Published:Updated:

திடீரென பார்வை மங்குகிறதா? வறட்சி முதல் மூளைக்கட்டி வரை எதுவும் காரணமாகலாம்!| கண்கள் பத்திரம் - 20

பார்வை

காட்சிகள் மங்கலாகத் தெரிவது மட்டுமன்றி, களைப்பாகவும் மயக்கமாகவும் உணர்கிறீர்களா? உங்களுடைய ரத்த அழுத்தம் குறைந்து, உடலில் நீர்ச்சத்தும் வறண்டு போயிருக்கலாம்.

திடீரென பார்வை மங்குகிறதா? வறட்சி முதல் மூளைக்கட்டி வரை எதுவும் காரணமாகலாம்!| கண்கள் பத்திரம் - 20

காட்சிகள் மங்கலாகத் தெரிவது மட்டுமன்றி, களைப்பாகவும் மயக்கமாகவும் உணர்கிறீர்களா? உங்களுடைய ரத்த அழுத்தம் குறைந்து, உடலில் நீர்ச்சத்தும் வறண்டு போயிருக்கலாம்.

Published:Updated:
பார்வை

`நேத்துவரை நல்லாத்தானே இருந்தேன்... திடீர்னு பார்வையில ஏதோ வித்தியாசம் தெரியுதே...' என்ற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். திடீரென பார்வை மங்கலானதுபோல உணர்ந்திருப்பார்கள். `வேலை அதிகம், ஸ்ட்ரெஸ், ரெஸ்ட் இல்லை... பார்வை மங்கியதற்கு இப்படி உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு அலட்சியப்படுத்தாதீர்கள். அது சாதாரண களைப்பில் தொடங்கி, மூளைக்கட்டி வரை பெரிய பாதிப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

பார்வை மங்குவதன் பின்னணி மற்றும் தீர்வுகளை விளக்குகிறார் அவர்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்கள் வறட்சி

நீண்ட நேரத்துக்கு கம்ப்யூட்டர் திரையையோ, புத்தகத்தையோ பார்த்துக்கொண்டிருந்தன் விளைவாகக் கண்கள் களைத்துப் போயிருக்கலாம். இதுபோன்ற வேலைகளின்போது பெரும்பாலும் நாம் கண்களை இமைக்கத் தவறிவிடுவோம். கண்களை இமைக்கும்போதுதான் கண்ணீர் சுரப்பி தூண்டப்பட்டு, கண்கள் வறண்டுபோகாமலிருக்கும். கண்களின் புத்துணர்வுக்கும் அதுதான் காரணம்.

எனவே, கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை பார்க்கும்போது, கண்களை இமைக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். இடையிடையே பிரேக் எடுத்து, கண்களை பசுமையான இடங்களை நோக்கிப் பார்க்கச் செய்வதன் மூலம், களைப்பைப் போக்கலாம். அதீத வறட்சி இருப்பவர்கள் கண் மருத்துவரின் உதவியோடு கண்களுக்கான டிராப்ஸ் பயன்படுத்தலாம்.

கண் பாதுகாப்பு
கண் பாதுகாப்பு

நீரிழிவு

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த இயலாத அளவில் இருக்கும்போதும், பார்வை மங்கலாகத் தெரியலாம். நீரிழிவு இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்போ, திடீரென நீரிழிவுக்கான சிகிச்சையை மாற்றும்போதோ (உதாரணத்துக்கு இன்சுலின் தொடங்கும்போது) இப்படி நிகழலாம்.

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்ததும், பார்வையும் தெளிவாவதை உணர்வார்கள். சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கண்களை பாதிக்கும் டயாபட்டிக் ரெட்டினோபதி பிரச்னையும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே சர்க்கரைநோயாளிகள் வருடம் தவறாமல் கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கண்களின் வீக்கம்

அடிபட்டதன் விளைவாகவோ, கண்களில் மோசமான ஏதேனும் ஒரு பொருள் பட்டதாலோ கண்களின் திசுக்கள் வீங்கலாம். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே தூங்குவது, லென்ஸை முறையாக சுத்தப்படுத்தாமல் உபயோகிப்பது போன்றவை கண்களை பாதித்து, மங்கலான காட்சிகளுக்குக் காரணமாகலாம்.

நோய் எதிர்ப்பாற்றலுடன் தொடர்புடைய சொரியாசிஸ், இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பாதிப்புகளும் பார்வையை பாதிக்கலாம். எனவே, இவற்றுக்கான அறிகுறிகளை உணர்ந்தால் முறையான மருத்துவரிடம் சரியான சிகிச்சைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

கண் வீக்கம்
கண் வீக்கம்

குறைரத்த அழுத்தம்

காட்சிகள் மங்கலாகத் தெரிவது மட்டுமன்றி, களைப்பாகவும் மயக்கமாகவும் உணர்கிறீர்களா? உங்களுடைய ரத்த அழுத்தம் குறைந்து, உடலில் நீர்ச்சத்தும் வறண்டு போயிருக்கலாம். சில வகையான சிகிச்சைகள், இதய பாதிப்புகள், ஊட்டச்சத்தில்லாத உணவுகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களாலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உண்டாகி, அதன் விளைவாக பார்வை மங்கலாம். வேறு காரணங்கள் இல்லாமல் திடீரென பார்வை மங்குவதாக உணர்ந்தால் ரத்த அழுத்த அளவை சரிபாருங்கள்.

காட்சிகள் மங்குவதோடு கண்கள் சிவந்திருந்தாலோ வலியை உணர்ந்தாலோ உங்களுக்கு `ஆங்கிள் க்ளோஷர் கிளாக்கோமா' எனப்படும் கண் அழுத்த பாதிப்பு இருக்கலாம். இது மிக வேகமாகத் தீவிரநிலையை அடையும் பிரச்னை என்பதால் உடனே மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம். 'ஓப்பன் ஆங்கிள் கிளாக்கோமா' வகை கண் அழுத்த பாதிப்பானது பரவலாக பாதிக்கக்கூடியது. அது மெதுவாகத்தான் தீவிரமடையும்.

கண் அழுத்த நோய் பாதித்தால், அது பார்வை நரம்பை பாதிக்கும் என்பதால் பார்வையைத் திரும்பப் பெறுவது சிரமம். எனவே, குறிப்பிட்ட இடைவெளிகளில் கண் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் கண் அழுத்தத்தை அறிந்து அது பார்வையிழப்பில் முடிவதைத் தவிர்க்கலாம். கண் அழுத்த அளவைப் பொறுத்து, கண்களுக்கான டிராப்ஸ் முதல் அறுவை சிகிச்சை வரை மருத்துவர் பரிந்துரைப்பார். மங்கலான பார்வையும் இதில் ஓர் அறிகுறி என்பதால் அலர்ட்டாக இருப்பது அவசியம்.

ஒற்றைத் தலைவலி

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களுக்கு பார்வை மங்கலாகத் தெரிவது சகஜம். சில மணி நேரம் வரை இந்த வித்தியாசத்தை உணர்வார்கள். பார்வையில் குறுக்கு நெடுக்கு கோடுகள், மின்னல் வெட்டுவது போன்ற காட்சிகள், இருட்டான தோற்றம் எனப் பலவற்றையும் உணர்வார்கள். தண்ணீரின் வழியே காட்சிகளைப் பார்ப்பதுபோல உணர்வார்கள். தலைவலி நின்ற பிறகும் சிலருக்கு இது தொடரும். இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரு கண்ணில் மட்டும் ஏற்பட்டாலோ, ஒரு மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்தாலோ, சில நொடிகள்வரை பார்வையை மழுங்கடித்தாலோ அதை அலட்சியம் செய்யாமல் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

ஒற்றைத் தலைவலி
ஒற்றைத் தலைவலி

50 வயதுக்கு மேலானவர்களுக்கு கண்புரை ஏற்படுவது சகஜம். ஆனால், இள வயதினருக்கும் அது பாதிக்கலாம். நிறங்கள் வெளுத்ததுபோலத் தெரிவது, இரவில் வெளிச்சத்தைப் பார்ப்பதில் சிரமம், வெளிச்சத்தைப் பார்த்தால் கண்கள் கூசுவது போன்றவை அதன் அறிகுறிகள். சரியான கண்ணாடிகள் மற்றும் தேவையுள்ளோருக்கு கண்புரையை நீக்கும் அறுவைசிகிச்சை போன்றவை இதற்கு உதவும்.

40 வயதில் அடியெடுத்து வைப்பவர்களுக்கே, இன்று வெள்ளெழுத்து பாதிப்பு ஏற்படுவதைப் பார்க்கிறோம். செல்போன் பார்க்கவும் புத்தகங்கள் வாசிக்கவும் சிரமப்படுவார்கள். ``ப்ரெஸ்பையோபியா' (Presbyopia) என்று சொல்லப்படும் இந்தப் பிரச்னை, முதுமையின் காரணமாக யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கண்ணாடி அணிவதைத் தவிர்ப்பதும் தள்ளிப்போடுவதும் பாதிப்பைத் தீவிரப்படுத்தும் என்பதால், அதைத் தவிர்ப்பது பார்வையில் தெளிவை ஏற்படுத்தும்.

மூளை பாதிப்பு

மூளையில் அடிபட்டதன் விளைவாகவும் பார்வையில் பாதிப்பு வரலாம். உதாரணத்துக்கு மூளையில் கட்டி வருவது. மூளையின் வீக்கத்தின் அறிகுறியாக காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரியலாம். இப்படி எதுவுமே இல்லாமல் திடீரென பார்வை மங்கலாவது என்பது வலிப்புநோயின் அறிகுறியாக, ஆபத்தானதாகவும் இருக்கலாம்.

விழித்திரை வீக்கம்

ரெட்டினா எனப்படும் விழித்திரை கிழிந்தாலோ, வீங்கினாலோ உங்கள் கண்கள் வழியே காணும் காட்சியானது தெளிவாக இருக்காது. பரம்பரையாக விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள், ஊட்டச்சத்தில்லாத உணவுகளை உண்பவர்கள், சிகரெட் பழக்கம், ஏற்கெனவே கண்களில் அடிபட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், நீரிழிவு உள்ளிட்ட பிற உடல்நல பாதிப்புகள் போன்றவையும் விழித்திரையை பாதிக்கும். அதன் விளைவாக பார்வை மங்கலாகும்.

டாக்டர் வசுமதி
டாக்டர் வசுமதி

கர்ப்பகால ரத்த அழுத்தம்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் `ப்ரீஎக்ளாம்சியா' பாதிப்பாலும் பார்வை மங்கலாகும். தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் இருக்கும். நஞ்சுக்கொடியில் உள்ள ரத்த நாளங்கள் மிகவும் குறுகியதாகவும் சரியாக வேலை செய்யாதபோதும் இது நிகழ்கிறது. கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு உயர் ரத்த அழுத்தம் இருப்பது, இதன் முதல் அறிகுறியாகும். உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

- பார்ப்போம்

- ராஜலட்சுமி

பார்வை தொடர்பான உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள். பதில் சொல்லக் காத்திருக்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism