Published:Updated:

ஹார்ட் அட்டாக், பிரெயின் அட்டாக் வரிசையில் ஐ அட்டாக் அலெர்ட்! கண்கள் பத்திரம் - 11

கண் பரிசோதனை

நம் சருமத்தில் சிராய்ப்போ, காயமோ ஏற்பட்டு வழண்டுபோனால், சில நாள்களில் புதிய சருமம் உருவாகிவிடும். ஆனால் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு அப்படி சரிசெய்ய முடியாதது

ஹார்ட் அட்டாக், பிரெயின் அட்டாக் வரிசையில் ஐ அட்டாக் அலெர்ட்! கண்கள் பத்திரம் - 11

நம் சருமத்தில் சிராய்ப்போ, காயமோ ஏற்பட்டு வழண்டுபோனால், சில நாள்களில் புதிய சருமம் உருவாகிவிடும். ஆனால் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு அப்படி சரிசெய்ய முடியாதது

Published:Updated:
கண் பரிசோதனை

மாரடைப்பு எனும் ஹார்ட் அட்டாக் பற்றியும், மூளைவாதம் எனப்படும் பிரெயின் அட்டாக் பற்றியும் நிறையவே கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல கண்களிலும் அட்டாக் வரலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கண்களில் வரும் அட்டாக்கை அவசரகால சிகிச்சையாகக் கருதி, உடனடியாக கவனிக்காவிட்டால், பார்வையை முழுமையாக இழக்க வேண்டிய நிலை வரலாம் என எச்சரிக்கிறார், சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம். இந்தப் பிரச்னையின் பின்னணி, அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து அவர் தரும் விளக்கங்களைப் பார்ப்போமா?

சிறப்பு மருத்துவர் வசுமதி
சிறப்பு மருத்துவர் வசுமதி

ஸ்ட்ரோக் என்றால் என்ன? உடலில் ஏதேனும் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அந்த உறுப்பு சரியாக வேலை செய்யாமல் போவதையே ஸ்ட்ரோக் என்கிறோம். ஹார்ட் அட்டாக் என்பதுகூட ஒருவகையான ஸ்ட்ரோக்தான். ஸ்ட்ரோக் என்றாலே மூளை சம்பந்தப்பட்ட பிரச்னை என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு வருவதாலேயே ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு வருகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஒரு கையோ, காலோ செயலிழந்து போகிறது. இப்படி ஸ்ட்ரோக்கில் பலவகை உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்களிலும் ஸ்ட்ரோக் வரலாம். இது ரெட்டினா எனப்படும் விழித்திரையை பாதிக்கிற ஒரு பிரச்னை. கண் என்பது கேமரா என்றால் கேமராவுக்குள் இருக்கும் ஃபிலிம்ரோல்தான் விழித்திரை.
நம் சருமத்தில் சிராய்ப்போ, காயமோ ஏற்பட்டு வழண்டுபோனால், சில நாள்களில் புதிய சருமம் உருவாகிவிடும். ஆனால் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு அப்படி சரிசெய்ய முடியாதது. விழித்திரைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஸ்ட்ரோக் வந்தால் பார்வையைத் திரும்பப்பெறச் செய்வது சாத்தியமில்லாமல் போகலாம்.

கண்
கண்

நம் உடலில் இரண்டு வகையான ரத்தக்குழாய்கள் உள்ளன. ஒன்று ஆர்ட்டரி (Artery) எனப்படும். இது நல்ல ரத்தம் பாயக்கூடிய ரத்தக்குழாய். இன்னொன்று பழைய ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய். இதை வெயின் (Vein) என்கிறோம். நமக்கு கழுத்துப்பகுதியிலும் ரத்த நாளங்கள் இருக்கின்றன. அவற்றை கரோடிடு (Carotid) என்கிறோம். அதன் வழியே நம் கண்களுக்கு ரத்தம் பாய்கிறது. எனவே இந்த ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பார்வையைத் திரும்பப் பெறுவது மிகவும் கஷ்டம்.

அதிலும் குறிப்பாக சென்ட்ரல் ரெடினல் ஆர்டரி (central retinal artery ) எனப்படும் பெரிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பார்வையைத் திரும்பப் பெறச் செய்வது மிகவும் சிரமம். இந்த ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு அந்தக் கண்ணில் பார்வை இல்லாமலே போகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாதிப்பு ஏற்பட்ட 90 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து வந்தால் கண்ணில் உள்ள பிரஷரை குறைத்து, கண்ணில் மசாஜ் செய்து சென்ட்ரல் ரெடினல் ஆர்டரி ஆக்ளுஷன் (Central retinal artery occlusion) எனப்படும் அடைப்பை நீக்கி, பார்வையைத் திரும்பப் பெற வைக்க முடியும். ஆனால் இந்தச் சிகிச்சையை விழித்திரை சிறப்பு மருத்துவர்தான் செய்ய முடியும். அதுவும் 90 நிமிடங்களுக்குள் மருத்துவரிடம் வந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இந்த ரத்தக்குழாய், மூளையுடன் தொடர்புடையது என்பதால் தாமதமானாலும் பாதிப்பு தீவிரமாகி, பார்வையைத் திரும்பப் பெற முடியாது. சில நேரங்களில் இந்தப் பிரதான ரத்தக்குழாயின் கிளைக் குழாய்களில் மட்டும் அடைப்பு ஏற்படலாம். அதன் விளைவாக கண்ணில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பார்வை தெரியாமல் போகலாம். மற்றபடி சம்பந்தப்பட்ட நபரால் மற்ற பகுதிகளில் நன்றாகவே பார்க்க முடியும்.

Eye Issues (Representational Image)
Eye Issues (Representational Image)
Photo by Towfiqu barbhuiya on Unsplash

இதைத் தவிர்த்து 'சென்ட்ரல் ரெடினல் வெயின் ஆக்ளுஷன்' (Central retinal vein occlusion) பாதிப்பு ஒன்று உள்ளது. இதில் சேஃப் டைப், டேஞ்சரஸ் டைப் என இரண்டு வகை உண்டு. இதில் சேஃப் டைப் பாதிப்பை சுலபமாகச் சரிசெய்துவிட முடியும். டேஞ்சரஸ் டைப்பில் கண்ணுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மிகவும் குறைந்து, கண்ணில் பிரஷர் அதிகமாகி, வலியும் வரத்தொடங்கும்.

இதை நியோவாஸ்குலர் கிளாக்கோமா (Neovascular glaucoma)என்று சொல்வோம். இதில் பார்வையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. கூடவே கண்களில் அழுத்தம் அதிகமாகி வலி பாடாய்படுத்தும். எனவே பார்வை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தாலோ, பார்வையில் திடீரென ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தாலோ தாமதிக்காமல் விழித்திரை மருத்துவரை அணுக வேண்டும்.

கழுத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் கொழுப்புச்சத்து இருக்கும். இந்தக் கொழுப்புதான் ரத்தக் குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. விழித்திரை என்ற ஒன்றை வைத்தே உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்.

சென்ட்ரல் ரெடினல் வெயின் ஆக்ளுஷன் பாதித்தால் கை நரம்பில் ஊசி செலுத்தி டெஸ்ட் செய்ய வேண்டும் அல்லது Optical Coherence Tomography எனப்படும் ஓசிடி முறையில் கண்ணைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்திப் பரிசோதிக்கப்படும். ஊசியே தேவைப்படாத dyeless angiography சிகிச்சைகூட இன்று வந்துவிட்டது. அதன் மூலம் விழித்திரையில் எங்கேயாவது நீர் கோத்திருக்கிறதா, எந்த ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.

ஹார்ட் அட்டாக் வந்தால் ஆஞ்சியோகிராபி செய்வதைப் போல விழித்திரை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் அதற்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கப்படும். ஆனாலும் இந்தப் பிரச்னையைப் பொருத்தவரை நேரம் மிக முக்கியம். எவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பார்வையை மீட்க முடியும்'' என்கிறார் டாக்டர் வசுமதி.

- பார்ப்போம்.

- ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism