Published:Updated:

வைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்! #DoubtOfCommonMan

உடலில் சூரிய ஒளி படவேண்டும்... ஏன்? - மருத்துவர் தரும் விளக்கம்!

Vitamin D
Vitamin D

வைட்டமின் குறைபாடுகளில் மிகமுக்கியமானது `டி' வகை குறைபாடு. இந்தியாவில் வைட்டமின்-டி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். `இந்தியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பிராக்டிஸ்' (Indian journal of clinical practice) இதழில் 2014-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் தோராயமாக 70 சதவிகித இந்தியர்களுக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்தது.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் நிஸார் என்ற வாசகர் இதுதொடர்பாக ஒரு கேள்வியெழுப்பியிருக்கிறார். ``வைட்டமின்- டி குறைபாடு ஏன் ஏற்படுகிறது... இந்தக் குறைபாட்டைப் போக்குவது எப்படி" என்பதுதான் அவரது கேள்வி.

``ஏறத்தாழ 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின்-டி தான் கட்டுப்படுத்துகிறது. உடல் வளர்ச்சியிலும் இந்த வைட்டமின் மிக முக்கியப் பங்காற்றுகிறது. சராசரியாக உடலில் வைட்டமின்-டி 30 நானோகிராம் அளவுக்கு இருக்க வேண்டும். 30 நானோகிராமுக்குக் குறைவாக இருந்தால், போதிய அளவு வைட்டமின்-டி இல்லை என்று பொருள். 20 முதல் 29 நானோகிராம் வரை இருப்பவர்களுக்கு சிகிச்சையோ, மருந்துகளோ தேவையில்லை. வாழ்வியல் மாற்றங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படும். 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே `வைட்டமின்-டி குறைபாடு' என்கிறோம். இத்தகைய சூழலில்தான் சிகிச்சை தேவைப்படும்.

உடல்வலி, மூட்டுவலி, அதிக உடல்சோர்வு, மிகவும் பலவீனமாகக் காணப்படுவது போன்றவை வைட்டமின்-டி குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள். உடலில் வைட்டமின்-டி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உடலில் சூரிய ஒளிபடாமலே இருப்பதுதான் மிக முக்கியமான காரணம்.

Vitamin D
Vitamin D

இவைதவிர, உடல்பருமன், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, சில மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

வைட்டமின்-டி குறைபாட்டைச் சரிசெய்யாவிட்டால் சர்க்கரைநோய், எலும்பு அழற்சி, எலும்புப் புரை, தசை வலுவிழப்பு, தசைவலி, எலும்பு சார்ந்த நோய்கள், மூச்சுக்குழாய் மற்றும் சுவாசம் தொடர்பான தொற்றுப்பிரச்னைகள், நுரையீரல் பிரச்னைகள், முடக்குவாதம், எலும்பு முறிவு போன்றவை ஏற்படலாம்.

மருத்துவர் அர்ஷத் அகில்
மருத்துவர் அர்ஷத் அகில்
விகடன்

சிகிச்சை!

* வைட்டமின்-டி சத்தை சூரிய ஒளியின்மூலம் பெறமுடியும். காலை 10.30 முதல் 12 மணி வரையிலான வெயிலில் வைட்டமின்-டி அதிகமாகக் கிடைக்கும். அதிகக் குறைபாடு இருப்பவர்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் முழுமையாகப்படும்படி நிற்க வேண்டும்.

* சன்ஸ்கிரீன் லோஷன், க்ரீம் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் தேவையான அளவு சூரிய ஒளியை உடல் கிரகித்துக்கொள்ளாது. எனவே, வைட்டமின்-டி குறைபாடு இருப்பவர்கள், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்கள், அதைச் சரிசெய்ய காலை 10.30 முதல் 12 மணி வரையிலான ஏதாவதொரு நேரத்தில் 20 நிமிடங்கள் வெயிலில் நிற்க வேண்டும்
மருத்துவர் அர்ஷத் அகில்

* பால், சிக்கன், மீன், முட்டை போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உணவு மூலமாக மிகக்குறைவான அளவே வைட்டமின்-டி கிடைக்கும். அதனால் தவிர்க்காமல் தினசரி உணவில் இவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்க்க வேண்டும்.

* சிலர் பால்கனியில் நின்றுகொண்டு வெயிலில் காய்வார்கள். இது, போதுமான சத்தை உடலுக்குத் தராது. முடிந்தவரை திறந்தவெளியில் நிற்பது நல்லது.

Vitamin D
Vitamin D

* ஏ.சி வசதியுள்ள அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியவில்லை என்றால், வைட்டமின்-டி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ளவும். பாதிப்பின் தீவிரத்தைப்பொறுத்தே மாத்திரையின் அளவு பரிந்துரைக்கப்படும்.

*தொடர் சிகிச்சையின் மூலம் வைட்டமின்-டி குறைபாட்டைச் சரிசெய்துவிட்டாலும் அதன் அளவைத் சீராக வைத்துக்கொள்ளத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரையின் அளவு நபருக்கு நபர் வேறுபடும்" என்கிறார் அவர்.

வைட்டமின் டி குறைபாட்டை பொறுத்தவரை, மற்றவர்களைவிட முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்

2018-ம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் `இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரில் பெரும்பாலானோர் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் வயது முதிர்வும் வைட்டமின்-டி குறைபாட்டுக்கு முக்கியக் காரணம் என்பதால், மற்றவர்களைவிட முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.