Published:Updated:

கம்ப்யூட்டர் முதல் டாய்லெட் பேப்பர் வரை... அலுவலகம் செல்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான செக்லிஸ்ட்!

பணியிடம்
பணியிடம் ( pixabay )

பணிச்சுமையை ஸ்ட்ரெஸ்சாக எண்ணாமல் உங்களை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக மாற்றுங்கள். இது நிச்சயம் உங்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும்.

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த தருணத்திலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒருகட்டத்தில் அவசியத் தேவைகளுக்காக கட்டுப்பாடுகளில் தளர்வுகள் தரப்பட்டதால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பரவல் அதிகமாகத்தொடங்கியது. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கையில் கடந்த 15 நாள்களில் பத்தாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்கு இந்தியா வந்துள்ளது. கொரோனாவிற்கு இன்னும் உரிய மருந்துகள் கண்டு பிடிக்கப்படாத சூழலில் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, தனிமைப்படுத்திக்கொள்வதே தீர்வாக அமையும்.

அலுவலகம்
அலுவலகம்
pixabay

அடுத்தடுத்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்தியாவில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக உற்பத்தியை நிறுத்திவைத்திருந்த நிறுவனங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பத்தொடங்கியுள்ளன. சில மாதங்களாக வொர்க் ஃப்ரம் ஹோமிலிருந்த பணியாளர்கள் மீண்டும் அலுவலகம் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் அலுவலகம் சென்றாலும் உங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் கவனம் தேவை.

வேலையிழப்பைத் தவிர்க்க...

எல்லாத் துறை சார்ந்த நிறுவனங்களுமே கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு நிறுவனத்தைக் கொண்டு வர எல்லாப் பணியாளர்களும் கை கொடுப்பது அவசியமாகும். இந்தச் சூழலில் வேலை என்பது எல்லோருக்குமே அவசியமான ஒன்று. வேலையைத் தக்கவைத்துக்கொள்ள மற்ற நேரங்களைக் கூடுதலான உழைப்பைச் செலுத்தியாக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிறைய பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால் பணியில் இருப்பவர்களுக்கு நிச்சயம் பணிச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். அதை ஸ்ட்ரெஸ்ஸாக எண்ணாமல் உங்களை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக மாற்றுங்கள். இது நிச்சயம் உங்களின் பதவி உயர்வுக்கு வழிவகுக்கும்.

பணியிடம்
பணியிடம்
pixabay

கொரோனா குறித்த பயம் ஒரு புறம், மன அழுத்தம் ஒரு புறம் இதற்கிடையில் வேலை பார்ப்பது என்பது சவாலான ஒன்றுதான். ஆனால் எதிர்காலத்திற்காகக் குதிரை போன்று ஓட வேண்டிய நேரம் இது. நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய பணிகளை 'DO IT TODAY' எனத் திட்டமிடுங்கள். எந்தப்பணியாக இருந்தாலும் அதனைச் சரியான நேரத்திற்குள் முடித்துக்கொடுக்க முயற்சி செய்யுங்கள். பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நஷ்டத்தைத் தவிர்க்க ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தைக் குறைக்கவே நிறுவனங்கள் முயற்சி செய்யும். எனவே நான் இந்தப் பணிக்காகத்தான் நியமிக்கப்பட்டேன். இதை மட்டும்தான் செய்வேன் எனக் குறுகிய வட்டத்துக்குள் உங்களை அடைத்துக் கொள்ளாமல் நிறுவனம் எதிர்பார்ப்பதைத் தொடர்ந்து நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். கூடுமானவரை உங்களின் தலைமையிடம் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். எந்தப்பணியாக இருந்தாலும் சிறிய தவறு கூட கண்டுபிடிக்க முடியாதபடி வேலையை நேர்த்தியாகச் செய்து கொடுங்கள். உங்கள் துறை சார்ந்து நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் கடின உழைப்பும் ஸ்மார்ட் திங்க்கிங்கும் இருக்கும் பட்சத்தில் பணி இழப்பு பற்றிக் கவலையில்லாமல் இருக்கலாம்.

வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் போது நினைத்த நேரத்திற்குச் சாப்பிட்டு இருப்போம். தூங்கி இருப்போம். அதனால் அலுவலகம் செல்லும் போதும் உரிய நேரத்திற்குப் பசியின்மை, வேலை பார்க்கும் போது வரும் தூக்கம் போன்றவற்றை இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நேரம். அலுவலகம் சென்ற சில நாள்களுக்குப் பழைய பழக்கம் மாறச் சிறிது சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் காலையில் விரைவாக எழுவது, சாப்பிடுவது, கண்ட நேரத்தில் திண்பண்டங்களை உண்பதைத் தவிர்ப்பது, தூக்கம் வரும் நேரத்தில் எழுந்து சென்று சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்து மீண்டும் பணியைத் தொடர்வது எனச் சின்னச் சின்ன செயல்பாடுகள் மூலம் உடலை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர இயலும். ஆனால், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காக நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன.

பணியிடம்
பணியிடம்
pixabay

பாதுகாப்பு முக்கியம்

அலுவலகங்களுக்கு வருபவர்கள், வெவ்வேறு இடங்களிலிருந்து வருவார்கள். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கொரோனா பரவியிருக்க வாய்ப்புகள் இருக்கும். 'கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது... நான் பணிக்கு வரமுடியாது' எனச் சூழலையும் காரணம் காட்ட இயலாது. ஆனால் நம்முடைய பாதுகாப்பினை நாம் தான் உறுதி செய்துகொள்ள வேண்டும். மாஸ்க், க்ளவுஸ் பயன்படுத்துவது மட்டும் பாதுகாப்பாகாது. கூடுமானவரை அலுவலகங்களில் லிஃப்ட், கதவுகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படியே பயன்படுத்தினாலும் உடனே கைகளை சானிடைஸர் கொண்டு சுத்தம் செய்து விடவேண்டும். கைகளில் க்ளவுஸ் அணிந்திருந்தாலும் கூட, ஒரு டிஸ்யூ பேப்பரில் சானிடைஸர் தெளித்து கம்யூட்டரின் கீ போர்ட்டையும், மவுஸ்ஸையும் தினமும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் சானிடைஸர்கள் வைக்கப்பட்டு இருந்தாலும் உங்கள் இடத்தின் அருகில் ஒரு சின்ன பாட்டிலில் சானிடைஸர் வைத்துக்கொள்வது நல்லது.

உங்களின் போன், பேனா போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இன்னும் சிறிது காலத்திற்கு பைக்கில் லிஃப்ட் கொடுக்காமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் பொதுவாக வைக்கப்பட்டு இருக்கும் பிரின்டர்கள், தண்ணீர்க் குழாய்கள், ஸ்விட்ச்களைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவி விடுவது அவசியம். டாய்லெட் ஷீட்களைப் பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அலுவலகம் முடித்து மீண்டும் வீட்டிற்குச் சென்றவுடன் ஆடைகளைத் துவைத்து, குளித்து விடுவது நல்லது. இவை எல்லாவற்றையும் விட காய்ச்சல், இருமல், சளி இருந்தால் தயக்கம் காட்டாமல் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

குடும்பத்தின் எதிர்காலத்திற்காக உயிரைப் பணயம் வைத்து அலுவலகம் செல்லும் நீங்கள் உங்களின் பணி, ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்து இரண்டையும் ஒன்றாக ஈடுகட்ட வேண்டிய நேரமிது.

மன அழுத்தத்திற்குப் பை பை

முன்பு குடும்பத்துடன் வார விடுமுறை நாள்களில் வெளியே செல்லும் பழக்கம் இருந்திருக்கும். குடும்பத்துடன் அப்படியான ஒரு ட்ரிப் சென்று வரும்போது சின்னச் சின்ன மனக்கசப்புகள் நீங்கும். ஒரு வாரத்தில் நாம் அடைந்த மொத்த மன அழுத்தமும் குறைந்து அடுத்த வாரத்தை ஃப்ரெஷாக ஆரம்பிக்க முடியும். ஆனால் கொரோனா நேரத்தில் வெளியே எங்கும் செல்ல முடியாததால் உங்கள் வார விடுமுறை நாளை லேப்டாப்புடன் கழிக்காமல், வீட்டுக்குள்ளயே குழந்தைகளுடன் சேர்ந்து என்ன செய்யலாம் என்று திட்டமிடுங்கள். தோட்டம் அமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்ப்பது என மனதுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைச் செய்யலாம்.

மன அழுத்தம்
மன அழுத்தம்
pixa bay
பயத்திலும், பதற்றத்திலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் போது, நம்மை அறியாமலே வேலையின் மீது ஒரு சலிப்பு ஏற்பட்டு விடும்.

அலுவலகங்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர ஒதுங்கியிருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. பகல் முழுவதும் பயத்திலும், பதற்றத்திலும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் போது, நம்மை அறியாமலே வேலையின் மீது ஒரு சலிப்பு ஏற்பட்டு விடும். முக்கால் மணிநேரத்தில் செய்ய வேண்டிய வேலையை மூன்று மணிநேரமாகச் செய்து கொண்டு இருப்போம். இது போன்ற சூழலில் நண்பர்களுடன் சேர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து ஒரு சின்ன வாக்கிங் போகலாம். அல்லது சிறிது நேரம் மனது விட்டுப் பேசலாம். அல்லது மனதுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பாடலைக் கேட்கலாம். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளும் போது எனர்ஜி அளவு அதிகரிப்பதுடன் பாசிட்டீவ் மனிதராகவும் மாறுவீர்கள்.

கடன் தவணைகளைச் செலுத்தத் தொடங்கலாம்

பொருள்களின் விலைவாசி ஒரு புறம், ஊதியக் குறைவு, அல்லது ஊதிய நிறுத்தம் என ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியாகப் பாதிப்புகளைச் சந்தித்திருக்கும். வங்கிக் கடன், இ.எம். ஐ கட்டணங்களை சில மாதங்கள் செலுத்தாமல் இருந்திருப்போம். காலம் தாழ்த்தி செலுத்தும் வட்டி தொகைக்கும் வட்டி கட்ட வேண்டிய சூழல் வரும். எனவே, இப்போது மீண்டும் இயல்பு நிலை வரத்தொடங்கியுள்ளதால் கடன் தவணைகளைச் செலுத்தத் தொடங்கலாம். இன்னும் சில மாதங்களுக்கு வேலையிழப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் புதிதாக வங்கிக் கடன்களோ, இ.எம்.ஐ மூலம் பொருள்கள் வாங்குவதையோ கூடுமானவரை தவிர்க்கலாம்.

`குட்பை கொரோனா!' - கொரோனாவை வென்ற நியூஸிலாந்தின் கதை!

ஹெல்த்தில் கவனம்

அலுவலகம் செல்லும்போது நண்பர்களுடன் சேர்ந்து வெளி இடங்களுக்குச் சென்று சாப்பிடுவதோ அல்லது வேண்டியதை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கத்தைப் பெரும்பான்மையானவர்கள் கொண்டிருப்போம். இது மனதை ரிலாக்ஸ் செய்யும் ஒன்றாக இருக்கும் என்றாலும் இந்த நேரத்தில் கூடுமானவரை வீட்டு உணவுகளே சிறந்தது. கடைகளில் எப்படி உணவு தயார் செய்கிறார்கள்... பாத்திரங்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. எனவே எளிமையான உணவாக இருந்தாலும் வீட்டில் தயாரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பேச்சுலராக இருந்தாலும் கூட வீட்டில் உங்களால் செய்ய முடிந்த உணவுகளைத் தயார் செய்து கொள்வது நல்லது.

மூன்று நேர உணவும் தயார் செய்ய முடியவில்லை என்பவர்கள் காலை அல்லது மதியம் என ஒரு நேரத்திற்குத் தானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள் வீட்டில் தயார் செய்யும் ஜூஸ் என உங்களின் டயட்டினை ஈடு செய்யலாம். அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர், வீட்டிலேயே காபி தயார் செய்து ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி எடுத்துச் செல்லலாம் அல்லது வெந்நீர் மட்டும் எடுத்துக்கொண்டு க்ரீன் டீக்கு மாறிக்கொள்ளலாம். வாய்ப்பில்லை என்பவர்களைக் கடைகளில் யூஸ் அண்ட் த்ரோ கப்களைப் பயன்படுத்துவது நல்லது. குடும்பத்தின் எதிர்காலத்திற்காக உயிரைப் பணயம் வைத்து அலுவலகம் செல்லும் நீங்கள் உங்களின் பணி, ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்து இரண்டையும் ஒன்றாக ஈடுகட்ட வேண்டிய நேரமிது. வீண் பயம் இல்லாமல் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பான பயணத்தைத் தொடருவோம்.

அடுத்த கட்டுரைக்கு