவுதான். ஆனால், கடந்த மாதம் பாதிப்பு வெகுவாகக் குறைந்திருந்த கோவையில், தற்போது பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: வறுமையை நோக்கி 120 மில்லியன் குழந்தைகள்; எதிர்காலம்? -யுனிசெஃப்

சென்னை தொடர்பு மூலம் கொரோனா பாதித்த ஓர் இளைஞர் மூலம் மட்டுமே கிட்டத்தட்ட 35 பேருக்குக் கொரோனோ உறுதியாகியுள்ளது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கோவையில்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மட்டும் கிட்டத்தட்ட 114 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை
கோவை

கோவையில் 8 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, பெரும்பாலும் பி.எஸ்.ஜி மருத்துவமனையில்தான் அதிகம் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 30 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவனைகளில் கிட்டத்தட்ட 1,500-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொரோனாவுக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன. கோவையில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,713 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் நிலைமை மோசமாகலாம்.

அடுத்த கட்டுரைக்கு