முதல் அலை, இரண்டாம் அலைகளைக் கடந்து 2021-ன் இறுதியில் கொரோனா வைரஸின் உருமாறிய தோற்றமான, ஒமிக்ரானால் மூன்றாம் அலை பரவத் தொடங்கியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தி யிருந்ததால், ஒமிக்ரான் தொற்று தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், உலக சுகாதார நிறுவனம் ஒமிக்ரான் தொற்றை சாதாரணமாகக் கருத வேண்டாம் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வாரத்தில் இரண்டு நாள்கள் நேரிலும், பிற நாள்கள் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் அனைத்து நாள்களிலும் நேரடியாக வழக்கு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கோரிக்கை வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதற்கு பதிலளித்த நீதிபதி என்.வி ரமணா, ``ஒமிக்ரான் ஒரு `சைலன்ட் கில்லர்' என்பது உங்களுக்குத் தெரியுமா? முதல் அலையின்போது நான் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டிருந்தேன். அப்போது, 4 நாள்களில் சரியாகிவிட்டது. ஆனால், தற்போதுள்ள ஒமிக்ரான் தொற்றால் 25 நாள்களாகியும் சிரமப்படுகிறேன்" என்று கூறினார்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ``ஒமிக்ரான் தொற்று வீரியத்தன்மை அற்றது; இதில் மக்கள் வேகமாகக் குணமடைந்து வருகிறார்கள். நீங்கள் துரதிர்ஷ்டசாலி!" என்று தெரிவித்துள்ளார்.
விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ``ஓகே, பொறுத்திருந்து பார்ப்போம்" என இதற்குப் பதிலளித்தார் தலைமை நீதிபதி ரமணா.
ஒமிக்ரான் தொற்று பாதிப்பு லேசானதாக இருந்தாலும், அதற்குப் பிறகான தொடர் பாதிப்புகளால் பலர் மாதக்கணக்காக அவஸ்தைப்பட்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உண்மையிலேயே ஒமிக்ரான் `சைலன்ட் கில்லர்'தானா என்று சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்.
``ஒமிக்ரான் லேசான தொற்றைத்தான் பெரும்பாலும் ஏற்படுத்தும். வயதான நபர்களுக்குத்தான் முதலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இளம் வயதினருக்கு வெறும் லேசான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை மட்டுமே வந்தது. ஒமிக்ரான் தொற்று லேசானது என்பதால் இது முற்றிலும் ஆபத்தை ஏற்படுத்தாது என்று சொல்ல முடியாது. வைரஸால் ஏற்படும் காய்ச்சல் ஒருநாள் அல்லது இரண்டு நாள்களில் சரியாகிவிடும். ஒரு வாரம் சோர்வு காணப்படலாம்.

அதைத்தாண்டி ஒரு சதவிகித மக்களுக்கு மட்டுமே 25 நாள்கள் அல்லது அதற்கும் மேல் பாதிப்பு நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்குக் காரணம் அவர்களின் உடலில் எதிர்ப்புசக்தி இல்லாததுதான். முக்கியாக இது வயதானவர்களுக்கு ஏற்படலாம். தொற்றின் தன்மை குறைவாக இருக்கும்போது ஒன்றிரண்டு நாள்களில் குணமடைந்துவிடுகிறார்கள். தொற்றின் தன்மை கடுமையாக இருந்தால் மட்டுமே பாதிப்பு நீடிக்கிறது.
ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைகிறது. அதனால், ஒருமுறை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு வேரியன்ட் பாதிக்காது என்றும் சொல்ல முடியாது.

தற்போது, காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய இரண்டாம்நிலை தொற்றான (Secondary infection) வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதில், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். ஒமிக்ரான் தொற்றிலிருந்து குணமடையும் நபர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்துவிடுவதால் சர்க்கரைநோய், அதிகப்படியான சோர்வு, பலவீனம் இவையெல்லாம் ஏற்படுகிறது. முதல் அலையின்போது தொற்று பாதித்தவர்களில் 25% பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால், ஒமிக்ரான் தொற்றில் 1 சதவிகிதம் பேர் மட்டுமே கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் நுரையீரல், இதயநோய் மற்றும் இணைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இரண்டாம் முறை கோவிட்-19 தொற்று ஏற்படும்போது மிகவும் தீவிரமாகப் பாதிப்பு ஏற்படுகிறது.
தற்போது ஒமிக்ரான் தொற்று அதிகமாகக் குறைந்திருக்கிறது என்றே சொல்லலாம். முதலில், 10 நபர்களில் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் ஒரு சதவிகிதம் பேர் மட்டுமே ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். கோவிட்-19 தொற்றைப் பொறுத்தவரை, அரசு முயன்றாலோ அல்லது ஊரடங்கு அறிவித்தாலோ இதைக் கட்டுப்படுத்த முடியாது. தனிநபர் தன்னையும் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும். தனி நபரின் ஒழுக்கமே இதைக் கட்டுப்படுத்து வதற்கான சிறந்த வழி" என்று கூறினார்.