Published:Updated:

கொரோனா சைட்டோகைன் பிரச்னை... சிகிச்சையில் பயன்படும் கரி?

corona virus
corona virus

கரியிலிருந்து எடுக்கப்பட்ட நுண்நொதிகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகச் செயல்பட்டு திசுக்களைப் பாதிக்கக்கூடிய ரியாக்டிவ் ஆக்ஸிஜன் ஸ்பீசிஸை தகர்க்கிறது. ரியாக்டிவ் ஆக்ஸிஜன் ஸ்பீசிஸ் என்பது சைட்டோகைன்களைச் சுரக்கச் செய்யும் காரணி.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உலகம் முழுக்க நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 வைரஸ் நுரையீரலை பிரதானமாகத் தாக்கக்கூடிய வைரஸ் என்றாலும், அதன் தாக்கம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், கொரோனா தொற்றால் ஒருவரின் உடலில் ஏற்படும் சைட்டோகைனின் சுழல் (Cytokine Storm).

Corona Treatment
Corona Treatment
pixabay.com

நுண்ணுயிரிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, நம் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு, சைட்டோகைன்களை, அந்த நுண்ணுயிரியை எதிர்த்துப் போராட அனுப்பி வைக்கிறது. சில நேரங்களில் நம் எதிர்ப்பு சக்தி அதிகமாகத் தூண்டப்படுவதால், அளவுக்கதிகமான சைட்டோகைன்கள் வெளியிடப்படுகின்றன. இதை சைட்டோகைன் சுழல் என்று கூறுகிறோம். இந்த சைட்டோகைன் சுழல், செல்களை இறக்கச்செய்து, வெவ்வேறு உறுப்புகளை பாதிக்கிறது. கொரோனா தொற்றால் ஒரு நோயாளி இறப்பதற்கு இந்த சைட்டோகைன் சுழலும் பிரதானமான காரணமாக உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு தைராய்டு பாதிப்பு - ஏன்? மருத்துவர் விளக்கம்

கோவிட்- 19 நோயாளிகளுக்கு ஏற்படும் சைட்டோகைன் சுழலுக்கு சிகிச்சை அளிக்க கரி (Charcoal) பயனுள்ளதாக உள்ளதாக ரைஸ் பல்கலைக்கழகம், மெக்கவர்ன் மருத்துவப் பள்ளி மற்றும் டெக்சாஸ் A மற்றும் M மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்க ரசாயன சமுதாய அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், கரியிலிருந்து செயற்கையாக எடுக்கப்படும் சில நொதிகள், சைட்டோகைன் சுழலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க வல்லன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆராய்ச்சியாளர்கள் நிலக்கரியையும் (coal) கார்பனையும் உபயோகித்து அதன் மூலம் கிடைத்த வேதிப்பொருள்களைக் கொண்டு ஆராய்ந்து வந்தனர். தற்போது கரியையும் செறிவடைந்த நைட்ரிக் ஆக்ஸைடையும் பயன்படுத்தி அதில் உருவான நுண் நொதிப் பொருள்களை ஆராய்ச்சியில் பயன்படுத்தியுள்ளனர்.

Charcoal
Charcoal

கரியிலிருந்து எடுக்கப்பட்ட நுண்நொதிகள் ஆன்டி ஆக்ஸிடென்டாகச் செயல்பட்டு திசுக்களைப் பாதிக்கக்கூடிய ரியாக்டிவ் ஆக்ஸிஜன் ஸ்பீசிஸை தகர்க்கிறது. ரியாக்டிவ் ஆக்சிஜன் ஸ்பீசிஸ் என்பது சைட்டோகைன்களை சுரக்கச் செய்யும் காரணி.

இது குறித்து ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ஜேம்ஸ் டூர் கூறுகையில், ``இந்த நுண் நொதிகள், ரியாக்டிவ் ஆக்சிஜன் ஸ்பீசிஸை, சாதாரண ஆக்சிஜனாகவும் ஹைட்ரஜன் பெர்ராக்ஸைடாகவும் மாற்றுகின்றன. இதன் மூலம் செல்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன' என்றிருக்கிறார்.

இந்த நுண் நொதி மூலம் சைட்டோகைன் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு