தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்த, ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் 95 சதவிகிதம் சரி செய்ய முடிந்த, ஒரே புற்றுநோய் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மட்டுமே. ஜனவரி மாதம், சர்வதேச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். இந்நேரத்தில், செர்வைகல் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான காரணம் முதல், தீர்வு வரை முழுமையாகத் தெரிந்து கொள்ள, காவேரி மருத்துவமனையின் (சீலநாயக்கன்பட்டி, சேலம்) மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவர் சத்யா சுதாகரிடம் பேசினோம்.

1. செர்வைகல் கேன்சர், உடலின் எந்தப் பகுதியில் வரும் ?
கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், அதன் வாய் இருக்கும். அந்த வாய்ப்பகுதியில் வருவதுதான் செர்வைகல் கேன்சர். இந்த இடத்தில் வருவதால்தான் தமிழில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்கிறோம்.
2. எந்த நாட்டுப் பெண்களிடம் இது அதிகம் காணப்படுகிறது?
மருத்துவத்துறையில் போதுமான வளர்ச்சியடையாத நாடுகள் மற்றும் மருத்துவத்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளில் உள்ள பெண்களிடம் இந்தப் புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. இந்த நாடுகளில் செர்வைகல் கேன்சரை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ளும் வசதிகளே குறைவாக இருப்பதால், இதுதொடர்பான விழிப்புணர்வும் பெண்களிடம் குறைவாகவே இருக்கிறது.
3. இந்த கேன்சர் எந்த வயதில் வரலாம் ?
பெண்களில், 30 முதல் 45 வயது வரையில் இருப்பவர்களுக்கே அதிகம் வருகிறது. பெரும்பாலும் திருமணத்துக்குப் பிறகே வருகிறது.
4. இதற்கு காரணம் ஒரு வைரஸ் என்கிறார்களே... அது உண்மையா?
உண்மைதான். செர்வைகல் கேன்சர் வருவதற்கு, ஹெச்.பி.வி (HPV Human papilloma virus) எனப்படும் வைரஸ் கிருமிதான் 95 சதவிகிதம் காரணம். இந்த வைரஸ், செக்ஸ் மூலம் பரவும். கண்டறியாமல் விட்டுவிட்டால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாக மாறிவிடும்.

5. வைரஸ்தான் காரணமென்றால், இது மனைவியிடமிருந்து கணவருக்குப் பரவுமா?
புற்றுநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. ஆனால், இந்தப் புற்றுநோய்க்கு காரணமான வைரஸ் செக்ஸ் மூலம் பரவும் என்பதால், மனைவியிடமிருந்து கணவருக்கும் பரவலாம். பாதிக்கப்பட்ட கணவருக்குப் பிறப்புறுப்பில் மருபோல வரலாம். இதை ஜெனிட்டல் வார்ட் என்போம். தவிர, ஆணுறுப்பில் வலியுடன் கூடிய சிவப்புத்திட்டுகள், புண் ஆகியவையும் வரலாம். இவற்றைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்தால், பிற்காலத்தில் புற்றுநோயாக மாறலாம்.
6. `Precancer' நிலை என்கிறார்களே... அப்படி செர்வைகல் கேன்சரையும் கண்டறிய முடியுமா?
நிச்சயம் முடியும். Cervical Intraepithelial Neoplasia (CIN ) என்றொரு பரிசோதனை முறை இருக்கிறது. இதில் CIN 1, CIN 2, CIN 3 என மூன்று நிலைகள் இருக்கின்றன. முதல் நிலையில் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் உள்ள எபித்திலீயம் செல்களில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் நிலையில், மூன்றில் இரண்டு பங்கு பாதிக்கப்பட்டிருக்கும். மூன்றாவது நிலையில் இரண்டு பங்கைவிட அதிகமான செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இவைதான் ப்ரீகேன்சரஸ் நிலை. இந்த நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துவிடலாம். குணமாகும் வாய்ப்புகளும் அதிகம்.
7. செர்வைகல் கேன்சர் வராமல் தடுக்க வழிகள் இருக்கின்றனவா? அவை என்னென்ன ?
பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரே வாழ்க்கைத்துணையுடன் மட்டும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். இயல்புக்கு மாறான வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால் உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
8. வந்துவிட்டால், இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் என்னென்ன?
* நாப்கின் பயன்படுத்துகிற அளவுக்கு நிறைய வெள்ளைப்படும். அதுவும் துர்வாடையுடன் இருக்கும். சிலருக்கு லேசாக ரத்தம் கலந்து வரும்.
* உடல் எடை குறையும்.
* சரியாகச் சாப்பிட முடியாது. விளைவு, உடல் பலவீனமடையும்.
* இரண்டு மாதவிடாய்க்கு இடையே ரத்தப்போக்கு ஏற்படலாம்.
* தாம்பத்திய உறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம்.

9. பாட்டி, அம்மா, அத்தை போன்றவர்களுக்கு இருந்தால், அடுத்த தலைமுறைப் பெண்ணுக்கும் வருமா ?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் பரம்பரைத் தன்மை என்று எடுத்துக்கொண்டால், அம்மாவுக்கு இருந்தால் மகளுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அல்லது உடன்பிறந்த சகோதரிக்கு இருந்தாலும் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
10. செர்வைகல் கேன்சரை கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்னென்ன? அவை காஸ்ட்லியானவையா?
நோயின் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு ஸ்கிரீன் டெஸ்ட் பரிசோதனை இருக்கிறது. மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்வதுபோல, திருமணமான அனைத்துப் பெண்களும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
தற்போது, HPV DNA என்றொரு பரிசோதனை இருக்கிறது. இதன் மூலம் ஹெச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும்.
ஸ்பெக்குலம் எக்ஸாமினேஷன் (Speculum Examination) மூலம் கர்ப்பப்பை வாயில் புண் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பப்பை வாய் திசுக்களை எடுத்து பாப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை செய்யலாம். அல்லது இந்தத் திசுக்களை எடுத்து திரவ அடிப்படையிலான சைட்டாலஜி (Liquid based cytology) பரிசோதனையும் செய்யலாம். இவையெல்லாம் ஆரம்ப நிலை பரிசோதனைகள்.
செர்வைகல் கேன்சருக்கான அறிகுறிகள் தெரிகின்றன என்றால், கால்போஸ்கோப்பி பரிசோதனையில் (colposcopy test) கேமரா மூலம் கர்ப்பப்பை வாயைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். பிறகு, அந்தப் பகுதியில் அசிட்டிக் ஆசிட் தொட்டு வைத்தால், எந்த செல் அப்நார்மலாக இருக்கிறதோ அது வெள்ளையாகத் தெரியும். அந்த இடத்திலிருந்து திசுக்களை எடுத்து, பரிசோதனைக்கு அனுப்புவார்கள். இதை செர்வைகல் பயாப்ஸி என்போம்.
பாப் ஸ்மியர் பரிசோதனை செய்ய பரிசோதனைக்கூடங்களைப் பொறுத்து ரூ.300 முதல் 1500 ரூபாய்தான் ஆகும். இதிலேயே செர்வைகைல் கேன்சர் இருக்கிறதா, இல்லையா என்பது பெரும்பாலும் தெரிந்துவிடும். உறுதிப்படுத்திக்கொள்ள கால்போஸ்கோப்பி செய்கிறீர்களென்றால் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகலாம்.
11. செர்வைகல் கேன்சர் இளவயதுப் பெண்களுக்கும் வருமா? அப்படி வந்து குணமடைந்த பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா ?
இருபது வயதுக்குக் குறைவான பெண்களுக்கு இந்த கேன்சர் வருவது வெகு அரிது. ஒருவேளை, திருமணமாகி குழந்தை பிறப்பதற்கு முன்னால் இந்தப் பிரச்னை வந்துவிட்டால், ரேடியோ தெரபி மற்றும் கீமோ தெரபி தரும்போது, சினைப்பையின் திசுக்கள் சேதமாகும். அதனால், சிகிச்சைக்கு முன்னரே கருமுட்டைகளை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதைவிட முக்கியமாக இந்தச் சிகிச்சையில் கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

12. செர்வைகல் கேன்சருக்காக தரம் சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
* அறுவை சிகிச்சை மற்றும் அனஸ்தீஷியா காரணமாக பக்க விளைவுகள் வரலாம்.
* கீமோ தெரபி காரணமாக, குமட்டல், வாந்தி, ருசியின்மை, பசியின்மை, உடல் சோர்வு, உடல் இளைப்பது, முடிகொட்டுதல், டிப்ரெஷன், தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
* ரேடியோ தெரபியால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து பலவீனமாகும். சினைப்பை பாதிக்கப்படலாம்.
இத்தனை பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் மேற்சொன்ன சிகிச்சைகளைச் செய்து, பாதிக்கப்பட்டவரை 95 சதவிகிதம் காப்பாற்றிவிடலாம். அவர்களின் வாழ்நாளையும் நீட்டிக்க வைக்க முடியும். சிகிச்சையின் நன்மை, தீமை என்று பார்த்தால் வாழ்நாள் நீட்டிப்பு என்கிற நன்மையைத்தான் பார்க்க வேண்டும்.
13. கர்ப்பப்பையை நீக்கிவிட்டால் அதன்பிறகு செர்வைகல் கேன்சர் திரும்ப வராதா?
பெரும்பாலும் வராது. என்றாலும், ஒரேயொரு கேன்சர் செல் உடலில் தங்கி விட்டாலும் மறுபடியும் வரலாம். ஆனால், அதற்கு 15 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.