Published:Updated:

தூங்கும் நேரத்தில் புற்றுநோய் வேகமாகப் பரவுமா... ஆய்வு சொல்வது என்ன?

புற்றுநோய் -சித்தரிப்பு படம்

பெண்கள் மற்றும் எலிகளின் ரத்த ஓட்டத்தில், உறங்கும்போது அதிக புற்றுநோய் செல்கள் இருந்துள்ளன. புற்றுநோய் செல்கள், நோயாளி ஓய்வெடுக்கும்போது சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு, ரத்த ஓட்டத்தில் அவை கலந்து வேறு உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தூங்கும் நேரத்தில் புற்றுநோய் வேகமாகப் பரவுமா... ஆய்வு சொல்வது என்ன?

பெண்கள் மற்றும் எலிகளின் ரத்த ஓட்டத்தில், உறங்கும்போது அதிக புற்றுநோய் செல்கள் இருந்துள்ளன. புற்றுநோய் செல்கள், நோயாளி ஓய்வெடுக்கும்போது சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு, ரத்த ஓட்டத்தில் அவை கலந்து வேறு உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Published:Updated:
புற்றுநோய் -சித்தரிப்பு படம்

புற்றுநோய் இன்றுவரை மனித குலத்துக்கு அச்சத்தைத் தரும் கொடிய நோய்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. சில வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தாலும் இன்னும் அவை குறித்து பல சந்தேகங்களும் புதிர்களும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளன.

cancer
cancer

இந்நிலையில், புற்றுநோய் செல்கள் குறித்த புதிய ஆய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த ஆய்வின்படி புற்றுநோய் செல்கள் ஒரு நோயாளி ஓய்வெடுக்கும் சமயத்தில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு, அவை ரத்த ஓட்டத்தில் கலந்து வேறு உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய்க் கட்டியில் இருந்து பிரியும் செல்கள், ரத்த ஓட்டத்தின் மூலம் மற்றொரு பகுதிக்கும் பரவி, அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது மெடாஸ்டாட்டிக் புற்றுநோய் (Metastatic cancer) ஆகும்.

இதற்கு, Stage IV புற்றுநோய் என மற்றொரு பெயரும் உண்டு. உடலின் வேறு பகுதியில் தோன்றி இருந்தாலும் இந்த புற்றுநோய் செல்களின் தன்மை முதலில் எந்த உறுப்பில் ஏற்பட்டதோ அங்கிருக்கும் புற்றுநோய் செல்களின் தன்மையை ஒத்ததாகவே இருக்கும்.

உறக்கம்
உறக்கம்

உதாரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு அங்கு இருக்கும் செல்கள் உடலின் வேறு ஏதாவது உறுப்புக்கு ரத்த ஓட்டம் மூலம் பரவி புற்றுநோயை ஏற்படுத்தினாலும், அது மார்பகப் புற்றுநோய் எனக் கருதப்படுவதோடு அதற்கான சிகிச்சை முறைகளே கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டம் மூலம் பிற உறுப்புகளுக்கு நகரும் வழிமுறைக்கு பெயர் 'மெடாஸ்டாஸிஸ்' (Metastasis).

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Federal Institute of Technology எனும் நிறுவனமும், பேசல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 30 பெண் நோயாளிகளிடம் இரவு, பகல் என இரு வேளைகளில் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அதில் இரவு நேரங்களில் அதாவது உறங்கும் நேரத்தில் ரத்த ஓட்டத்தில் புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

டாக்டர் கிருஷ்ணகுமார்
டாக்டர் கிருஷ்ணகுமார்

இதே ஆய்வை, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாதிரி எலிகளின் உடம்பிலும் செய்து பார்த்துள்ளனர். எலிகள் பகல் நேரத்தில் ஓய்வெடுக்கும் தன்மை உடையவை. அவற்றின் ரத்தத்தில் பகல் நேரத்தில் அதிக புற்றுநோய் செல்கள் இருந்துள்ளன. ஆனால் தூங்கினாலே புற்றுநோய் அதிகரிக்கும் என அச்சப்படத் தேவையில்லை எனவும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தற்போது மேற்கொண்ட ஆய்வின்படி, இரவு நேரங்களில் ரத்த ஓட்டத்தில் அதிக புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விரிவான ஆராய்ச்சி தேவை. தூக்கம் மற்றும் விழிப்பு நிலையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் பங்கு புற்றுநோய் செல்களின் நகர்வுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.

ஆராய்ச்சி
ஆராய்ச்சி

இந்த ஆய்வு குறித்து, சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் மருத்துவர் கிருஷ்ணகுமாரிடம் கேட்டோம்,"புற்றுநோய் செல்கள் புற்றுநோய் கட்டியில் இருந்து உடைந்து வேறு பகுதிக்கு நகரும் செயல்பாடு, தூங்கும் நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதே இந்த ஆய்வு கூறும் தகவலாகும். புற்றுநோய் கட்டியில் இருந்து நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் செல்களின் எண்ணிக்கை தொடர்பாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் எலிகளிடமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் எலிகளின் ரத்த ஓட்டத்திலும் உறங்கும் நேரத்தில் அதிக புற்றுநோய் செல்கள் இருந்துள்ளன. உறங்கும் நிலையில் பெண்களின் உடலில் இருந்த செல்களில் 80 சதவிகிதமும், எலிகளின் உடலில் 90 சதவிகிதமும் ரத்த ஓட்டத்தில் பரவும் புற்றுநோய் செல்கள் உற்பத்தியாகி உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுபோல், தூங்கினாலே புற்றுநோய் செல்கள் அதிகரிக்கும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இது முதற்கட்ட ஆய்வுதான்.

ரத்த ஓட்டம்
ரத்த ஓட்டம்

இந்த விஷயம் குறித்து இன்னும் பல ஆய்வுகள் தேவை. அப்படி ஆய்வு செய்யும்போதுதான், இதே முறைதான் வேறு புற்றுநோய் வகைகளுக்கும் உள்ளதா என்பதை அறிவதற்கும், இந்த புதிய கண்டுபிடிப்பால் வருங்காலப் புற்றுநோய் சிகிச்சை முறைகளில் எதுவும் முன்னேற்றம் செய்ய முடியுமா எனவும் கண்டறிய முடியும்" என்கிறார்.